சமூகத்தில் பாரிய பிரச்சினையாக மாறி வரும் மாணவர்களின் மனநல பாதிப்பு

தற்போதுள்ள கல்வி முறை, மற்றும் போட்டி உட்பட்ட சூழ்நிலைகள் காரணமாக பாடசாலை மாணவர்களின் மனநலம் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே, மாணவர்களின் மன ஆரோக்கியத்தில் தலையிட்டு, அவர்களை பாதுகாப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து தீர்வை முன்வைக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தவறான முடிவுகள், அதற்கான முயற்சிகள் மற்றும் சுய தீங்கு போன்ற சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன, இந்த நிகழ்வுகள் தினசரி அறிக்கையிடப்படுகின்றன.

இதனை மையப்படுத்தி பாடசாலைகளையோ, ஆசிரியர்களையோ, பெற்றோரையோ குறை கூறுவது சரியானதல்ல.

குற்றங்களைச் சுமத்துவதற்குப் பதிலாக, குழந்தைகளை இத்தகைய மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் அடிப்படைக் காரணங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அதேவேளை, குழந்தைகளைப் பாதிக்கும் தற்போதைய மனநலப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மட்டும் முழுப் பொறுப்பேற்க முடியாது.

அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களும் கூட்டாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பங்களிக்க வேண்டும்” என ஹரிணி சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச முத்திரைகள் குறித்து தபால் திணைக்களம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இலவச முத்திரை
இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இலவச முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இம்முத்திரைகளை பயன்படுத்துவதற்கு தடை என்று தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த முத்திரைகளை செல்லுபடியற்றவையாக கருதப்பட வேண்டுமெனவும் நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொது தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மீள் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Posted in Uncategorized

கொழும்பிலுள்ள வீட்டிலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்!

கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான வீட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர வௌியேறியுள்ளார்.

குறித்த உத்தியோகபூர்வ இல்லம் சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் கல்லூரிக்கு கையளிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும்.

அரசாங்கத்திற்கு சொந்தமான இல்லத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் கல்லூரிக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை அனுமதி
அதற்கான பிரேரணையை தாமே கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை பாடசாலையின் பணிகளுக்கு பயன்படுத்துவது தொடர்பான அனைத்து ஆவண பரிமாற்றங்களும் நிறைவடைந்துள்ளன.

அத்துடன், நேற்று முதல் உத்தியோகபூர்வ இல்லம் சிறிமாவோ பெண்கள் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அத்தியாவசிய உணவு பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இறக்குமதியாளர் சங்க பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உணவு பொருட்களின் இறக்குமதி
குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சில நாடுகளில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்படுமா என ஜனாதிபதி குறித்த சங்கத்திடம் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அத்தியாவசிய உணவு பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம், இதுவரையில் தமது இறக்குமதி நடவடிக்கைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு ஐ.நாவிடம் கோரிக்கை

தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் இணைப்பாளரான குருசாமி சுரேந்திரன் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நடந்துவரும் ஐ.நா மனித உரிமை பேரவையினுடைய கூட்டத்தொடருக்கு, எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி குற்றவிசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கோரிக்கையுடன் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கடித வரைபை கடந்த 2024 ஐப்பசி ஓராம் திகதி சமர்ப்பித்துள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா ஆகியோருடைய கையொப்பமிட்ட கடிதங்கள் , ஐ.நா மனித உரிமை உயரஸ்தானிகருக்கும், மனித உரிமை பேரவையின் பிரதான நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இக்கட்சித் தலைவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு வந்த கூட்டு அறிக்கைகளின் பிரகாரமும், உயர் அதிகாரிகளுடனான இணையவழிச் சந்திப்புகளில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் உள்ளடக்கிய காத்திரமான விரிவான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை சுட்டிக்காட்டி, மேலதிகமாக கிழக்கு மாகாணத்தில் அரசால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இனக்குடி பரம்பல் சிதைப்பையும், தாயகத்தின் தொடர் நிலப்பரப்பை துண்டாடும் நடவடிக்கைகளையும் விளக்கமாக வெளிப்படுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான கோரிக்கைகள், குற்றவாளிகளை தண்டனை வழங்காது இழுத்தடித்து முடிவில்லாமல் தொடர்ந்து வருவதையும் கரிசனைப் படுத்தி அறிக்கை வடிவில் இக்கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.

மனித உரிமைப் பேரவையின் பிரதான நாடுகளின் பிரதிநிதிகளுக்கான கடிதத்தில், குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவது தான் ஒரே ஒரு வழி என்றும் அதை விரைந்து நிறைவேற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களினுடைய இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வாக சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இவ்வறிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சுமந்திரனை கடுமையாக சாடிய தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

“தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற சுமந்திரனின் ஆட்டம் இனி முடிவுக்கு வரும் என்று அந்த கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்தினர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையில் மகளிர் அணித் தலைவி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ‘எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உண்மையில் எதற்காக இவ்வாறான தெரிவுகளைச் செய்தார்கள் என்ற சந்தேகமும் கேள்வியும் இருக்கின்றது.

இந்த பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. இதனால் கட்சியில் உள்ள பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக மகளிர் அணியில் இருக்கின்ற ஐந்து பேர் இரண்டு கிழமைக்கு முன்னதாகவே விண்ணப்பித்து இருந்தனர்.

ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும், காடுகள், மலைகள், மேடுகள், பள்ளங்கள் என பல இடங்களிலும் பெண்களைத் தேடுவதாகவும் தனது பாணியில் கிண்டலாகச் சொல்லியிருந்தார். எதற்காக அவர் உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்றார்.

இவ்வாறாக அவரின் பொய்களைக் கேட்கவோ, சர்வாதிகாரத்துடன் அவர் செயற்பட்டு வருவதையோ அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை.

எங்களில் பல பேர் போட்டியிட விண்ணப்பித்து இருக்கையில் அதனை மறைத்துவிட்டு தனக்கு துதிபாடுபவர்களை வேட்பாளர்களாக சுமந்திரன் நிறுத்தியுள்ளார்.

அப்படியாயின் முதலில் விண்ணப்பித்த நாங்கள் யார்? இப்போது சுமந்திரன் தெரிவு செய்த இருவரும் யார்? எந்த அடிப்படையில் அவர்களைச் சுமந்திரன் தெரிவு செய்தார்.? மொத்தத்தில் தனக்குத் துதி பாடுபவர்களைத் தானே நிறுத்திவிட்டு இப்போது ஆளுமை மிக்க பெண்கள் என அவர் புருடா விடுகின்றார்.

வெறுமனே அடாவடித்தனமாகச் சர்வாதிகாரத்துடன் தான் செயற்படுவதால் மற்றவர்களை முட்டாள்கள், மடையர்கள் எனச் சுமந்திரன் நினைக்கக்கூடாது.

எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற அவரது ஆட்டம் இனி முடிவுக்கு வரும்.

இந்த இரு பெண் வேட்பாளர்களின் தெரிவு என்பது தன்னிச்சையாக சுமந்திரனால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

இதற்கு யாருடைய ஒப்புதலும் இன்றி தனக்குத் துதிபாடு பவர்களைத் தனது வாக்கு வங்கிக்காக அவர் தெரிவு செய்துள்ளார்.

எங்கள் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த இருவரையும் சுமந்திரன் நியமித்துள்ளார்.

முன்னர் விண்ணப்பித்தவர்களை புறந்தள்ளி தனக்குத் துதிபாடிக் கொண்டு தன்னோடு பயணிக்கக்கூடிய இரண்டு கொத் தடிமைகளை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நியமித்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் மக்களின் முழுமையான ஆதரவு நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும்! தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை

தேசிய மக்கள் சக்தியினர் இனவாதிகள் அல்லர். எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் அமோக ஆதரவு கிட்டும். அதன்மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

எமது தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எளிமையானவர். தனது நடத்தை மூலம் அவர் அதனை உறுதிப்படுத்தி வருகின்றார். மக்கள் எமக்கு வழங்கியுள்ள பொறுப்பு உரிய வகையில் நிறைவேற்றப்படும்.

ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு, கிழக்கில் இருந்து எமக்கு விழாத வாக்குகள் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் என உறுதியாக நம்புகின்றோம்.

அந்த ஆதரவுடன் மூன்றிலிரண்டுப் பெரும்பான்மைப் பலம் கிட்டும் என எதிர்பார்க்கின்றோம். தேசிய மக்கள் சக்தியினர் இனவாதிகள் அல்லர்.

அனைவருக்கும் சம உரிமை வழங்கி, இலங்கையர்கள் என்ற நாமத்தை தேசிய மக்கள் சக்தியால்தான் காக்க முடியும் என்பது மக்களுக்கு தெரியும்.

எனவே, ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற வாக்குகள் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் இரட்டிப்பாகும் என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தி வன்னி மாவட்டத்தில் போட்டியிட இருந்த சட்டத்தரணி தனஞ்சன் தற்போது தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவது சரியான தீர்மானம் அல்ல என பல அறிவுறுத்தல்கள் தனக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் இந்த போட்டியிட வேண்டாம் என்ற முடிவினை எடுத்துள்ளதாக சட்டத்தரணி தனஞ்சயன் தனது முகநூல் பக்கத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த முகநூல் பதிவில்,

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுமாறு பல்வேறு கட்சிகளாலும் சுயேட்சைக்குழுக்களாலும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் தமிழ் மக்களினுடைய பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான கட்சி, இலங்கை தமிழரசுக்கட்சி என்ற அடிப்படையில் தமிழரசுக்கட்சியின் ஊடாக வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தேன்.

ஆயினும் நான், தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக என்னுடைய நண்பர்களுடனும் நலன்விரும்பிகளுடனும் கலந்துரையாடியபோது, பலர் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியில் போட்டியிடவேண்டாம் என ஆலோசனை வழங்கியிருந்தனர் என்பதுடன் நான், தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவதானது உண்மையான தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்தும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இருந்த போதிலும் என்னுடைய நலன்விரும்பிகளின் விமர்சனங்களையும் மீறி, தமிழரசுக்கட்சி ஊடாக போட்டியிடுவது என்று தீர்மானித்திருந்தேன்.

கடந்த காலங்களில் அந்தக் கட்சி எம்மவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியிலும் சர்வதேச அரங்கிற்கும் கொண்டு செல்லப்பட்ட கட்சியாகும். அந்த அடையாளத்தை நாங்கள் பிரதிபலிக்கவேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.

ஆனாலும், கடந்த சில நாட்களாக கட்சி சார்ந்து நடைபெறுகின்ற சங்கடம் தருகின்ற விடயங்கள் அந்தக் கட்சி ஊடாக பயணிப்பதன் ஊடாக எங்கள் மக்கள் சார்ந்து எதிர்காலத்தில் பணியாற்ற முடியுமோ? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியுள்ளது.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், மக்கள் சார்ந்த பணியில் முடிந்த அளவிற்கு கடந்தகாலங்களில் பணியாற்றியிருக்கிறேன். தொடர்ந்தும் பணியாற்றுவேன். என்னுடைய மக்கள் சார்ந்த பணிக்கு உங்கள் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சார்புடையவர்கள் என நேற்றையதினம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பதவிகள் மற்றும் பொறுப்புக்களில் இருந்து தவராசா நேற்றையதினம் விலகினார்.

இதன் தொடர்ச்சியாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் இன்றையதினம் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மேலும் பலர் வெளியேறுவதற்கு ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக களமிறங்கும் சசிகலா ரவிராஜ்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவில் இன்றைய தினம் (07) அவர் கையெழுத்திட்டார்.

இதன்போது ரெலொ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

பொதுத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுவுடன் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை அந்தந்த தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2023 இலக்கம் 09 ஐ கொண்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் 80 (01) (P), 82 (01) (E), 82 (02), 89, 90 (04) ஆகிய சரத்துக்களின் படி, வாக்களிப்பு நாள் அறிவிக்கப்பட்ட நாள் வரையிலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2023 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் எண் 9 இன் 80 (01) (பி), 82 (01) (இ), 82 (02), 89, 90 (04) ஆகிய பிரிவுகளின்படி, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட திகதியுடன் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கை
மேலும், சரத்து 99 A இன் படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள், வேட்பு மனுவுடன், தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளையும் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

வேட்புமனுவுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கையையும் சமர்ப்பிக்கத் தவறினால், அது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized