போர்குற்றச்சாட்டு விசாரணைக்கு அநுர அரசாங்கத்தை வலியுறுத்துங்கள் : ஜெய்சங்கரிடம் கோரிக்கை!

இலங்கையில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தை போர்க்குற்ற விசாரணைக்கு, முழுமையாக ஒத்துழைக்குமாறு வலியுறுத்த வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ். ராமதாஸ், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் 4ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே ராமதாஸ் தமது எக்ஸ் (X) தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த விஜயம் இலங்கைத் தமிழர்களுக்கு பயனும், அதிகாரமும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும், போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ள போதிலும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

எனவே, மாறிமாறி ஆட்சி செய்த பாரம்பரிய கட்சிகள் அல்லாத கட்சியைச் சேர்ந்த ஒருவர் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளார். ஆகையால், பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் இலங்கை ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும்.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்திடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்த வேண்டும் என கோரியுள்ளார்.

Posted in Uncategorized

உணவுக்கான நிலுவை தொகையை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தில் இருந்து எடுத்துச்சென்ற உணவுக்கான நிலுவைத் தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அன்றைய தினம் வரை கொடுப்பனவை கணக்கிட்டு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுப்பனவு தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாதாந்த கொடுப்பனவு
இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் இவ்வாறான நிலுவையிலுள்ள கணக்குகளுக்கு உடனடியாக தீர்வினை காண மாதாந்த கொடுப்பனவு தொகையை தாமதமின்றி வழங்குவதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கொடுப்பனவு தொகை தாமதமானது தொடர்பாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே நாடாளுமன்ற சேவை திணைக்களத்திடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

Posted in Uncategorized

பாராளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டி: ரெலோ செயலாளர் பா.உ கோவிந்தன் கருணாகரம் ஜனா

பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்து விளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (30) காலை நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் அழைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

‘ஒரே சீனா’ கொள்கையை உறுதிப்படுத்தியுள்ள அநுரவின் அரசாங்கம்

ஒரே சீனா என்ற வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஒரே சீனா கொள்கையானது இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையாக பதிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான பரிமாற்றங்கள், பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு கிடைத்த உதவிகள், பட்டுப்பாதை முயற்சியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் சீன நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்புகள் என்பவற்றை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சீனாவின் ஒற்றுமை
இந்தநிலையில்,பொருளாதார மீட்சி செயல்முறைக்கு சீனாவின் ஒற்றுமை, ஆதரவு மற்றும் தொடர்ச்சியான பங்காளித்துவத்தை இலங்கை நாடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங், சர்வதேச நிலைமைகள் எவ்வாறு மாறினாலும் அல்லது பாரம்பரிய அல்லது பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், சீன அரசாங்கமும் மக்களும் எப்போதும் இலங்கையுடன் உறுதியாக நிற்கிறார்கள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அநுர மீது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்க தயாராகும் இந்தியா!

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயகவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுப்பதற்கு இந்தியா தயாராகி வருவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.

தனியார் ஊடகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இலங்கை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையவும் வீழ்ச்சியடையவும் விரும்பாத இந்தியாவின் எண்ணத்தை தோற்கடிக்க வேண்டுமாயின் இந்தியாவை வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதி அநுர எட்டியுள்ளதாக ஆய்வாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், பெரும்பான்மை மக்கள் தங்களுக்கு ஒரு மாற்றம் தேவை என கருதியே தற்போது அநுரகுமார திஸாநாயகவை வெற்றியடைய செய்ததாக ஆய்வாளர் அரூஸ் கூறினார்.

இதேவேளை, பூகோள அரசியலில் இருந்து அவர் தப்பி பிழைப்பதே அநுரவின் அடுத்த சவால் என ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அநுர அரசின் அதிரடி : முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்து

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குடிவரவு குடியகல்வு திணைக்கள தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரும் தலைமை அதிகாரியுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

இதன்படி, சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் அரசியலமைப்பு பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று உறுப்பினர்களைத் தவிர 219 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்படும்.

வழக்கமான முறைப்படி, அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ராஜதந்திர கடவுச்சீட்டு சலுகைக்கு உரிமை உண்டு.

அமைச்சுப் பணியாளர்களின் விமான அனுமதிப்பத்திரங்களும் இரத்து
கூடுதலாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் அல்லது கணவர்கள் அதே உரிம சிறப்புரிமைக்கு உரிமையுடையவர்கள்.

இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விமான அனுமதிப்பத்திரங்களும் இரத்துச் செய்யப்பட்டதாக சமிந்த குலரத்ன மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் குடிவரவு திணைக்களம் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

Posted in Uncategorized

சந்திரிக்காவின் பரிதாப நிலை : காணிகளை விற்று வாழும் அவலம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் போது தனது வங்கிக் கணக்கில் பணம் எதுவும் இல்லை எனவும், தற்போது காணி விற்று வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அநுர குமார தலையைிலான அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளை நிறுத்தவுள்ளதாக தெரிவித்த நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் பேசிய குமாரதுங்க,

தாம் அரசாங்கத்திடம் இருந்து எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

தனக்கு ஒன்பது வருடங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் யாரிடமிருந்தும் எதையும் வாங்கி சாப்பிடவில்லை. எங்களிடம் இருப்பதை மட்டுமே மற்றவர்களுக்குக் கொடுத்தோம். நான் ஜனாதிபதியாக இருந்து வீட்டிற்குச் சென்றபோது, ​​​​என் வங்கிக் கணக்கு உண்மையில் ஓவர் டிராஃப்ட் ஆனது, பின்னர், நான் நிலத்தை விற்று வாழ்கிறேன்.

எனக்கு அரசாங்கத்திலிருந்து எதுவும் கிடைக்கவில்லை. மகிந்த ராஜபக்ச ஆட்சியின் ஒன்பது வருடங்களில் எனக்கு ஓய்வூதியம் கூட வழங்கப்படவில்லை, நான் மின்சார கட்டணத்தை செலுத்துகிறேன். என்னிடம் நான்கு வாகனங்கள் உள்ளன, மேலும் 4 கார்கள் உள்ளன என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அநுரவின் ஆட்சியில் காத்திருக்கும் அதிரடிகள் : பீதியில் ஊழல் அரசியல்வாதிகள்

சட்டவிரோதமாகவும் மற்றும் முறைக்கேடாகவும் மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் அனைவரும் சீக்கிரத்தில் வெளிச்சத்திற்கு வருவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை தனியார் ஊடகம் ஒன்றின்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு தண்ணீர் காட்டுவதாக சில சூழ்ச்சிக்காரர்கள் சவால் விட்டுகொண்டு இருக்கின்றனர்.

நாட்டில் நடைபெற்ற ஊழல் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் போது கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டியவர்களின் பட்டியல் வெளியிடப்படும் அப்போது மக்களுக்கு தெளிவு கிடைக்கும்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த நகர்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதையடுத்து எமது கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! விஜேதாச ராஜபக்‌ச அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

நீதி மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்த விஜேதாச ராஜபக்‌ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவிக் கொண்டார்.

இந்நிலையில் எதி்ர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய நிலையில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதற்குப் பதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (ஜாதிக பிரஜாதந்திரவாதி பெரமுண) பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அதன் உபதலைவர் கோமிக யஸஸ் விஜேசிர அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியால் முப்படையினர் அழைக்கப்பட்டமை குறித்து விளக்கம்!

பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே முப்படையினரை வரவழைத்து ஜனாதிபதியினால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இது வழமையான நடைமுறையாகும்.

அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டாலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படையினரை வரவழைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

இது முற்றிலும் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் வழமையான வர்த்தமானியாகும். இருப்பினும் சமூக வலைதளங்களில் இது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கைக்கு ஏற்படக்கூடிய அனைத்து வகையான அச்சுறுத்தல்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சம்பத் துயகொண்டா, பொதுமக்கள் தற்போது பல வழக்கத்திற்கு மாறான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized