விவாதத்திற்கு அழைத்த அநுரவிற்கு ரணிலின் பதிலடி

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நான் விவாதத்திற்கு வரும் முன்னர் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாராமா இறக்குமதி பொருளாதாராமா என்பதை தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற வர்த்தகர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“அநுரகுமார திஸாநாயக்காவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை இரத்து செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் சூரியபெரும ஆகியோர் தங்களுக்குள் விவாதமொன்றை நடத்தி முதலில் அவர்களின் பொருளாதாரக் கொள்கையை தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு உங்கள் பொருளாதாரக் கொள்கையை நீங்கள் அறிவித்ததன் பின்னர் நானும் நீங்களும் இணைந்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் கலந்துரையாடுவோம்.

வேண்டும் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் நாம் விவாதத்திற்கு அழைப்போம்.

ஆனால், அதில் எனக்கு ஒரு பயம் உள்ளது. அவர் பேசினால் இரண்டு மணி நேரங்களிற்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எனக்கு வேறு வேலை உள்ளது என சென்று விடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கூட்டுத்தலைமையை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர். எனவே, பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள் என இரானியேல் செல்வின் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,”சிங்கள தலைவர்களையும், கட்சிகளையும் நாம் ஒரு தரப்பினராகவே பார்க்க வேண்டும். அத்துடன், தமிழ் மக்கள் அனைவரும் ஒரு தரப்பினராக இணைய வேண்டும்.

இவ்வாறு ஒன்றிணைந்து, பலமுள்ள மக்களாக நாம் பேசுவோம். அடிமைத்தனம் என்று எங்கள் மனங்களில் ஊறிப் போயுள்ள விடயங்களை உடைத்தெறிவோம்” என வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தமிழ் மக்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளருக்கு வாக்களிப்போம் என கூறினார்.

தமிழீழ கனவு நனவாக ஒருபோதும் இடமளியேன் : நாமல் பகிரங்கம்

வடக்கு, கிழக்கை இணைக்கவும் தமிழீழக் கனவு நனவாகவும் ஒருபோதும் இடமளியேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவிசாவளையில் நேற்றையதினம் (11.09.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நாம் ஒற்றையாட்சியைப் பாதுகாப்போம். மாகாண சபைகளுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டோம்.

முதலீடு என்ற போர்வையில் தேசிய வளங்களை விற்பனை செய்யும் சூழ்ச்சி நடவடிக்கைக்கும் இடமளிக்கமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவின் பிரசார கூட்டத்தின் மீது கல் வீச்சு!

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவிருந்த பிரசார கூட்டத்தின் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை சிறிபோபுர பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கல் வீச்சு தாக்குதல்களில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான்.

அரகலயவின் போது சஜித் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து அம்பலப்படுத்திய அநுர தரப்பு
அரகலயவின் போது சஜித் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து அம்பலப்படுத்திய அநுர தரப்பு
அம்பாந்தோட்டை வைத்தியசாலை
காயமடைந்த சிறுவன் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பிரசார கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷிராந்தி ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.

கல் வீச்சுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஷிராந்தி ராஜபக்ச, காயமடைந்த சிறுவனை பார்வையிட அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

மட்டக்களப்பில் சிறீதரன் தலைமையில் முக்கிய மந்திராலோசனை!

தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான முக்கிய மந்திராலோசனை ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மூத்த போராளி யோகன் பாதரின் இல்லத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியான கருத்துக்களைத் தெரிவித்ததால் கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மூத்த போராளி காக்கா அண்ணன், ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்துவதன் தேவையையும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கும் தேவையையும் வலியறுத்தியதுடன், தனது கருத்துக்களைத் தெரிவித்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

இதுபோன்ற கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான ஆதரவை அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டதாக கலந்துரையாடலின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக முக்கியத்துவம்
மட்டக்களப்பில் சுமந்திரன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் ஆகியோர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்துள்ள நிலையில் இக் கலந்துரையாடல் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விடயம் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், கோடீஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருன் தம்பிமுத்து, மூத்த போராளி யோகன் பாதர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராஜன் மற்றும் மூத்த போராளி காக்கா அண்ணன் ஆகியோருடன் மற்றும் பல முன்னாள் போராளிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் சில தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களும் அருண் தம்பிமுத்து தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி முக்கியஸ்தர்களும் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

Posted in Uncategorized

தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல – நிரோஷ் தெரிவிப்பு

தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. மாறாக, இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்கள் வரலாற்று ரீதியில் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கானது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து நேற்று (10) மாலை வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியம் இன்று பலவாறாக அகத் துண்டாடலுக்கு உட்பட்டு வருகிறது. இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கும் ஆட்சியில் அமர்பவர்களுடன் பேசுவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கான நிலைமைகளை பலமிழக்கச் செய்துவிடுமோ என்ற நியாயபூர்வமான அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. அந்த அச்சத்தில் நியாயபூர்வமான யதார்த்தம் உள்ளது.
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இனமான நாம் எமது அரசியல் அபிலாசைகளை சாதாரண ஜனநாயக உரிமைகளுடன் மட்டும் மட்டுப்படுத்திவிடமுடியாது.
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தளவு தூரம் ஆட்சியில் அமரக்கூடிய ஒருவருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சிலர் அல்லும் பகலும் அறை போட்டு சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர்.
அவர்கள் இந்த நாட்டில் வெல்லக்கூடிய ஒருவரை தேடிப்பிடித்து சலுகைகளைப் பெற்று பெற்று சகித்து வாழ்வோம் என்ற மனநிலையில் இனத்தினை அடைமானம் வைக்கின்றனர்.
நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையான எண்ணிக்கையில் வாழ்கின்றனர் என்பதற்காக எண்ணிக்கையில் குறைந்த அளவுடைய நாட்டின் தேசிய இனமான தமிழ் இனம் இன உரிமைகளை விற்று வாழ முடியாது. சிங்கள பேரினவாதிகளுக்கு நோகக்கூடாது என்று வாழ்பவர்கள் எம்மிடத்தில் அதிகரித்துவிட்டனர். மக்களின் இட்சியத்தினையும் தியாகத்தினையும் விற்றுப் பிழைப்பதில் முண்டியடிக்கின்றனர்.
மண்ணுக்காக எத்தனையோ தியாகங்களை எம் இனம் மேற்கொண்டிருக்கிறது. அடிப்படையில், எமது மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை வலியுறுத்தியும், எமக்கு சமஸ்டி அடிப்படையிலான உலகம் ஏற்றுக்கொண்ட அரசியல் தீர்வினை முன்வைக்கக் கோரியும் நாம் பொது வேட்பாளரை முன்நிறுத்திச் செயற்படுவது நியாயபூர்வமாகச் சிந்திக்கும் எந்தவொரு சிங்களப் பிரஜைக்கும் எதிரான செயற்றிட்டம் கிடையாது. சிங்கள முற்போக்கு சக்திகளும் சொந்த தாய்நாட்டில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் கருத்து வெளிப்பாட்டு உரிமைக்கும் ஜனநாயக உரிமைக்கும் மதிப்பளித்து வாக்களிக்க முடியும்.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் எமது அரசியல் அபிலாசைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இன்றும் உள்ள நிலையில் ஒருமித்து தமிழ் பொது வேட்பாளரின் சின்னமான சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கடமையினை நிறைவேற்றுவோம் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
Posted in Uncategorized

இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச ஆதரவை வரவேற்ற அமெரிக்கா

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீண்டகாலமாக தண்டனை வழங்கப்படுவதில்லை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி, தூதுவர் மிக்கேல் டெய்லர், இதனை ஜெனீவாவில் கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பணியை அமெரிக்கா பாராட்டுவதாகவும், பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதியை மேம்படுத்துவதற்கான சர்வதேச ஆதரவை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஊழலுக்கு எதிரான மற்றும் நீண்டகால நிலையான வளர்ச்சியில் அதிக வெளிப்படைத்தன்மையை ஒருங்கிணைக்க அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நில அபகரிப்புகளை நிறுத்தவும், நில ஒப்பந்தங்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் அமெரிக்கா, இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

நடந்து வரும் சித்திரவதைகள் பற்றிய உயர்ஸ்தானிகரின் அறிக்கையால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது

இந்தநிலையில், சித்திரவதைகளுக்குத் தீர்வு காணவும், அதற்குப் பொறுப்பானவர்களை தண்டிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்துகிறது மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நீண்டகாலமாக தண்டனை விதிக்கப்படாமல் இருப்பது நல்லிணக்கத்திற்கு தடையாக உள்ளது.

எனவே அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்கு உகந்த சூழலை வளர்க்கும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா அழைப்பு விடுப்பதாக தூதர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்களிப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக, இலங்கைக்கு திரும்ப முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) கவலை வெளியிட்டுள்ளார்.

பல இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தேர்தலுக்கு வர ஆர்வமாக உள்ளனர்.

எனினும் காலாவதியான கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை புதுப்பிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக விஜித ஹேரத், செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களித்தால், தமக்கு பாதகம் என்பதால், இந்த விடயங்கள் தீவிரமடைய அரசாங்கம் வேண்டுமென்றே அனுமதித்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு ஊழல் பேரங்களே முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

22ஆம் திகதி பதவியேற்றவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அநுர தெரிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியானவுடன் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக, ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதவிப் பிரமாணம் செய்தவுடன் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்புத்தேகமவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 21ஆம் திகதி இந்த நாட்டை எங்களிடம் ஒப்படைக்கவும். இதை ஒவ்வொன்றாக மாற்றத் தொடங்குவோம். முதலில் தேர்தல் முடிவுகள் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியாகும்.

ஒரு மணி நேரம் கூட தவறவிட மாட்டோம், உடனடியாக நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்து மிக விரைவாக நாடாளுமன்றத்தை கலைப்போம்.

ஏனென்றால், இந்தத் திருடர்கள், மோசடிக்காரர்கள், குற்றவாளிகள் இனி ஒரு நாள் கூட இந்த நாடாளுமன்றத்தில் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சஜித்தை ஆதரிப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் இருவர் எடுத்த தீர்மானம்

தமிழரசுக் கட்சிக்குள் இருவர் குரலை உயர்த்திப் பேசி, அதிகாரத் தோரணையில் தீர்மானம் மேற்கொள்ளும் போக்குதான் காணப்படுகின்றது என்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுககு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இவ்வருடம் ஜனவரியில் நடைபெற்ற தமிழரசுக் கட்சித் தலைவர் தெரிவுடன் கட்சி இரு அணிகளாக மாறிவிட்டது என்பது உண்மை. அதன் பின்னர் எந்தவொரு விடயத்திலும் ஒற்றுமையின்றி செயற்படும் போக்கினையே என்னால் அவதானிக்க முடிந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டையும் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களும் இணைந்து மேற்கொள்ளவில்லை. மாறாக ஒரு சாராரின் தன்னிச்சையான ஆதிக்கத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ, தலைவர் தேர்தலில் போட்டியிட்டு ஏற்கனவே தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறீதரனோ அந்த மத்தியக் குழுக் கூட்டத்திற்குச் செல்லவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், யோகேஷ்வரன் போன்றோரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதுபோன்று இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட முறை தவறானது என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவும் கூறியிருக்கின்றார்.

ஆகையினால் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழரசுக் எடுத்த தீர்மானமாக நான் கருதவில்லை. மாறாக அதனை கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரின் தீர்மானமாகவே பார்க்கின்றேன்.

அங்கு இருவர் குரலை உயர்த்திப் பேசி, அதிகாரத் தோரணையில் தீர்மானம் மேற்கொள்ளும் போக்கு நிலவுகின்றது. ஆகவே மக்கள் நிச்சயமாக சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized