ராஜபக்ஷ குடும்பத்தினர் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் – மொட்டு கட்சி அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் அவரது பெயர் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

எனினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத்திலும், நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களில் பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (10) பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சமசமாஜ கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் சமசமாஜக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ விதாரண மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

Posted in Uncategorized

முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்ரினன்ட் மாலதி நினைவு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தனியார் விடுதியில் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.

மாலதியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவாக தர்மபுரம் பிரதேசத்தையைச்சேர்ந்த 150 மாணவர்களுக்கு கற்றல் உபரணங்களும் வழங்கப்பட்டது.

Posted in Uncategorized

ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் பெற்றுள்ள பெருந்தொகை கடன்

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் 347 பில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார்.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணை முறிகளுக்கு கேள்வி நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய அரசாங்கமும் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கை காரணமாக இவ்வாறு கிராக்கி நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு கூடுதல் கடன் பெறுகையே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது இணக்கப்பாடு கடன் ஸ்திரத்தன்மை என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் பிணை முறிகள் மற்றும் திறைசேரி உண்டில்களை விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும். ஜனாதிபதி அநுரகுமார பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கையின் உள்நாட்டு சந்தையில் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்தக் கடன் தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்களை அரசாங்கம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் மன்னிப்புச்சபை

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், சர்வதேச விசாரணையின் தேவையை வலியுறுத்துவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பிலேயே மன்னிப்பு சபை இதனை குறிப்பிட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின்படி, இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டம் உட்பட மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணை ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதிப் பிராந்தியப் பணிப்பாளர் பாபு ராம் பந்த் கூறியுள்ளார்.

அமெரிக்காவினால் இலங்கையிடம் கையளிக்கப்பட்ட கடல் கண்காணிப்பு விமானம்
அமெரிக்காவினால் இலங்கையிடம் கையளிக்கப்பட்ட கடல் கண்காணிப்பு விமானம்
மனித உரிமைகள் பேரவை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டமையானது, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மீதான சர்வதேச விசாரணை அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.

பொறுப்புக்கூறலை ஆதரிப்பதில் ஆணை நீடிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. எனினும், உள்ளூர் சிவில் சமூகம் மற்றும் சர்வதேச அமைப்புகளால் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் இந்த ஆணை புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மாறாக, ஒரு வருடத்திற்கு மட்டுமே நீடிக்கப்பட்டது என்பது ஏமாற்றமளிப்பதாக மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த காலத்திலிருந்து விலகி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள் அலுவலகத்துடன் முழுமையாக ஈடுபடுவது மிகவும் முக்கியமானது என்றும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஜெனீவாவின் 46-1 தீர்மானத்தின்படி, இலங்கை பொறுப்புக்கூறல் திட்ட அலுவலகத்தின் ஆணைமுதன்முதலில் 2021 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

இது எதிர்கால பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்காக மொத்த மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் பாதுகாக்கவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தை கட்டாயப்படுத்தியது.

இந்தநிலையில் குறித்த ஆணை 2022 இல் 51-1 தீர்மானம் மூலம் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தான செய்தி கூறிய சம்பந்தன் மரண வீடு

தமிழரசுக்கட்சியினை பொறுத்தமட்டில் யாழ் மாவட்டத்தின் முக்கிய புள்ளிகள் பலர் சுயேட்சையாக நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளமை வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், யாழ் மாவட்டத்தில் களமிறங்கும் வேட்பாளர்களில் மக்களால் நன்கு அறியப்பட்ட சிறீதரன், சுமந்திரன் ஆகிய இருவரும் அதிக வாக்குகளை பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் சிறீதரனை தவிர்ந்த ஏனைய 9 வேட்பாளர்களும் தங்களது விருப்பு வாக்குகளை சுமந்திரனுக்கு வழங்குமாறு தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதன்மூலம் சுமந்திரன் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தனின் மரண வீட்டிற்கு வந்த மக்களின் எண்ணிக்கையை வைத்து வாக்குகளை கணக்கிட முடியுமென்றும், இது தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தான செய்தி என்றும் கூறப்படுகின்றது.

சங்கு பத்திரமாகவும் பவுத்திரமாகவுமே இருக்கிறது – யாரும் திருடவில்லை

சங்கு என்பது ஒரு சுயாதீனச்சின்னம். அதை நாம் [தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பு] முதலில் எமது தேவைக்காய் பெற்றிருந்தோம். அதன் தேவை முடிந்ததும் அந்தச்சின்னம் எம்மிடமிருந்து அகன்றுவிட்டது.

அது எங்கள் யாருக்கும் அப்போ உரிமையற்றது.

அதை தமிழ்த்தேசியத்தின் சின்னமாக்க எண்ணி அந்தச் சங்குசின்னம் எதற்காகத் தோன்றியதோ அந்த இலக்கினை அடையப் போராடிய கட்சிகளின் கூட்டணி DTNA.
அது அந்தச் சின்னத்தை வேறுயாரிடமோ, எமக்கு எதிரானவர்களின் கைகளுக்கோ போய்விடாமல் காப்பாற்றியிருக்கிறது என்று உங்களால் ஏன் சிந்திக்கமுடியவில்லை.

DTNA பொதுக்கட்டமைப்பை சீர்குவைத்திருக்கிறதா?.அதில்தானே இன்னும் இருக்கிறது. பொதுக்கட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த இலட்சியங்களை அடையும் முயற்சிக்காத்தானே
பாராளுமன்றம் செல்ல முயல்கிறது.

பொது வேட்பாளர் என்கிற சிந்நதனையே இம்முறை DTNA கூட்டணியில் இருந்துதான் சிவில் சமூகத்துக்கு கொண்டுவரப்பட்டு பலப்படுத்தப்பட்டது என்பதை மறுக்கமுடியுமா?
தவறானவர்கள் கையில் எமது சின்னமான சங்கு போய்விடக்கூடாது என்ற நல்லெண்ணமும், அதேநேரம்
எமது தேசியத்தை காப்பதற்கான முயற்சியில் மக்கள் மத்தியில் தமிழ்தேசிய சக்திகளால் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்ததாலுமே
குத்துவிளக்கு என்கிற கிடைத்தற்கரிய மங்களச்சின்னத்தை விட்டு சங்கினை தேசியத்தின் சொத்தாக்கியிருக்கிறது DTNA முடிந்தால் இதை புரிய முயலுங்கள்.

இந்த மண்ணின் விடுதலைக்காக இரத்தம் சிந்திப்போராடிய 5 பேரியக்கங்களின் கைகளில்தான் சங்கு இருக்கிறது என உரத்துச் சொல்லுங்கள்.
அதேநேரம் எமது மண்ணில் தமிழ்த்தேசியம் மறைக்கப்பட்டு இலங்கைத் தேசியத்துக்குள் எம்மினம் கரைந்து போகப்போகும் அபாயத்தைப்பற்றியும் பேசுங்கள்.

அநுரா நல்லவரா கெட்டவரா என்ற ஆய்வினை விட நாம் ஒரு தேசிய இனம் என்பதையும் அதற்காக எமது இனம் 75 வருடமாகப் போராடியது என்பதையும் அதனை முடிவுக்கு கொண்டுவர, எங்கள் உரிமையை நிலைநிறுத்த எமக்கு என்ன நம்பிக்கையை கொடுக்கிறார் என்பதையும் ஆய்ந்தறிய இளைஞர்களை வலியுறுத்துங்கள். அதற்குமுன் அவருக்குப் பின்னால் ஓடும் அவலநிலையை நிறுத்துமாறு அதிகம் பேசுங்கள்.

இருப்பவற்றுள் தமிழ்த்தேசியத்தின் மீட்சிக்காய் உறுதியோடு விடாப்பிடியாகப் போராடும் அணியான DTNA யை பலப்படுத்துங்கள்.
DTNA தமிழ்ப்பொதுக்கட்டமைப்பின் தளபதிகள் என்பதை நம்புங்கள்.
எமது தேசியச் சின்னமாக நாம் கண்டெடுத்த சங்கு பத்திரமாகவும் பவுத்திரமாகவும் உங்கள் தளபதிகளிடமே இருக்கிறது தோழர்களே!

நாம் தமிழர்
நமது மொழி தமிழ்
வடக்கு கிழக்கு எமது தாயகம்.
பனையும் கடலும் எமது தேசியப் பொருளாதாரம்
இதை அடைவதே எமது இறுதி இலக்கு.

Posted in Uncategorized

தேடிவந்த சுமோ – தப்பி ஓட்டம் பிடித்த சிறி வாத்தி!

தோல்வி பயம் ஒருவனுக்குப் பிடித்து விட்டால் அவன் என்னவென்னவெல்லாம் செய்வான் என்பதற்கு இன்று ‘சுமோ’ செய்த ஒரு காரியம் நல்ல உதாரணம்.

கடந்த பொதுத்தேர்தலில் சிறி வாத்தியின் புண்னியத்தில் அரும்பொட்டில் வென்றவர்தான் ‘சுமோ’.

செய்கிற அநியாயங்களையெல்லாம் செய்து முடித்துவிட்டு இம்முறையும் புண்னியம் தேடி ‘சுமோ’ கிளிநொச்சி போய் மூக்குடைபட்ட கதை கேட்டு சிரியாய்ச் சிரிக்கின்றது தமிழரசு வட்டாரம்.

கட்சி சம்பந்தப்பட்ட ஒரு பேச்சை முடித்துக்கொண்டு சிறி வாத்தி கிளிநொச்சி வந்து கொண்டிருந்திருக்கின்றார்.

அந்தப் பேச்சுவார்த்தை முழுவதும் சிறி வாத்தி கூடவே நின்ற சுமோ, வாகனத்தில் சிறிவாத்தி பயணித்துக் கொண்டிருந்த போது அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘பத்திரத்தில் ஒரு சிறு திருத்தம் செய்யவேண்டும்… நான் கிளிநொச்சியில் வந்து உங்களைச் சந்திக்கலாமா” என்று கேட்டிருக்கின்றார்.

சிறி வாத்தியுடன் பேசியதும் பேசாததுமாக ஊடகங்களுக்கும் அறிவித்து ஊடகவியலாளர்களையும் கிளிநொச்சிக்கு அழைத்து விட்டார் சுமோ.

‘அரியும் சிவனும் ஒன்று.. அறியாதார் வாயில் மண்ணு’ என்பது போல ‘சுமோவும் சிறி வாத்தியும் ஒன்று’ என்று உலகிற்குக் காட்டும் கபட திட்டம்.

வாத்திக்கும் சுமோவின் விளையாட்டு விளங்கி, உடனே கிளிநொச்சியை விட்டு புறப்பட்டுவிட்டாராம்.

பம்மாத்துக் காண்பிக்கவந்த சுமோ, அங்கு சிறியார் இல்லாமல் தடுமாறி, வந்த கமெராக்காரர்களிடம் வழிந்து, நெளிந்து தோல்வியோடு திரும்பியிருக்கின்றார்.

இதில் கிளிநொச்சி தமிழரசுத் தம்பிகள் இன்னுமொரு சிறப்பான வேலைகளைச் செய்திருக்கின்றார்களாம்.

சுமோ கிளிநொச்சிக்கு வருவதற்கு முன்னதாகவே, கட்சி அலுவலகத்தில் இருந்த பதாதைகள், சின்னங்கள், சுவரொட்டிகள் எல்லாவற்றையும் அகற்றி விட்டார்களாம்.

வெறும் கட்டிடத்திற்கு முன்பாக நின்று போட்டோ மாத்திரம் எடுத்துவிட்டுத் திருமம்பியிருக்கின்றார் ‘சுமோ’.

தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் ‘சுமோ’ மற்றொரு தடவை கிளிநொச்சி வந்து முருங்கைமரம் ஏறுவார் என்று கூறி எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்களாம் கிளிநொச்சி தமிழரசு இளைஞர்கள்.

Posted in Uncategorized

தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி

75 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியத்தை கட்டி காப்பாற்றுவதற்காக பாடுபட்ட தமிழரசுக் கட்சி தற்போது தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமாக மாறியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோராலேயே வடக்கு மற்றும் கிழக்கு கட்சிகள் தற்போது துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தலைமைத்துவத்தை மதிக்காமல் தாங்களே கட்சிகளை கையிலெடுத்து செயற்படும் ஒரு எதேட்சையான போக்கு கட்சிகளில் காணப்படுகின்றது.

சுமந்திரனின் எதேச்சதிகார தனித்துவ சிந்தனையால்தான் இன்று தமிரசுக் கட்சியானது படும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, தனிநபரின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தாத தலைமை இருந்து என்ன பயன் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Posted in Uncategorized

புதிய அரசுடன் இணைந்து செயற்பட தயார் – சி. வி விக்னேஸ்வரன் பகிரங்கம்

எமது சுயநிர்ணய உரிமைகளை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அவர்களுடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் இல்லத்தில் நேற்று புதன்கிழமை (09.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய கூட்டணி இளைஞர்களையும், அனுபவமுள்ளவர்களையும் வேட்பாளராக நியமித்துள்ளோம்.

புதிய அரசியல் யாப்பை
நான் முன்பே கூறியது போன்று தேர்தல் அரசியலிலிருந்து விலகியுள்ளேன். 2018ஆம் ஆண்டு தொடங்கிய எமது கட்சியில் யாப்பில் தன்னாட்சி , தற்சார்பு , தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை காரணங்களை முன் வைத்துள்ளோம். அதன் அடிப்படையில் தான் எமது கட்சி தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.

இம்முறை தேர்தலிலும் அதனை முன்னிறுத்தியே போட்டியிடுவோம். எங்களின் கொள்கைகளை நாங்கள் எமது கட்சியின் யாப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

அதன் அடிப்படையில் செயற்படுகிறோம். புதிய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை உருவாக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என

இதன்போது அவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார், விஸ்வலிங்கம் மணிவண்ணன், வரதராஜன் பார்த்தீபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தம் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி, மிதிலைச்செல்வி ஶ்ரீ பத்மநாதன் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சூழ்ச்சிகளால் உடைந்த தமிழரசு கட்சி : சுயேட்சையாக களமிறங்கும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள்!

திட்டமிடப்பட்ட தனிநபர் அராஜகத்திற்கு எதிராக போரிடுவதன் அடையாளமாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் அரசு கட்சி என்ற பெயரில் சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியை உடைப்பதற்காக திட்டமிடப்பட்டு உள்ளே அனுப்பப்பட்ட நபர் வெற்றிகரமாக கூட்டமைப்பை உடைத்து, பின்பு தமிழரசுக் கட்சியையும் கைப்பற்றி விண்ணப்பம் கூட அனுப்பாதவர்களை வேட்பாளராக நியமித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, அக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சியை அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்
இதற்கமைய, 7 உறுப்பினர்களை கொண்ட குழு ஜனநாயக தமிழ் அரசு கட்சி என்ற பெயரில் சுயேட்சையாக களமிறங்கவுள்ளது.

அந்தவகையில், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், பொ.ஐங்கரநேசன், தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்களான விமலேஸ்வரி மற்றும் நாகரஞ்சினி, கரவெட்டி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் த.ஐங்கரன், புதிய சுதந்திரன் ஆசிரியர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, ஊர்காவற்துறை பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.

அதேவேளை, தமிழரசுக் கட்சியை பேரினவாத ஊடுறுவலில் இருந்து காப்பாற்றி மீட்டெடுக்க அனைத்து தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களும் தங்களோடு ஒன்றிணைய வேண்டும் என மேற்படி தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.