Category: செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு விசேட அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவின் போது கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் செல்லுபடியாகும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிக்கும்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தபால்மூல வாக்களிப்பின் போது கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதித்தமையினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பகிஸ்கரிப்பும் ஒருவகை டீல் அரசியல் தான் – சபா குகதாஸ்!
விவாதத்திற்கு அழைத்த அநுரவிற்கு ரணிலின் பதிலடி
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நான் விவாதத்திற்கு வரும் முன்னர் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாராமா இறக்குமதி பொருளாதாராமா என்பதை தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற வர்த்தகர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“அநுரகுமார திஸாநாயக்காவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை இரத்து செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுரகுமார திஸாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் சூரியபெரும ஆகியோர் தங்களுக்குள் விவாதமொன்றை நடத்தி முதலில் அவர்களின் பொருளாதாரக் கொள்கையை தீர்மானிக்க வேண்டும்.
அவ்வாறு உங்கள் பொருளாதாரக் கொள்கையை நீங்கள் அறிவித்ததன் பின்னர் நானும் நீங்களும் இணைந்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் கலந்துரையாடுவோம்.
வேண்டும் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் நாம் விவாதத்திற்கு அழைப்போம்.
ஆனால், அதில் எனக்கு ஒரு பயம் உள்ளது. அவர் பேசினால் இரண்டு மணி நேரங்களிற்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எனக்கு வேறு வேலை உள்ளது என சென்று விடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ கனவு நனவாக ஒருபோதும் இடமளியேன் : நாமல் பகிரங்கம்
வடக்கு, கிழக்கை இணைக்கவும் தமிழீழக் கனவு நனவாகவும் ஒருபோதும் இடமளியேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் நேற்றையதினம் (11.09.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாம் ஒற்றையாட்சியைப் பாதுகாப்போம். மாகாண சபைகளுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டோம்.
முதலீடு என்ற போர்வையில் தேசிய வளங்களை விற்பனை செய்யும் சூழ்ச்சி நடவடிக்கைக்கும் இடமளிக்கமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் சிறீதரன் தலைமையில் முக்கிய மந்திராலோசனை!
தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான முக்கிய மந்திராலோசனை ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மூத்த போராளி யோகன் பாதரின் இல்லத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியான கருத்துக்களைத் தெரிவித்ததால் கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மூத்த போராளி காக்கா அண்ணன், ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்துவதன் தேவையையும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கும் தேவையையும் வலியறுத்தியதுடன், தனது கருத்துக்களைத் தெரிவித்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
இதுபோன்ற கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான ஆதரவை அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டதாக கலந்துரையாடலின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக முக்கியத்துவம்
மட்டக்களப்பில் சுமந்திரன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் ஆகியோர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்துள்ள நிலையில் இக் கலந்துரையாடல் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விடயம் எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், கோடீஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருன் தம்பிமுத்து, மூத்த போராளி யோகன் பாதர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராஜன் மற்றும் மூத்த போராளி காக்கா அண்ணன் ஆகியோருடன் மற்றும் பல முன்னாள் போராளிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் சில தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களும் அருண் தம்பிமுத்து தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி முக்கியஸ்தர்களும் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச ஆதரவை வரவேற்ற அமெரிக்கா
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீண்டகாலமாக தண்டனை வழங்கப்படுவதில்லை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி, தூதுவர் மிக்கேல் டெய்லர், இதனை ஜெனீவாவில் கூறியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பணியை அமெரிக்கா பாராட்டுவதாகவும், பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதியை மேம்படுத்துவதற்கான சர்வதேச ஆதரவை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஊழலுக்கு எதிரான மற்றும் நீண்டகால நிலையான வளர்ச்சியில் அதிக வெளிப்படைத்தன்மையை ஒருங்கிணைக்க அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நில அபகரிப்புகளை நிறுத்தவும், நில ஒப்பந்தங்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் அமெரிக்கா, இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
நடந்து வரும் சித்திரவதைகள் பற்றிய உயர்ஸ்தானிகரின் அறிக்கையால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது
இந்தநிலையில், சித்திரவதைகளுக்குத் தீர்வு காணவும், அதற்குப் பொறுப்பானவர்களை தண்டிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்துகிறது மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நீண்டகாலமாக தண்டனை விதிக்கப்படாமல் இருப்பது நல்லிணக்கத்திற்கு தடையாக உள்ளது.
எனவே அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்கு உகந்த சூழலை வளர்க்கும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா அழைப்பு விடுப்பதாக தூதர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்களிப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக, இலங்கைக்கு திரும்ப முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) கவலை வெளியிட்டுள்ளார்.
பல இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தேர்தலுக்கு வர ஆர்வமாக உள்ளனர்.
எனினும் காலாவதியான கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை புதுப்பிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக விஜித ஹேரத், செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களித்தால், தமக்கு பாதகம் என்பதால், இந்த விடயங்கள் தீவிரமடைய அரசாங்கம் வேண்டுமென்றே அனுமதித்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு ஊழல் பேரங்களே முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
22ஆம் திகதி பதவியேற்றவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அநுர தெரிவிப்பு
எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியானவுடன் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக, ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதவிப் பிரமாணம் செய்தவுடன் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புத்தேகமவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 21ஆம் திகதி இந்த நாட்டை எங்களிடம் ஒப்படைக்கவும். இதை ஒவ்வொன்றாக மாற்றத் தொடங்குவோம். முதலில் தேர்தல் முடிவுகள் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியாகும்.
ஒரு மணி நேரம் கூட தவறவிட மாட்டோம், உடனடியாக நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்து மிக விரைவாக நாடாளுமன்றத்தை கலைப்போம்.
ஏனென்றால், இந்தத் திருடர்கள், மோசடிக்காரர்கள், குற்றவாளிகள் இனி ஒரு நாள் கூட இந்த நாடாளுமன்றத்தில் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சஜித்தை ஆதரிப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் இருவர் எடுத்த தீர்மானம்
தமிழரசுக் கட்சிக்குள் இருவர் குரலை உயர்த்திப் பேசி, அதிகாரத் தோரணையில் தீர்மானம் மேற்கொள்ளும் போக்குதான் காணப்படுகின்றது என்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுககு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இவ்வருடம் ஜனவரியில் நடைபெற்ற தமிழரசுக் கட்சித் தலைவர் தெரிவுடன் கட்சி இரு அணிகளாக மாறிவிட்டது என்பது உண்மை. அதன் பின்னர் எந்தவொரு விடயத்திலும் ஒற்றுமையின்றி செயற்படும் போக்கினையே என்னால் அவதானிக்க முடிந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டையும் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களும் இணைந்து மேற்கொள்ளவில்லை. மாறாக ஒரு சாராரின் தன்னிச்சையான ஆதிக்கத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ, தலைவர் தேர்தலில் போட்டியிட்டு ஏற்கனவே தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறீதரனோ அந்த மத்தியக் குழுக் கூட்டத்திற்குச் செல்லவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், யோகேஷ்வரன் போன்றோரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அதுபோன்று இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட முறை தவறானது என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவும் கூறியிருக்கின்றார்.
ஆகையினால் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழரசுக் எடுத்த தீர்மானமாக நான் கருதவில்லை. மாறாக அதனை கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரின் தீர்மானமாகவே பார்க்கின்றேன்.
அங்கு இருவர் குரலை உயர்த்திப் பேசி, அதிகாரத் தோரணையில் தீர்மானம் மேற்கொள்ளும் போக்கு நிலவுகின்றது. ஆகவே மக்கள் நிச்சயமாக சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.