மக்களின் ஒற்றுமையினை சிதறடிக்கும் நிலைபாடு: தமிழ் தலைமைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பதவி நோக்கங்களுக்காக எதிரணியாக பிரிந்து நின்று மக்களின் ஒற்றுமையினை சிதறடிக்கும் போட்டி அரசியலானது மக்களை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்கும் தொலைநோக்கை இல்லாது செய்வதாக தமிழ் மக்கள் பொதுச்சபை தெரிவித்துள்ளது.

2024 நவம்பர் 14ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபை எந்தவொரு வகிபாகத்தினையும் எடுப்பதில்லை என்று பொதுச்சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் மக்கள் பொதுச்சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தன்னைப் போதியளவில் ஒழுங்கமைத்து வலுவூட்டி விரிவாக்குவதற்கு முன்னரேயே மிகக்குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை ஈழத்தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பரீட்சார்த்த களமாக கையாளுவதற்கு முன்வந்தது.

இம்முயற்சியில் வெற்றிபெற்றது மாத்திரமல்லாது ஒரு புதிய அரசியல் அணுகுமுறைக்கூடாக ஒடுக்கப்படும் மக்கள் எவ்வாறு தங்கள் ஒற்றுமையினையும் திரட்சியினையும் தேசமாய் முன்நிறுத்தலாம் என்ற மாதிரியையும் உலகின் முன் துணிவுடன் காட்டியுள்ளது.

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பொதுச்சபை ஒரு தேர்தலாகவோ, பதவிக்கான போட்டியிடலாகவோ கொண்டிருக்கவில்லை.

இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்
இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து சில நாட்களுக்குள் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் பதவிகளுக்கான போட்டி அரசியலாகவும், மக்களை அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்ந்து கூறுபடுத்தி சிதறடிக்கும் செயற்பாடுகளை முதன்மையாக கொண்டுள்ளது என நாங்கள் அறிவோம்.

இத்தகைய நிலையில் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளை அவர்களது இருப்புக்கான, பதவிக்கான நலன்களுக்கு அப்பால் அழைத்துச் சென்று தேசத்திற்காய் ஒருங்கிணைக்க கால அவகாசமோ, சாத்தியமோ தமிழ் மக்கள் பொதுச்சபைக்கு தற்போதைய நிலையில் இல்லை.

அதேவேளையில் பதவி நோக்கங்களுக்காக எதிரணியாக பிரிந்து நின்று மக்களின் ஒற்றுமையினை சிதறடிக்கும் போட்டி அரசியலில் தமிழ் மக்கள் பொதுச்சபை வரித்துக் கொண்ட “தேசமாய் ஈழத்தமிழர்களை ஒன்றுதிரட்டுதல்” என்ற உன்னத குறிக்கோளுக்கு முற்றிலும் விரோதமானது என்பதனையும் மீண்டும் நினைவூட்டுகின்றோம்.

தமிழ் மக்கள் பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் இந்த தேர்தல் தொடர்பாக பொருத்தமான தீர்மானங்களை தங்கள் அமைப்பு சார்ந்து மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

இந்த தேர்தலின் பின்பு தமிழ் மக்கள் பொதுச்சபை வலுவூட்டப்பட்டதாகவும், விரிவுபடுத்தப்பட்டதாகவும் ஈழத் தமிழர் தேசத்தைக் கட்டமைப்பதற்காக மக்களை ஒன்று திரட்டும் தனது குறிக்கோள் நோக்கிய பணியில் தளராது பயணிக்கும் என்பதனையும் இவ்விடத்தில் உறுதியாக தெரிவிக்கின்றது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது

தமிழரசுக் கட்சியின் நியமனக்குழுக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களின் வேட்பாளர்கள் நியமனம் தொடர்பாக ஆராய்ந்து இறுதி முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

வவுனியாவில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு இன்று (06.10.2024) ஞாயிற்றுக்கிழமை கூடிய போதே இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் புது முகங்களுடன் தமிழரசுக் கட்சி களமிறங்குகிறது.

அத்துடன், அம்பாறையில் தனித்து போட்டியிடுவோம் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரனும் நானும் போட்டியிடுவதுடன், ஏனைய 7 பேரும் புதியவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.சி.சி.இளங்கோவன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் பெண் வேட்பாளர்கள். மிகவும் துடிப்பான இரு பெண்களையும் இம்முறை நிறுத்தியுள்ளோம். பெண் வேட்பாளர்கள் தேவை என நாம் ஊடகங்களில் தெரிவித்ததை பார்த்து இருவர் காலை விண்ணப்பித்தனர்.

அவர்கள் இருவருக்குமே வாய்ப்பை கொடுத்துள்ளோம். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஞா.சிறிநேசன் எமது கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன், மட்டு மாநகர முன்னாள் மேயர் தி.சரவணபவன், வைத்தியர் சிறிநாத் உள்ளிட்ட ஐவர் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய மூவரையும் மாவட்ட கிளையுடன் கலந்துரையாடி இறுதி செய்வோம். வன்னி, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட பட்டியல் இறுதி செய்யப்படவில்லை.

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்
வன்னித் தேர்தல் தொகுதியில் மூன்று மாவட்டங்கள் இருப்பதுடன் பல்வேறு பிரிவினரும் உள்ளனர். அது தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் எதிர்வரும் புதன்கிழைமை இது இறுதி செய்யப்படும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பொதுத் தேர்தலில் போட்டியிட எமது கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை.

தற்போது போட்டியிடுவதாக செய்தி வந்ததாக கூறுகின்றீர்கள். அவ்வாறு எமக்கு தெரியாது. அவர் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை.

திருகோணமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து எமது வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றோம். அவர்களுக்கான 3 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் புதன்கிழமை இறுதி செய்யப்படும்.

அம்பாறை மாவட்டத்தில் எமது மாவட்ட கிளை கலந்துரையாடி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக எமது சின்னத்தில் நாம் தனித்து போட்டியிடுகின்றோம். எமது மாவட்ட கிளை, தற்போது வேட்பாளர்களை தெரிவு செய்து வருகிறது.

இம்முறை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு ஏற்ப புது முகங்களுடன், இளையவர்களுடன் எமது கட்சி தேர்தலில் களமிறங்கியுள்ளது எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 35 முன்னாள் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் ‘அவுட்’

35க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இவர்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவர்.

ஐந்து முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள்
ஏனைய அமைச்சர்களில் சுமார் ஐந்து முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சுமார் 10 முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் சுமார் 25 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது நண்பர்களை அழைத்து கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் பொதுத்தேர்தல்
அதுமட்டுமின்றி எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குழு ஒன்று கட்சி மாறி தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி – வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர்களை அக்கட்சி இறுதி செய்து தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் துளசி ஆகியோர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 14 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில், வேட்புமனுத்தாக்கல் ஆரம்பித்துள்ளது. மேலும் தங்களது கட்சிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது போன்ற கலந்துரையாடல்களும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் க. சிவனேசன், கரைத்துரைபற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் க. விஜிந்தன், முருகன் பகுதி வர்த்தகரான அ. ரோஜர், முன்னாள் போராளியான கருணாநிதி ஜசோதினி ஆகியோரும் போட்டியிடவுள்ளதுடன் புளொட் மற்றும் டெலோ சார்பில் தலா ஒருவர் நியமிக்கப்படவுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

Posted in Uncategorized

பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணியில் 5000 பேர்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் ஐயாயிரம் பேரை கடமையில் அமர்த்த உள்ளதாக பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது.

தேர்தல்
ஜனாதிபதி தேர்தலை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த விடயத்தை பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவத்துள்ளார்.

திட்டமிடல்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் நான்காயிரம் பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலின் போது நீண்ட கால அடிப்படையிலான கண்காணிப்பாளர்களாக 200 பேர் வாகனங்களுடன் நியமிக்கப்பட உள்ளனர்.

பொதுத் தேர்தலின் போது விருப்பு வாக்குகளும் எண்ணப்படும் காரணத்தினால் வாக்கு எண்ணும் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த பெபரல் திட்டமிட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கான பிரேரணை!

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் ஓராண்டுக்கு கால நீடிப்பு செய்யக் கோரி பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெனீவாவில் கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது.

அதன்படி கூட்டத் தொடரின் தொடக்க நாளான கடந்த மாதம் 9 ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் எழுத்து மூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெற்றது.

இது இவ்வாறிருக்க, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானமானது, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 51 ஆவது கூட்டத் தொடரின்போது மீண்டும் கால நீடிப்பு செய்யப்பட்டு, தற்போது 51/1 தீர்மானம் எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தத் தீர்மானம் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள் ஒன்றிணைந்து 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குக் கால நீடிப்பு செய்வது குறித்து ஆராய்ந்தன.

அதற்கமைய ‘இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட முதல் வரைபுக்கு சகல தரப்பினரதும் ஒப்புதல் பெறப்பட்டு, அதனைப் பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் இந்தப் பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும், பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் எனவும், இவ்விவகாரத்தில் நெருங்கிப் பணியாற்றி வரும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

Posted in Uncategorized

முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்

அரசியல்வாதிகள், பொது அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேரின் சொத்துக்களை முடக்கும் வகையிலான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்த ஏழு பேரும் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் காப்புறுதிகளை பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏழு பேரும் அவர்களின் சாதாரண சம்பளத்தில் வாங்க முடியாத அளவுக்கு அதிக சொத்துக்களை எப்படி சம்பாதித்தார்கள் என்பது குறித்து ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்களில் சிலர், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலம் சொத்துக்களை பெற்று வந்ததாக கூறுவது முற்றிலும் பொய்யான கூற்று என்று ஆணைக்குழு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

கடந்த அரசாங்கத்தின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள், தாம் சில சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார்கள் என்பதை விளக்க முடியாமல் உள்ளனர். கறுவாத் தோட்டத்தில் சொகுசு வீடு மற்றும் நிலம் வாங்கியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரைப் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள்
இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரின் 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 5 காப்புறுதிக் காப்புறுதிகளை முடக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம், மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தனது நெருங்கிய சகாக்களின் பெயரில் வாங்கியதாக கூறப்படும் ஏராளமான சொத்துக்கள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Posted in Uncategorized

தேசியப்பட்டியலுக்காக இரு பிரதிநிதிகளை இழக்க போகும் தமிழரசு கட்சி: சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

 

தமிழரசுக் கட்சியானது ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை ஏற்படுத்தப் போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (05.10.2024) இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பொதுக்கட்டமைப்பானது தொடர்ந்தும் பணியாற்றும் என்பதை நாம் இரு தரப்பும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.

அந்தவகையில், இந்த நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பூடாக சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவுகள் விரைவில் அறிவிப்போம். நாங்கள் பிரிந்து நிற்பதால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடும் நிலை இருக்கிறது.

கடந்தமுறை அம்பாறையில் அந்த இடத்தை இழந்திருக்கின்றோம். எனவே, அங்கு தமிழ் பிரதிநித்துவத்தினை காப்பாற்றுவதற்கான இரண்டு வழிமுறைகளை தமிழரசுக் கட்சிக்கு கூறியிருக்கின்றோம்.

இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் ப.சத்தியலிங்கம் மற்றும் சி.சிறிதரன் ஆகியோருடன் நானும், செல்வம் அடைக்கலநாதனும், சித்தார்த்தனும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தோம். எனவே, இருதரப்பும் இணைந்து வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போதே அந்த பிரதிநித்துவம் காப்பாற்றப்படும்.

ஆகவே, ஏழாம் திகதிக்கு முன்னர் உத்தியோக பூர்வமான பதிலை அறிவுக்குமாறு நாம் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். திருகோணமலையில் வீட்டு சின்னத்திலும், அம்பாறையில் சங்கு சின்னத்திலும் தேர்தலை கேட்கலாம் என நாம் முன்னர் பேசியிருந்தோம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது அனைத்து இடங்களிலும் தமிழரசுகட்சி தனித்து போட்டியிடுவதாக கூறுகிறார்கள்.

அது நடந்தால் இந்த மாவட்டங்களின் ஆசனங்கள் இழக்கப்படும் நிலையே ஏற்படும். இந்த விடயங்களை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஐந்து கட்சிகள் மற்றும் 36ற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் ஒன்றுகூடி இந்த முடிவிற்கு வந்துள்ளார்கள். மாறாக எல்லா இடத்திலும் தாங்களே நிற்கவேண்டும் என்றால் இது பிடிவாதமே. தங்களுக்கு தேசியப் பட்டியலை கூட்டிக்கொள்வதே அவர்களது நோக்கம்.

ஒரு தேசிய பட்டியலுக்காக இரண்டு ஆசனங்களை இழக்கப் போகின்றார்கள். இதுபோல ஒரு முட்டாள்தனமான முடிவு எதுவும் இருக்காது. அத்துடன், சுமந்திரனுக்கு எவளவு தூரம் வடக்கு – கிழக்கு பிரச்சினைகள் புரியுமோ புரியாதோ என்று என்று எனக்கு தெரியாது. ஆனால் மாவை சேனாதிராஜா, சிறீதரன் ஆகியோர் இதனை புரிந்துகொள்வார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்துக்கு விரைவில் தண்டனை: வசந்த சமரசிங்ச எச்சரிக்கை

நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்த மக்கள் பணம் எங்கிருக்கின்றது என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக் கொணரவுள்ளதாக வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பம், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டிய தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்துள்ளன.

இந்நிலையில், தங்களுடைய ஊழல்களை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் ​போனது ஏன் என்று அண்மையில் நாமல் ராஜபக்ச சாடியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, நாமல் ராஜபக்ச ​போன்றவர்கள் கொள்ளையடித்த பணம் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? வேறு வகையில் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக் கொண்டு வருவோம்.

இது ஊழல்வாதிகள் தாங்கள் இன்னும் மாட்டிக் கொள்ளவில்லை என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி மணித்துளிகள் ஆகும்.

மிக விரைவில் அவர்கள் கூண்டோடு மாட்டிக் கொண்டு தங்கள் தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.

Posted in Uncategorized

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற தயாராகும் மகிந்த!

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மகிந்த தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

சமகால அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக மகிந்தவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசியலில் ஓய்வு
பாரம்பரிய அரசியல் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களும் இந்த முடிவிற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் மகிந்த ஆட்சியில் அங்கம் வகித்த பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் நாட்டு மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.