ரணில் – அநுர கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்!

ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் தந்திரக் கூட்டணியைத் தோல்வியடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தெபரவெவ நகரில் நடைபெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமும், விரும்பிய முறையில் அரசியல் செய்யவும் சுதந்திரம் இருக்கின்றது. இங்கு உருவெடுக்கின்ற கொடிய பாசிசவாதத்துக்கும், வன்முறைக்கும், மிலேச்சத்தனத்துக்கும் மக்கள் ஆதரவு அளிக்கின்றார்களா என்று கேள்வி எழுப்புகின்றோம்.

எரிபொருள் நிவாரணம்
பொதுமக்களின் யுகத்துக்காக எந்தச் சந்தேகமும் இன்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு உந்து சக்தியைப் பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தற்போது நாட்டைத் தீ மூட்டிய குழுவும், வங்குரோத்தடையைச் செய்த குழுவுக்கு பாதுகாப்பு வழங்குகின்றவர்களும் ஒன்றாக இணைந்துள்ளார்கள். ரணிலும் அநுரவும் அரசியல் திருமணம் செய்து கொண்டு இன்று தேனிலவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த தேனிலவுக் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி விவசாயக் கடனை இரத்துச் செய்வதால் அநுரவும் ரணிலும் அதற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள்.

குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கும், வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும், எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுவதற்கும் இவர்கள் எதிராக இருக்கின்றனமையாலே தற்போது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

ரணில் – அநுர கூட்டணி
மக்கள் தொடர்ந்து அசௌகரியத்துடன் இருப்பதை ரணிலும், அநுரவும் விரும்புகின்றார்கள். வேளாண்மை விவசாயிகளையும், பால் பண்ணையாளர்களையும் பாதுகாப்பதற்கு இவர்கள் எதிராக இருக்கின்றார்கள்.

எனவே, இந்த ரணில் – அநுர ஆகியோரின் தந்திரக் கூட்டைத் தோல்வியடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுமக்களுடைய யுகத்துக்குப் பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இன, மத, குல, பேதங்களை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெற அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.

மூன்று நாட்களாகியும் ரணிலின் கேள்விக்கு பதில் வழங்காத அநுர

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாராமா அல்லது இறக்குமதி பொருளாதாரமா என்ற தனது கேள்விக்கு மூன்று நாட்களாகியும் அநுர பதிலளிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று (13.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானால் டொலர் ஒன்றின் பெறுமதி 500 ரூபாவை தொடும். கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இருந்த பொருளாதார நிலைமையை விட மோசமான நிலை உருவாகும்.

நாட்டின் பொருளாதாரம்
இந்த நாட்டின் பொருளாதாரம் மிகுந்த சிரத்தையுடன் மீள கட்டியமைக்கப்பட்டது. அதனை மீண்டும் நிலைகுலைய அனுமதிக்க முடியாது.

அவர் திருடன் இவர் திருடன் என்று கூறாமல் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் விவாதிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்திற்கு பெருந்தொகை டொலர்களை வாரி வழங்கிய ஜனாதிபதி வேட்பாளர்கள்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியில் வேட்பாளர்கள் பெருந்தொகை டொலர்களை விளம்பரங்களுக்கு செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேஸ்புக் Ad Library மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை 13 முதல் செப்டெம்பர் 10 வரையான காலப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக 49,300 டொலர்களை செலவிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசாரங்களை தடுக்க நடவடிக்கை
வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசாரங்களை தடுக்க நடவடிக்கை
பேஸ்புக் விளம்பரம்
ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும், அவரை விளம்பரப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள Join Ranil என்ற பேஸ்புக் பக்கத்திற்கு செலவிடப்பட்ட தொகை 38,400 டொலர்களை அண்மித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஏறக்குறைய மூன்று மாத காலப்பகுதியில் 90,000 டொலர்களும் இலங்கையின் ரூபா பெறுமதியில் 27 மில்லியன் ரூபாவாகும்.

இந்தத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை விட இந்தத் தொகை அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பட்டியலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாமிடத்தில் உள்ளார்.

அமெரிக்க டொலர்
இந்தக் காலப்பகுதியில் அவர் 48,600 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுரகுமார திஸாநாயக்க மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தக் காலப்பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக 20,400 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிதிகள் அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்திற்கு முழுவதுமாக டொலர்களில் செலுத்தப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

கலபொட அத்தே ஞானசார தேரரால் பலவந்தமாக கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கொழும்பு பம்பலப்பிட்டியவில் அமைந்துள்ள 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டையும் சொத்துக்களையும் உடனடியாக விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை உடனடியாக விடுவிக்குமாறு ஞானசார தேரர் மற்றும் பிரதிவாதிகள் இருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்திற்கு பெருந்தொகை டொலர்களை வாரி வழங்கிய ஜனாதிபதி வேட்பாளர்கள்
பேஸ்புக் நிறுவனத்திற்கு பெருந்தொகை டொலர்களை வாரி வழங்கிய ஜனாதிபதி வேட்பாளர்கள்
வழக்கின் பிரதிவாதிகள்
பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள இந்த வீடு தனது 82 வயதான உறவினரான சுமித்ரா சேனாநாயக்கவினால் தமக்கு வழங்கப்பட்டதாக ஏக்கல பிரதேசத்தைச் சேர்ந்த இனோகா சந்திமா சேனாநாயக்க என்பவர் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக ராஜகிரிய சிறி சதர்ம ராஜித விகாரையைச் சேர்ந்த கலபொட அத்தே ஞானசார தேரர், ஞானசார தேரரின் உதவியாளர் என்று நம்பப்படும் தயாசீஹ தேரர் மற்றும் சில்வெஸ்டர் என்ற ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

Posted in Uncategorized

தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் படித்த முட்டாள்களுக்கு பாடம் புகட்டுவோம் – க.வி.விக்னேஸ்வரன்!

தமிழகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே சென்று சங்கு சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை – சுப்பர்மடம் பொது மண்டபத்தில் நேற்று (13) வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு இரா.மயூதரன் தலைமையில் இடம்பெற்ற நமக்காக நாம் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
சுப்பர்மடம் கடற்றொழிலாளர்களுடன் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்காக சங்குச் சின்னத்தில் வாக்களிக்க கோரி இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரணியேஸ் மரியாம்பிள்ளை, புலம்பெயர் செயற்பாட்டாளர் பீற்றர், சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூ.சங்க நிர்வாகிகள் மற்றும் அவ்வூர் மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு இருதய சத்திரசிகிச்சை பொருந்துமா அல்லது Stent என்னும் உறைகுழாய் பொருத்தப்படுதல்  பொருந்துமா  என்று  மருத்துவர்கள்  ஆராய்ந்து  கொண்டிருக்கும் இந்தச்  சந்தர்ப்பத்தில்  இங்கு  உங்களுடன்  இணைந்து  பொது  வேட்பாளரை ஆதரிக்கும்  கூட்டத்தில்  பங்கு  பற்ற  வந்திருக்கின்றேன்  என்றால்  எந்த  அளவுக்கு பொது  வேட்பாளருக்கு  மக்களின்  ஏகோபித்த  ஆதரவு  கிடைக்க  வேண்டும்  என்று ஆவலாய் இருக்கின்றேன் என்பது உங்களுக்குப் புரியவரும்.
எமது  வடகிழக்கு  மாகாணங்கள்  பறிபோய்க்  கொண்டிருக்கின்றன. இது  உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? நேற்று எனக்குக் கிடைத்த ஆய்வு விபரங்களின் படி (இன்று அவை பத்திரிகைகளிலும் வந்துள்ளன)  திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறும் காணி ஆக்கிரமிப்பின் காரணமாக தற்போது அம் மாவட்ட சனத்தொகையில் 27 சதவிகிதமானோர் சிங்கள மக்கள் என்றும் அம் மாவட்டத்தின் மொத்த  நில  விஸ்தீரணத்தில் 36 சதவிகிதத்தை அம் மக்கள்  தம்  கைவசம் வைத்துள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையைத்  தந்துள்ளவர்கள் கலிபோர்ணியாவில்  இருந்து  கடமையாற்றும்  ஓக்லண்ட்  நிறுவனத்தார்.
அவர்களின் ஆய்வாளர்கள்  இங்கு  வந்து  நிலைமையை  அறிந்தே  தமது  ஆய்வறிக்கையைத் தந்துள்ளார்கள். இதைவிட  மிகவும்  ஆபத்தான  ஒரு  விடயம்  வெளியிடப்பட்டுள்ளது.
வடமாகாணத்தையும்  கிழக்கு  மாகாணத்தையும்  இணைக்கும்  திருகோணமலையின் குச்சவெளிப்  பிரதேசம்  கடந்த  பத்து  ஆண்டுகளில்  மிக  மோசமான  மாற்றங்களைச் சந்தித்துள்ளது  என்றும்  அப்பிரதேசத்தின்  50  சதவீத  நிலங்கள்,  அதாவது  41,164 ஏக்கர் காணிகள், பல அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் பௌத்த கோயில்களைக் கட்டுவதற்காகவும்  அரசாங்க  திணைக்களங்களால்  கையேற்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த மக்கள் விரட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 3887 ஏக்கர் கையேற்க்கப்பட்ட  காணிகளில்  26  பௌத்த  விகாரைகள்  கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன்  இவ்வாறான  மிகவும்  செழிப்பான  காணிகளிலும்  கரையோரப் பிரதேசங்களிலும்  இருந்து  வந்த  தமிழ்  மற்றும்  முஸ்லீம்  மக்கள்  தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. விரட்டப்பட்ட மக்கள் தமது  காணிகளுக்குப்  போக  முடியாதபடி  இராணுவம்  அங்கு  நிலை கொண்டிருக்கின்றது  என்றும்  கூறப்பட்டுள்ளது.  இராணுவத்தினரின்  நாடு  பூராகவும் உள்ள  பிரதேச  செயலகங்கள்  ஏழில்  5  செயலகங்கள்  வடக்கு  கிழக்கில் குடிகொண்டிருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
இது நடைபெறுவது இன்றைய ஜனாதிபதி பதவி வகிக்கும் காலகட்டத்தில் என்பதை நாங்கள் மறக்கக்கூடாது. பௌத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் கட்ட வேண்டும் என்று  தீர்மானம்  கொண்டு  வந்தவர்  சஜித்  பிரேமதாச  அவர்கள்.  சேர்ந்திருந்த வடமாகாணத்தையும்  கிழக்கு  மாகாணத்தையும்  நீதிமன்றம்  மூலம்  பிரிக்க நடவடிக்கை  எடுத்தவர்  அனுரகுமார  அவர்கள்.  மூவருமே  ஒரே  குட்டையில்  ஊறிய மட்டைகள்.
நாமல்  பற்றிக்  கூறவே  தேவையில்லை.  ராபக்சக்களின் மோசமான  இனவாத  தோற்றத்திற்கு  அவர்  மெருகூட்டி  வருகின்றார்.  எந்த  சிங்கள வேட்பாளர்  வந்தாலும்  வடக்குக்  கிழக்கின்  நிலங்கள்  கையேற்கப்படுவதுடன் அவற்றின்  தொடர்ச்சி  துண்டிக்கப்படுவதும்,  அங்கு  சிங்களக்  குடியேற்றங்கள் தொடர்ந்து  நடைமுறைப்படுத்தப்படுவதும்  பௌத்த  கோவில்கள்  கட்டப்படுவதும் ஓயாமல்  நடக்கப்  போகின்றன.  எமது  இளைஞர்கள்,  படித்தவர்களும்  பாமரர்களும், நாளாந்தம்  வெளிநாடுகளுக்கு  செல்ல  ஆயத்தமாகி  வருகின்றார்கள்.  எமது சனத்தொகை  இதனால்  குறையப்  போகின்றது.  ஆகவே  சிங்கள  வேட்பாளர் ஒருவருக்கு  எம்  மக்கள்  வாக்களிப்பது  இவ்வாறான  தமிழர்  எதிர்ப்பு  செயல்களை முடக்கி விடப்போகின்றது என்பதில் சந்தேகமில்லை.
இதனால்த்தான்  எமது  தமிழ்  வேட்பாளருக்கு  உங்கள்  மேன்மையான  வாக்குகளை அளியுங்கள்  என்று  கேட்கின்றோம்.  அவரால்  இவ்வாறான  காணி  ஆக்கிரமிப்புகளை நிறுத்த  முடியுமா  என்று  கேட்பீர்கள்.  முடியும்  என்பது  எனது  பதில்.  எமது  மக்கள் ஒன்றிணைந்து  தமது  தனித்துவத்தைக்  காட்டும்  வண்ணம்  தமிழ்  பொது வேட்பாளருக்கு  வாக்களித்தால்,  ஆறு  இலட்சத்துக்கு  மேல்  எமது  மக்களின் வாக்குகள் பதியப்பட்டால், நாம் உலக அரங்கிலே எமது தனித்துவத்தையும் எமக்கு நேர்ந்த  கதியையும்  தற்போது  எமக்கெதிராக  நடக்கும்  நடவடிக்கைகளையும் கோடிட்டு  சொல்லமுடியும்.  எமது  பொது  வேட்பாளரும்  அவருடன்  சேர்ந்தவர்களும் உலகநாடுகளிலே மற்றும் ஐக்கிய நாடுகளிலே தற்போதைய அவலங்கள் பற்றியும், தொடர்ந்து  வந்த  சிங்கள  அரசாங்கங்கள்  எமக்கு  செய்து  வரும்  அநியாயங்கள் பற்றியும் கூற முடியும்.
நான் 2018ல் புதிய கட்சியைத் தொடங்கிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக வர வேண்டும்  என்ற  எண்ணம்  எனக்கு  இருக்கவில்லை.  2020ல்  எனக்கு  81  வயது ஆகியிருந்தது.  எனினும்  உலக  நாடுகளில்  உள்ள  அரச  அலுவலர்களிடம் இணையத்  தொடர்புகள்  மூலம்  எமது  நிலை  பற்றிக்  கூறி,  எம்  மக்களுக்கான சேவைகளைச்  செய்து  கொண்டு  போக  முடியும்  என்று  நினைத்திருந்தேன். அப்பொழுது  எனது  நண்பர்கள்  ஒன்றைக்  கூறினார்கள்.  நீங்கள்  நீதியரசராக இருந்திருக்கலாம்.  முதலமைச்சராக  இருந்திருக்கலாம்.  ஆனால்  வெளிநாட்டு  அரச அதிகாரிகளுடன்  பேசும்  போது  இப்பொழுது  நீங்கள்  யார்  என்று  கேட்பார்கள். நீங்கள்  பாராளுமன்ற  உறுப்பினர்  என்று  கூறும் போது  மக்களின் பிரதிநிதி  நீங்கள் என்ற  ரீதியில்  உங்கள்  கூற்றுக்களுக்கு  வலு  இருக்கும்  என்றார்கள்.  ஆகவேதான் நானும் தேர்தலில் போட்டியிட்டேன்.
அதேபோல்த்தான்  திரு.அரியநேத்திரன்  அவர்களுக்கு  எமது  மக்கள்  வெகுவாக வாக்களித்தால் அந்த வாக்குகளுக்கு ஒரு மதிப்புண்டு; மாண்புண்டு! அதை வைத்து அவரை  தமிழ்  மக்களின்  ஒரு  அடையாளமாகக்  காட்டி  எமக்கு  நடந்து  வரும் அநியாயங்கள் பற்றி நாடுகளுக்குக் கூறி இலங்கை அரசாங்கம் எமக்கு தொடர்ந்தும் இன்னல்களை  விளைவிப்பதைத்  தடுக்கலாம்.  தற்போது  வெளிநாடுகள்  எமது அரசாங்கத்திற்கு  எதிராக  பல  குற்றச்சாட்டுக்களை  சுமத்தி  வருகின்றன.  ஐக்கிய நாடுகளின்  அறிக்கைகள்  இலங்கையை  சரிவர  எடை  போடுவதாகவே அமைக்கப்பட்டு  வருகின்றன.  இந்நிலையில்  தமிழ்  மக்கள்  ஒருமித்து  தமது ஒற்றுமையை,  தேசியத்தை,  ஒருங்கிணைந்த  குறிக்கோள்களை  இந்த  ஜனாதிபதித் தேர்தலில்  வெளிப்படுத்தியுள்ளார்கள்  என்ற  செய்தி  எமது  அரசாங்கத்தை விழித்தெழச் செய்யும். அதனால்த்தான் எமது தமிழ் பொது வேட்பாளருக்கு நீங்கள் உங்கள் வாக்கினை அளிக்க வேண்டும் என்று தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது  ஒற்றுமை  ஒன்றே  எம்மை  இரட்சிக்கும்.  எமது  ஒற்றுமையைச்  சிதைக்கும் வகையில்  படித்த  முட்டாள்கள்  சிலர்  நடந்து  வருகின்றார்கள்.  சிலர்  சிங்கள வேட்பாளர்களுடன்  கைகோர்க்க  வேண்டும்  என்கின்றார்கள்.  மற்றும்  சிலர் தேர்தலைப்  பகிஸ்கரிக்கக்  கோருகின்றார்கள்.  சிங்கள  வேட்பாளர்களுடன் கைகோர்ப்பது  குறித்த  அரசியல்வாதிகளுக்கு  அமைச்சர்  பதவிகளை  வழங்க இடமளிக்கலாம்.  அதனால்  தமிழ்ப்  பேசும்  மக்களுக்கு  என்ன  இலாபம்?  நல்லாட்சி அரசாங்கத்தை  ஆதரித்து  இந்தா  தீர்வு  வருகின்றது.  அந்தா  தீர்வு  வருகின்றது என்று  திரு.சம்பந்தன்  அவர்கள்  நம்பிக்கையுடன்  கூறிவந்தார்.  ஆனால்  தீர்வு வந்ததா?  அவருக்கு  எதிர்க்கட்சித்  தலைவர்  பதவியும்  உத்தியோகபூர்வ வாஸஸ்தலமும் கிடைத்தன. தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. எனவே பெரும்பான்மையின வேட்பாளர்களை ஆதரிப்பது தமிழ்ப்பேசும் அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட நன்மைகளைத் தரும். ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது.
பகிஸ்கரிப்பவர்கள் ஏன் நாம் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கேள்வியைத் தம்மைத் தாமே  கேட்க  வேண்டும்.  புலிகள்  முன்னர்  பகிஸ்கரித்தார்கள்  ஆகவே  நாமும் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் சூழலையும் கால கட்டத்தையும் மறந்து பேசுகின்றார்கள்.  அன்று  புலிகளுக்குப்  பலம்  இருந்தது.  அன்று  மலையக மக்களுக்கு  அவர்களின்  அரசியல்  போராட்டங்களின்  போது  தொழிற்சங்க  பலம்
இருந்தது.  இன்று  இவர்களுக்கு  என்ன  பலம்  இருக்கின்றது?  இவர்கள் பகிஸ்கரித்தால்  அது  யாருக்கு  நன்மை?  எவருக்கும்  இல்லை.  யாருக்குப்  பாதிப்பு? எவருக்கும்  இல்லை.  சிங்கள  வேட்பாளர்களுக்கு  வாக்களிக்க  வேண்டாம்  என்று தொடங்கிய  இந்த  பகிஸ்கரிப்பாளர்கள்  இப்பொழுது  தமிழ்  வேட்பாளரையும் பகிஸ்கரியுங்கள்  என்கின்றார்கள்.  ஏன்  என்றால்  திரு.அரியநேத்திரன்  அவர்கள் சிங்கள  வேட்பாளர்களுடன்  கூட்டுச்  சேர்ந்துள்ளார்  என்ற  அப்பட்டமான  பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.  திரு.அரியநேத்திரன்  அவர்கள்  தனது  கட்சியுடன் முரண்டே  பொது  வேட்பாளராக  நிற்கின்றார்.  அவர்  தமது  வருங்கால  அரசியல் வாழ்க்கையைத்  தியாகம்  செய்தே  பொது  வேட்பாளராக  நிற்கின்றார்.  இந்தத் தேர்தலில்  அவருக்கு  தனிப்பட்ட  ரீதியில்  எந்த  நன்மையும்  கிடையாது.  அவர் தேர்தலில்  வெல்லப்  போவதும்  இல்லை.  அப்பேர்ப்பட்ட  ஒருவரை  இழிவாகப்  பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி இந்த பகிஸ்கரிப்பாளர்கள் தங்களை தமிழ் மக்கள் மனதில் தாழ்த்தியே வருகின்றார்கள்.
அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் இம் மாதம் 21ந் திகதியன்று  காலையிலேயே  நேரத்துடன்  வாக்குச்  சாவடிகளுக்குச்  சென்று  சங்கு சின்னத்திற்கு  வாக்களிக்க  வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Posted in Uncategorized

தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு!

இலங்கைத்தீவில் 21 செப்டம்பர் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் பிரித்தானியவுக்கான கிளையானது (ITAK UK(Forum)) தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய கிளை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மேற்படி விடையம் சார்பாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளையானது மாதாந்த கூட்டங்களில் பல தடவை விவாதித்தது. அக்கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பான்மையினருடைய வேண்டுகோளுக்கும், விருப்பிற்கும் இணங்க, 26 மே 2024 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
எனினும் தாயகத்தில் தாய் கட்சியின் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படாமையினால், தொடர்ந்தும் இந்த விவகாரம் எமது மாதாந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தமிழரசு கட்சியின் மத்திய குழு, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்ட நிலையிலும், கட்சியின் மாவட்டக் கிளைகளுக்கு இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகளும், ஆதரவும், எதிர்ப்பும் என்ற நிலை தோன்றியிருந்த நிலையில் தாயகத்தில் உள்ள தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைகள் பெரும்பாலானவை மத்திய குழுவின் முடிவை நிராகரித்து, மீறி தமிழ் பொது வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இந்நிலையில் தாயக மக்களுடைய பெரும்பான்மையினருடைய விருப்பினை கருத்தில் கொண்டும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற பெரும்பான்மை மக்களுடைய விருப்பினையும் கருத்தில் கொண்டும், இந்த விடயத்தை அறிவியல் பூர்வமாகவும், அரசியல் ராஜதந்திர நடைமுறைக்கு ஊடாகவும். தத்துவார்த்த ரீதியிலும் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் தேசிய இனம் தனது அனைத்து வகையான தேசியக் கட்டுமானங்களையும் இழந்து, தமிழ்த் தேசியம் சிதைந்து சீரழிவுக்கு உட்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியம் பேசுவோர் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டிருக்கும் நிலையில், தமிழ் மக்களை ஒன்று திரட்டி ஒரு தேசியதிரட்சி பெற வைப்பதற்கான ஒரு நடைமுறையான செயல் திட்டம் ஜனாதிபதித் தேர்தல் என்ற வடிவில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த அரிய வாய்ப்பை தமிழ் மக்கள் தமது தேசிய கட்டுமானங்களை மீள்கட்டுவதற்கும், பிரிந்து போய் இருக்கின்ற கட்சிகளையும், மக்களையும் இணைப்பதற்கும், தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்குமாக, மக்கள் பேரவா கொண்டுள்ளனர் என்பதை வெளிக்காட்டுவதற்காகவும், தமிழ் தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமையை மீட்டெடுப்பதற்கு தொடர்ந்து போராடும் என்பதை வலியுறுத்தி பறைசாற்றுவதற்கும், தமிழ் மக்களின் தேசிய இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய செயல்முறை என்ற அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி, தமிழ் மக்களை அவருக்கு வாக்களிக்க வைத்து, தேசியத்தை மீள் உறுதிப்படுத்துதல் என்ற அடிப்படையிலும், தமிழ் மக்கள் பொதுக் கட்டமைப்பு நிறுத்தியுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு எமது முழுமையான ஆதரவை தெரிவிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஐ. இராச்சிய கிளையானது, ஏற்கனவே தனது 26மே 2024 மாதாந்த பொது கூட்டத்தில் எடுத்த முடிவான தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தல் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஏற்கனவே தாயகத்தின் தாய் கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு( ITAK HO 30 Martyn Jaffna Sri Lanka) அறிவித்துள்ளோம். இப்போது அந்த முடிவை ஊடக வாயிலாக எம்மின மக்களுக்கு அறியத் தருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவின் போது கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் செல்லுபடியாகும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிக்கும்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தபால்மூல வாக்களிப்பின் போது கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதித்தமையினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஏகமனதாக எடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி தீர்மானம் : சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு!

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களையும் பரிசீலித்து ஒப்பீட்டு ரீதியிலேதான் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கலாம் என்ற முடிவிற்கு நாங்கள் வந்திருக்கின்றோம் என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியினுடைய நிலைப்பாடு தொடர்பில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பானது மிகவும் சுமூகமான நிலையிலே இடம்பெற்றது. இதன்போது கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் கூட சஜித்தை ஆதரிப்பது தொடர்பான தீர்மானத்தை மாற்றியமைப்பதோ அல்லது இரத்துச் செய்வதோ என்ற கருத்து எங்களிடையே பகிரப்படவில்லை.

ஆகவே அதனடிப்படையில் அதற்கு பாதகம் இல்லாமல் நாங்கள் எமது கட்சியினுடைய நிலைப்பாட்டை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

அந்தவகையில் இவ்வார இறுதியில் குறித்த உபகுழு கூட இருக்கின்றது. இதில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் கடந்த 01ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஒட்டியதாகவே இருக்கும்.

எனினும், வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையிலேதான் ஒப்பீட்டு ரீதியில் அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் எங்களுக்கு சாதகமாக இருந்தது.

இதில் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களையும் குறிப்பாக சஜித் பிரேமதாச தெரிவித்த பகிரங்க கருத்துக்களையும் உள்ளடக்கியதாவே எமது நிலைப்பாடு இருந்தது. எனவேதான் சஜித்தை ஆதரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மூவரை தாக்கிய குற்றச்சாட்டிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பகிஸ்கரிப்பும் ஒருவகை டீல் அரசியல் தான் – சபா குகதாஸ்!

தேர்தல் பகிஸ்கரிப்பு என்பது மிக முட்டாள் தனமான முடிவு.  ஜனநாயக பலத்தைப் பேரம் பேசுவதற்கு ஒவ்வொரு தேர்தல்களையும் காலத்திற்கு ஏற்ற களநிலைமைகளை அடிப்படையாக கொண்டு கையாள வேண்டும் அதுவே இராஜதந்திரம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
செப் 21 ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளரின் சின்னமான சங்குக்கு நேரே புள்ளடி இட்டு தமிழ் மக்களின் ஒற்றுமை நிலைப்பாட்டையும் தென்னிலங்கையின் பிரதான சிங்கள் வேட்பாளர்கள் 50% வாக்குகளை பெற்றுக் கொள்ள விடாது தடுப்தற்கும் அனைவரையும் வாக்குச் சாவடிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இம்முறை தென்னிலங்கை தேர்தல் களம் கடந்த காலங்களை விட முற்றாக மாறுபட்டதாக முன்முனைப் போட்டி கொண்டதாக மாறியுள்ளது இதனால் பிரதான போட்டியாளர் 50% வாக்குகளைப் பெற திணறடிக்கும் சூழலில் தேர்தல் புறக்கணிப்பு அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் இதனை தடுக்க வடகிழக்கு மக்கள் வாக்களிப்பில் ஈடுபட வேண்டும்.
அத்துடன் சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் இதுவே தமிழினத்திற்கான பேரப்பலத்தை உருவாக்கும் மாறாக பகிஸ்கரிப்பில் ஈடுபட்டால் தமிழர்களுக்கு எதிரான சிங்கள தலைவர்  அதிகாரக் கதிரையில் அமர்வதற்கும் தமிழரின்  ஜனநாயகப் பலம் பலவீனப்படுத்துவதற்கும் தமிழர்களாகிய நாமே வழிவிட்டதாக அமைந்துவிடும்.
எனவே பகிஸ்கரிப்பை தவிர்ப்போம் வாக்களிப்பில் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Posted in Uncategorized