’’Foxhill supercross ’’ கார் பந்தயம்: 7 பேர் பலி; 20 பேர் படுகாயம்

தியத்தலாவ நரியகந்த, “Foxhill supercross” கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் இன்று (21) இடம்பெற்றதுடன், பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பந்தயத்தை பார்த்துக்கொண்டிருந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் மேலும் 20பேர் காயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதனைப் பார்க்க முன்வந்த சிலர் மீது பின்னால் சென்ற மற்றுமொரு கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் விபத்தில் உயிரிழந்த 07 பேரில் 4 பந்தய உதவியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தினையடுத்து நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து பந்தய போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தின் போது பதிவான காணொளி தற்போது வௌியாகியுள்ளது.

2024ஆம் ஆண்டிலும் இலங்கை 33வது ஆண்டாக வரவு – செலவுத் திட்ட வருமான இலக்கை எட்டத் தவறும் – வெரிட்டே ரிசேர்ச்

2024ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 33வது ஆண்டாக இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானம் தொடர்பான வரவு செலவுத்திட்ட இலக்கை எட்டத் தவறிவிடும் என அண்மையில் வெளியிடப்பட்ட ‘2024 வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையில்’ எதிர்பார்க்கப்படுகிறது.

‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ஆண்டுதோறும் வெரிட்டே ரிசேர்ச் நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு, பொருளாதாரத் தகவல்களுக்கான இலங்கையின் முதன்மை தளமாக உள்ள PublicFinance.lk இல் வெளியிடப்படுகிறது.

இலங்கையின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் நிதி, பணம் மற்றும் பொருளாதார மதிப்பீடுகளின் வலுவான பகுப்பாய்வு மற்றும் புறநிலை மதிப்பீட்டை இந்த அறிக்கை வழங்குகிறது. அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவால் (COPF) வெளியிடப்படும் வரவு செலவுத் திட்ட அறிக்கையின் நோக்கத்தையே இந்த அறிக்கையும் பிரதிபலிக்கிறது. இந்த இரண்டு அறிக்கைகளும் வரவு செலவுத்திட்டம் பற்றிய புரிதலையும் விவாதத்தையும் பொதுமக்கள் மத்தியிலும் பாராளுமன்றத்திலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.வெரிட்டே ரிசேர்ச்சின் ‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் அரசாங்கத்தின் கணிப்புகளை விடவும் வரவு செலவுத் திட்டவிளைவுகள் தொடர்பாக மிகவும் துல்லியமான கணிப்புக்களை தொடர்ச்சியாக வழங்கியுள்ளது. இது இலங்கையில் தொழில்சார் பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான ஒரு முக்கியமான மேலதிக உள்ளீட்டை உருவாக்குகிறது.

மிகைப்படுத்தப்பட்ட வரி வருமானம்

1991ஆம் ஆண்டிலிருந்து வரவு செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருமான இலக்கை இலங்கை இதுவரை எட்டவில்லை. மிகச் சமீபத்தில், வழிவகைகள் பற்றிய பாராளுன்றக் குழு, 2023 ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட இலக்கை விட வரி வருமானம் 13% குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூ.4,164 பில்லியன் வருமானத்தை எதிர்பார்க்கிறது, இது 2023 ஆம் ஆண்டிற்கான அதன் திருத்தப்பட்ட கணிப்புகளிலிருந்து 42% அதிகரிப்பாகும். எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை 14% பற்றாக்குறையை கணித்துள்ளதுடன், வருமானம் ரூ.3,570 பில்லியனாக இருக்கும் என எதிர்வுகூறியுள்ளது.

பெறுமதி சேர் வரி (VAT) மூலம் கிடைக்கும் வருமானம் மிகைப்படுத்தப்பட்டதே கணிக்கப்பட்ட பற்றாக்குறையில் 61 சதவீதத்திற்குக் காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டாண்மைவருமான வரி, தனிநபர் வருமான வரி, சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) மற்றும் சுங்க இறக்குமதி வரி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் மிகைப்படுத்தப்பட்டதே மீதமுள்ள 39 சதவீதத்திற்குக் காரணமாகவுள்ளது.

வருமானத்தில் வட்டி விகிதம்

உலகில் வருமானத்திற்கு அதிக வட்டிச் செலவு விகிதத்தை இலங்கை கொண்டுள்ளதுடன், இந்த விகிதத்தைக் குறைப்பது பேரினப் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியமானதாகும். 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்இந்த விகிதத்தை 64% ஆகக் குறைக்க எதிர்பார்க்கிறது. எவ்வாறாயினும், ‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையின்’ வருமானக் கணிப்புகள் மற்றும் வட்டிச் செலவுகள் தொடர்பான அரசாங்கக் கணக்கீடு ஆகியவை, கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இது 70 சதவீதத்தைத் தாண்டும் எனக் குறிப்பிடுகின்றன. கடன் நிலைத்தன்மையின் முக்கிய குறிகாட்டியாக பொருளாதார வல்லுநர்கள் கருதும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட பொருளாதார மீட்சித் திட்டத்தில் இலங்கை இதன் மூலமாக பின்தங்கும் நிலை ஏற்படும்.

Posted in Uncategorized

வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்!

களுத்துறையில் ஒரு சுற்றுலாப் பயணி-அவர் ஒரு வெள்ளைக்காரர்- ஒரு தேநீர்க் கடையில் வடை சாப்பிடுகிறார்.அவரை கடைக்குள் உபசரித்து வடையோடு இரண்டு விதமான சம்பல்களையும் கொடுத்த அந்த கடையைச் சேர்ந்த ஒருவர்,அவரிடம் ஒரு வடைக்கும் ஒரு பால் தேனீருக்கும் மொத்தம் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்.சுற்றுலாப் பயணிக்கு அந்தத் தொகை அதிகம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.அவர் அந்த வழியால் வரும் ஆட்களை மறித்து வடையின் விலை என்னவென்று கேட்கிறார்.அந்த வழியால் வந்த இரண்டு சிங்களப் பெண்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் கதைக்கிறார்கள்,அவர்களில் ஒருவர் அந்த வடையின் விலை 120 ரூபாய் என்று கூறுகிறார். வெள்ளைக்காரர் உண்மையை கண்டுபிடித்து விட்டார் என்பதை அறிந்த கடைக்காரர் சிறு தொகையை திரும்ப கொடுக்கிறார். இந்த விடயம் “டிக்டொக்” காணொளியில் பரவலாகப் பகிரப்பட்டது. அதன் விளைவாக கடைக்காரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

ஏற்கனவே இது போன்ற மற்றொரு சம்பவத்தில் ஒரு சுற்றுலாப் பயணியை ஒரு கொத்துரொட்டி கடைக்காரர் அவமதிக்கின்றார். சம்பவம் நடந்தது கொழும்பு புதுக்கடையில். அங்கேயும் ஒரு இடியப்ப கொத்து என்ன விலை என்று கேட்டபோது கடைக்காரர் 1900 ரூபாய் என்று கூறுகிறார். சுற்றுலாப் பயணி அதை நம்பாமல் கேள்வி கேட்டபோது கடைக்காரர் சுற்றுலாப் பயணியை நோக்கி வாயை பொத்து என்ற சமிக்கையை காட்டுகிறார். அது சமூக வலைத் தளங்களில் பரவலாக வெளிவந்தது. விளைவாக கடைக்காரர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்தார்கள்.

இந்த இரண்டு விடயங்களையும் முன்வைத்து, சமூக வலைத்தளங்களில் பகிடியாக ஒரு விடயம் பகிரப்படுகிறது. இனி சாப்பாட்டுக் கடைக்கு போகும் போது வீடியோவையும் ஓன் பண்ணிவிட்டு சென்றால் சாப்பாட்டுக் கடைக்காரர்கள் மரியாதையாக நடந்து கொள்வார்கள் நியாயமான விலையைகக் கூறுவார்கள் என்பதே அந்தப் பகிடியாகும்.

ஆனால் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பது போல அரசாங்கம் உள்ளூர் மக்களை சாப்பாட்டுக் கடைக்காரர்களின் விடயத்தில் பாதுகாக்கும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இது தொடர்பாக முகநூலில் ஒரு மருத்துவர் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். நட்சத்திர அந்தஸ்துள்ள சுற்றுலா விடுதிகளில் உணவின் விலை உச்சமாகத்தான் உள்ளது. சாதாரண இளநீரில் இருந்து தொடங்கி மேற்கத்திய முறையிலான உணவுகள்வரை எல்லாவற்றுக்கும் பெரிய விலை தான். ஏன் அப்படியென்று சுற்றுலாப் பயணிகள் கேட்பதில்லை. ஏனென்றால் நட்சத்திர விடுதிகளில் அதுதான் விலை. அதையே தெருவோரக் கடைக்காரர் செய்தால் அது வழக்காகி விடுகிறது என்ற தொனிபட மேற்படி மருத்துவர் ஒரு குறிப்பை போட்டிருந்தார்.

இது விடயத்தில் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும்.முதலாவது வெள்ளைத் தோலைக் கண்டால் அல்லது சுற்றுலாப் பயணிகளைக் கண்டால் உள்ளூர் வியாபாரிகள் விலையை உயர்த்திக் கூறும் ஒரு நிலைமை எப்பொழுதும் உண்டு. இது இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவும் உட்பட ஆசிய ஆபிரிக்க நாடுகள் பெரும்பாலானவற்றில் காணப்படும் ஒரு பொதுத் தோற்றப்பாடு. ஒரு வெளிநாட்டுப் பயணிக்கு ஒரு பொருளை டொலர் மதிப்பில் விற்க முற்படுவது.இதுதான் புதுக்கோட்டை மற்றும் களுத்துறைச் சம்பவங்களின் பின்னணி. இது முதலாவது .

இரண்டாவது விடயம்,சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல உள்ளூர் பணக்காரர்களும் சுற்றுலா விடுதிகளில் உணவு அருந்தும் பொழுது அந்த விலைப்பட்டியலைக் குறித்துக் கேள்வி கேட்பதில்லை. சில கிழமைகளுக்கு முன் யாழ்ப்பாணம், திருநெல்வேலிச் சந்தைக்கு அருகாக அமைந்திருக்கும் ஒரு மரக்கறி உணவகத்தில் விற்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்தது. நட்சத்திர அந்தஸ்துள்ள உணவு விடுதிகள் சாதாரண உணவுகளுக்கும் குடிபானங்களுக்கும் பல மடங்கு விலையைப் போடுகின்றன. பணக்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதைக் கேள்வி கேட்காமல் நுகர்கிறார்கள். அதையே தெருவோரக்கடை என்று வந்தால் அல்லது தெருவோரத்தில் பொருளை விக்கும் ஏழை என்று வந்தால் ஆயிரம் நியாயங்கள் கேட்டு விலையை எப்படிக் குறைக்கலாம் என்று முயற்சிக்கிறார்கள் .

இது சமூக வலைத்தளங்களின் காலம். மனிதர்கள் நடமாடும் கமராக்களாக மாறிவிட்டார்கள். எனவே இது போன்ற செயல்கள் நடக்கும் பொழுது அது உடனுக்குடன் படமாக்கப்படுகின்றது. எடுத்த கையோடு சுடச்சுட சமூக வலைத்தளங்களில் செய்தியாக்கப்படுகின்றது. குற்றங்களைத் தடுப்பதற்கும் அநியாயங்களைத் தடுப்பதற்கும் அது உதவுகின்றது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தங்களை உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள் அல்லது சுரண்டப் பார்க்கிறார்கள் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கமும் அதற்கு காரணம். இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புக் காரணமாக மேற்சொன்ன இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அரசாங்கம் இந்த விடயத்தில் உஷாராகக் காணப்படுகின்றது. சுற்றுலா பயணிகளைக் கவர வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு ஏனென்றால் சுற்றுலாப் பயணிகள்தான் இப்பொழுது நாட்டுக்குள் டொலர்களைக் கொண்டு வரும், பொன்முட்டை இடும் வாழ்த்துக்களாகும்.இந்த மாதத்தில் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் மொத்தம் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் வந்திருக்கிறார்கள்.

நாட்டின் பெரும்பாலான நட்சத்திர அந்தஸ்த்துள்ள விடுதிகள் மட்டுமல்ல சாதாரண விடுதிகளும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. நாட்டின் உயர்தர மதுச்சாலைகள்,தேநீர்க் கடைகள்,சிற்றுண்டிச் சாலைகள் போன்றவற்றிலும் கடற்கரைகளிலும் உல்லாசப் பயணத் தலங்களிலும் பெருமளவுக்கு சுற்றுலாப் பயணிகளைக் காண முடிகின்றது.

சுற்றுலாப் பயணிகள் அதிக தொகையாக இலங்கைக்குள் வருவதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உண்டு.இது ஒரு அழகிய நாடு.அது முதலாவது முக்கியமான காரணம். இரண்டாவது காரணம், நாட்டின் நாணயப் பெறுமதி வெகுவாகக் குறைந்துவிட்டது.இதனால் ஒரு வெளிநாட்டவர் தன்னுடைய நாணயத்தை இங்கே செலவழிக்கும் பொழுது குறைந்த செலவில் அதிக அளவு நன்மைகளைப் பெற முடியும். இக்காரனத்தால் இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக தொகையாக வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவுக்கும் மாலை தீவுகளுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கடிகள் தோன்றிய பின் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையை நோக்கி ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வெள்ளைக்காரர்களைப் போல காசை அள்ளி வீசமாட்டார்கள் என்ற ஒரு அபிப்பிராயம் சுற்றுலா விடுதி உரிமையாளர்களிடமும் உள்ளூர் வணிகர்களிடமும் உண்டு. அமெரிக்க ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளை விடவும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் சந்தை நிலவரங்கள் தொடர்பாக அதிகம் விழிப்புடன் இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.

இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் நாட்டின் தெற்குப் பகுதியை நோக்கியே போவதாக ஓர் அவதானிப்பு உண்டு. வடக்கு கிழக்கை நோக்கி வருபவர்களின் தொகை ஒப்பிட்டுளவில் குறைவு என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள விருந்தகங்கள், சுற்றுலாத் தங்கங்களின் விருந்தோம்பும் பண்பைக் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.சுற்றுலாப் பயணிகளை கவரத்தக்க விருந்தோம்பல் பண்பாடும் அதற்குரிய விருந்தோம்பல் வலை அமைப்பும் தமிழ்ப் பகுதிகளில் குறைவு என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.அவ்வாறு சுற்றுலாப் பயணிகளைக் கவரத்தக்க ஒரு சுற்றுலாப் பாரம்பரியத்தை அல்லது ஒரு சுற்றுலாப் பண்பாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான உயர் கற்கை நெறிகள் இப்பொழுது தமிழ்ப் பகுதிகளில் உண்டு.எனினும் ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் கவர்ச்சிமிகு செழிப்பான விருந்தோம்பல் பாரம்பரியம் ஒன்றைத் தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப முடியவில்லை என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.

இன்னும் சில மாதங்களில் நல்லூர் திருவிழா வருகிறது. அதையொட்டி புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகரித்த தொகையில் யாழ்ப்பாணத்தை நோக்கி வருவார்கள்.இனிவரும் மாதங்களில் நாட்டுக்கு அதிகம் வருவாயை ஈட்டித் தரப்போகும் தரப்புகளில் ஒன்றாக புலம்பெயர்ந்த தமிழர்கள் காணப்படுவார்கள்.முன்பு புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது சொந்தக்காரர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்குவதுண்டு. ஆனால் இப்பொழுது இந்தப் போக்கு மாறி வருகின்றது.புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் சுற்றுலா விடுதிகளில் தங்குவதற்கு விரும்புகின்றார்கள். உறவினர்களின் வீடுகளில் தங்குவதை விடவும் சுற்றுலா விடுதிகளில் தங்குவதை அவர்கள் விரும்பக் காரணம் என்ன?

மிகவும் துயரமான ஒரு காரணம் உண்டு. உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கும் பொழுது உறவினர்களும் நண்பர்களும் இவர்களிடம் எதையாவது எதிர்பார்க்கின்றார்கள்.அவர்கள் எதிர்பார்ப்பதை இவர்கள் கொடுக்க முடியாத போது அல்லது இவர்கள் கொடுப்பது அவர்கள் எதிர்பார்த்ததை ஈடு செய்யாத போது அங்கே அதிருப்தி உண்டாகிறது. அதனால் மனக் கஷ்டங்கள் ஏற்படுகின்றன.விடுமுறைக் காலத்தை தாய்நாட்டில் சந்தோஷமாகக் கழிப்பதற்கு என்று வரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் மேற்சொன்ன காரணத்தால் தமது விடுமுறை நாட்கள் மன அழுத்தம் மிக்கவைகளாக மாறின என்று குறைபடுகிறார்கள்.

மேலும் அங்கிருந்து வரும் முதலாம் தலைமுறை புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை.பெரும்பாலானவர்களுடைய பெற்றோர் இப்பொழுது உயிரோடு இல்லை.எனவே பெற்றோரோடு தங்க வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்குக் குறைவு. மேலும் பிள்ளைகள் வளர்ந்து விட்டன. தங்கப் போகும் வீடுகளிலும் பிள்ளைகள் வளர்ந்து விட்டன. ஒரு குறுகிய காலத்துக்குள் எல்லாரையும் உள்வாங்கும் அளவுக்கு உள்ளூர் வீடுகளின் அறைகள் போதாமல் இருக்கலாம். மேலும்,வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளைகள் “ஏசி” அறைகளைக் கேட்கிறார்கள். அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சுற்றுலா விடுதிகளில் தங்குவதற்கு ஒரு காரணம். இது போன்ற காரணங்களால் சுற்றுலா விடுதிகளுக்கு வருமானத்தை ஈட்டும் ஒரு தரப்பினராக புலம் பெயர்ந்த தமிழர்களும் மாறி வருகிறார்கள்.

எதுவாயினும் நாட்டுக்குள் வெளிநாட்டுக் காசு வருகிறது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயங்கும் ஓர் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அது ஒரு வரப் பிரசாதம். அது நாட்டின் டொலர் கையிருப்பைக் கூட்டுகின்றது. அது போலவே வெளிநாட்டுக்குச் சென்ற தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் அனுப்பும் காசும் நாட்டின் டொலர் கையிருப்பை அதிகப்படுத்துகிறது.அண்மைக் காலங்களில் 10பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாடுகளில் தொழில் புரிவோர் அனுப்பியிருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இவை தவிர அரசாங்கம் வரிகளை உயர்த்தியிருக்கின்றது.மின்சாரக் கட்டணம் தொலைதொடர்புக் கட்டணம் போன்ற உள்ளூர்ச் சேவைக் கட்டணங்களை அதிகப்படுத்தியுள்ளது. இவற்றால் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கின்றது. இவை போன்ற பல காரணங்களினாலும் நாட்டின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் நிமிர்த்தப்படுகிறது என்று ஓர் உணர்வு ஆங்கிலம் தெரிந்த படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் ஏற்பட்டு வருகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு பச்சை மிளகாய் ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு மேல் போனது.ஆனால் இப்பொழுது உள்ளூர் சந்தைகளில் 100 ரூபாய்க்கு சற்று அதிகமாகப் போகின்றது. அப்படித்தான் தக்காளிப் பழம் பெரியது ஒரு கிலோ 800 ரூபாய்க்கு மேல் போனது. இப்பொழுது 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை போகின்றது.

மரக்கறி விலை குறைகிறது. கடல் உணவுகளின் விலையும் குறைக்கின்றது. அரசாங்கம் சாதாரண சிங்கள மக்களைக் கவரும் நோக்கத்தோடு நெத்தலிக் கருவாடு, சீனி,பருப்பு போன்றவற்றின் விலைகளை அவ்வப்போது குறைத்து வருகின்றது.ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் பொழுது மேலும் பல சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலை நோக்கி நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க கடுமையாக உழைக்கின்றார். அவர் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக வருவதை மேற்கு நாடுகள் விரும்புகின்றன.பன்னாட்டு நாணய நிதியம் போன்ற உலகப் பெரு நிறுவனங்களும் விரும்புகின்றன. எனவே ஜனாதிபதித் தேர்தலை நோக்கி அவர் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு மேற்படி தரப்புகள் அவருக்கு உதவும்.

எனினும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் என்று கூறப்படுகின்றவை சாதாரண சிங்கள மக்களைச் சென்றடைந்தனவா என்ற கேள்விக்கு விடை முக்கியம். ஏனெனில் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதற்குரிய பிரதான வாக்காளர்கள் சிங்களக் கிராமங்களில்தான் இருக்கிறார்கள். சிங்கள பௌத்த அரசியலின் வாக்கு வங்கியின் இதயம் கிராமங்களில்தான் உண்டு. கிராமப்புற வாக்காளர்கள் அரசாங்கத்தைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதுதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப் போகின்றது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை – பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என கோட்டாபய தெரிவித்தார் – மல்கம் ரஞ்சித்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் உரையாற்றியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு நெருக்கமான அமைப்புகளை சேர்ந்த நபர்களை கைதுசெய்யவேண்டியிருக்கும் என்பதால் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை தன்னிடம் தெரிவித்தார் என கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விசாரணைகளை ஆரம்பிக்கும் ஆர்வத்தை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை எனவும் கர்தினால் விமர்சனத்தை முன்வைத்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் கண்டறிய சுதந்திரமானதும், நியாயமானதுமான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் நீதியை மறைத்து வைக்க முடியாது எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தேவாலயத்தில் இன்று காலை 8.40க்கு விசேட ஆராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் இந்த ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அதேநேரம், நாடளாவிய ரீதியிலுள்ள பல தேவாலயங்களிலும் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக விசேட ஆராதனைகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

இந்திய அதிகாரிகளை மீண்டும் சந்திக்கும் முயற்சியில் மைத்திரி

தாய்லாந்தில் உள்ள தமது நண்பரான இரத்தினக்கல் வர்த்தகர் முகமது அக்ரமின் அழைப்பிலேயே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு அண்மையில் தாய்லாந்து சென்றிருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் மைத்திரிபால இலங்கையில் இல்லாத நேரத்தில், அவரின் உதவியாளர்கள் என தங்களை வர்ணித்துக் கொள்ளும் இரண்டு பேர் முன்னாள் ஜனாதிபதியின் சார்பாக இந்திய இராஜதந்திரிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.

சிறிசேன ஒப்புதல்

இது சந்திப்புக்களை நடத்துவதற்கும், அவற்றை நடத்துவது சாத்தியமா என்பதை உறுதி செய்வதற்குமான குறுஞ்செய்திகளாகும். எனினும் இந்த சந்திப்புகளுக்கு சிறிசேன ஒப்புதல் அளித்தாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது.

அத்துடன் இந்திய தரப்பின் பதில் என்னவென்பதையும் ஆங்கில செய்தித்தாள் குறிப்பிடவில்லை. முன்னதாக, உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களுக்கு பின்னணியின் இந்தியா செயற்பட்டதாக மைத்திரிபால இலங்கையின் குற்றப்புலனாய்வுத்துறையிடம் முறையிட்டுள்ளார் என்ற தகவல்களின் மத்தியிலேயே இந்த குறுஞ்செய்தி தகவலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி : விசாரணைகளை கேள்விக்குள்ளாக்கும் தார்மீக உரிமை எதிர்க்கட்சிக்கு கிடையாது – சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பதை மூன்று சர்வதேச விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கேள்வி எழுப்பும் உரிமை எதிர்க்கட்சிக்கு கிடையாது.

ஏனெனில், முஸ்லிம் வாக்குகளை இழக்கக் கூடாது என்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு எதிராக செயற்படவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலததில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியிலும் முன் கொண்டு செல்லப்பட்டது.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் அறிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்து வாக்குமூலம் வழங்கலாம். பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் சிறையில் உள்ள நௌபர் மௌலவி பிரதான சூத்திரதாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில் கத்தோலிக்க தேவாலயங்களில் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மூன்று விசாரணைகளில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 23 ஆயிரம் குற்றச்சாட்டுக்களுடன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இவ்விவகாரத்தில் அரசாங்கத் தரப்பில் எவ்வித தாமதமும் கிடையாது.நீதிமன்ற கட்டமைப்பிலேயே தாமதம் காணப்படுகிறது ஆகவே விசாரணைகளுக்கு விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமது அரசாங்கத்தில் நீதியை பெற்றுக்கொடுப்பதாக தேசிய மக்கள் சக்தியினர் கத்தோலிக்க சபையிடம் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாகவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்ட இப்ராஹிம் என்பவரின் இரு புதல்வர்கள் தற்கொலைதாரிகளாக மாறி குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.

அதேபோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று தெமட்டகொட பகுதியில் உள்ள இப்ராஹிமின் வீட்டுக்கு பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பினர் சென்ற போது அவரது மருமகள் குண்டை வெடிக்க செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

ஆகவே இவர்கள் உண்மையான சூத்திரதாரியை நன்கு அறிந்திருந்தார்கள். ஆகவே மக்கள் விடுதலை முன்னணியினர் இப்ராஹிமிடம் இவ்விடயம் தொடர்பில் வினவ வேண்டும்.

இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் எதிர்க்கட்சியிர் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்கள்.

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது. பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் நன்கு அறிந்திருந்தும் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் அப்போதைய அரசாங்கம் எடுக்கவில்லை.

முஸ்லிம் வாக்குகளுக்காக இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை அலட்சியப்படுத்தியது. இதன் விளைவாகவே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் உண்மையான முஸ்லிம்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தார்கள்.

குணடுத்தாக்குதல் தொடர்பில் கேள்வி கேட்கும் உரிமை தற்போதைய எதிர்க்கட்சிக்கு கிடையாது. புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தால் எவ்வித மாற்றமும் ஏற்பட போவதில்லை என்றார்.

Posted in Uncategorized

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள். கடந்துவிட்டது

இலங்கையின் மிக உயரமானதும் உலகில் நான்காவது உயரமானதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானின் சித்திரத் தேர் 20.04.1986 அன்று சிங்கள இராணுவத்தால் தீயிட்டு அழிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தீயிட்டு எரிக்கப்பட்ட பின்னர் தேரின் சில்லுகளின் இரும்பு வளையங்களும் தேரின் இரும்பு அச்சும் மட்டுமே எஞ்சியது குறிப்பிடத்தக்கது, அந்த சில்லின் வழையங்கள் சுமார் ஆறு அடி உயரம் சராசரி ஒரு மனிதனுடைய உயரத்தை விட பெரிதாகும்.

இந்த தேர் 1984 ஆம் ஆண்டு முதல் முதல் இழுத்தார்கள். ஆனால் 1986 ஆம் ஆண்டு இழுக்க முதல் தேர் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டது.

இத் தேர பல நிதி நெருக்கீட்டிற்கு மத்தியில் செய்து முடிக்கப்பட்டது இத் தேருக்கு வடம் வாங்க காசு இல்லாத நிலையில் பூசாரியின் கனவில் வந்து முருகன் சொன்னதாக பக்தர்களோடு அக்கடற்கரைக்கு சென்று பார்தபோது கடலில் வடம் ஒன்று மிதந்து வந்த்து அதை எடுத்துவந்தே தேரில் போட்டு வொள்ளோட்டம் விட்டார்கள் அவ் வடம் தேர்முட்டியில் இருந்தபோது அவ் வடமும் தேருடன் சேர்ந்து எரிந்துவிட்டது

இத் தேரில் 1008 மணிகள் பெருத்தி இருந்தார்கள் இத் தேர் இழுபடும்போது கலீரென மணிஒசை அச்சுவேலி சந்திவரை கேட்கும் என்று பெரியவரகள் சொல்லுவார்கள்

Posted in Uncategorized

பொது வேட்பாளர் விடயத்தை குழப்ப பலர் சதி – ரெலோ யாழ்.பொறுப்பாளர் சபா.குகதாஸ் குற்றச்சாட்டு

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பில் தாயக புலம்பெயர் தமிழர்களிடையே ஆதரவு பெருகி வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு பல தரப்பின் நிகழ்ச்சி நிரல்களில் தமிழ்த் தரப்பில் சிலர் சதி முயற்சியில் இறங்கியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளருமான சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசுடன் இணைந்துள்ள தமிழ் முகவர்கள் வழமை போன்று அரசுக்கு சார்பாக பொது வேட்பாளர் விவகாரத்தை விமர்சிப்பதை தாண்டி தமிழ்த் தேசியக் கட்சிகளில் இருப்பவர்களும் வேறு சிலரும் மறைமுக அரசின் மற்றும் வெளிச் சக்திகளின் முகவர்களாக மாறி எதிரான கருத்துக்களை ஊடகப் பரப்பில் முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து பொது வேட்பாளர் விடயத்தில் ராஜபக்சக்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டார். இவரைப் போன்று ஒரு சிலர் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களிடையே ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முன்பாக உரியவர்களின் அனுமதி இன்றி வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்பது போன்ற சதிகளில் குதித்துள்ளனர்.

தமிழர் தரப்பு எவ்வகையான தீர்மானங்களையும் எடுத்தாலும் அதனை தென்னிலங்கையில் சிங்கள பேரினவாதம் இனவாதமாக மற்றும் பிரிவினைவாதமாக பார்க்கும் என்பதற்காக ஒற்றுமையாக வெளிப்படுத்தும் ஐனநாயக முடிவை அதற்கான சந்தர்ப்பத்தை தவற விட முடியாது. விமர்சனங்கள், சதிகளை கடந்து அனைவரும் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பெறக்கூடியவரை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும் – ஸ்ரீநேசன்

வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் தமிழ் பேசுகின்ற மக்களின் விருப்புக்களைப் பெற்ற 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் (Gnanamuthu Sreenesan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) செட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் நேற்று (16.04.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரியாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் சமூகமும், புத்திஜீவிகளும், இந்த தேர்தலை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்கின்றார்கள்.

இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ளன. ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டு 46 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடக்கும் நிலமை காணப்படுகின்றது.

30 வருடகாலமாக ஆயுதரீதியாகப் போராடினார்கள். பலநாடுகளின் யுக்திகளின் மூலமாக அந்த போராட்டமும் மௌனிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.

இராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்தியாவின் (India) நிர்ப்பந்தத்தின் மூலம் 1987ஆம் ஆண்டு மாகாணசபை முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த மாகாணசபையிலும் கூட இலங்கை இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு இல்லை.

மாகாணசபை தேர்தல் நிறுத்தப்பட்டு 6 வருடங்களாகின்றன. மயிலத்தமடு மேய்ச்சல்தரைப் பிரச்சினையைக்கூட மாகாணசபை முறையால் தீர்க்கப்படாமலுள்ளன.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக்கப்படல் வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குக்கூட 13ஆவது திருத்ததின் மூலம் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு தீர்க்க முடியவில்லை. 1987ஆம் ஆண்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை எமக்குத் தீர்வாக அமையவில்லை.

தற்போதைய நிலையில 3 ஜனாதிபதி வேட்பாளர்கள் முகம் காட்டுகின்றார்கள். நான் 13ஆவது திருத்தத்தையோ, சமஸ்ட்டியைத் தருவேன் என்றோ கூறமாட்டேன் என அனுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayaka) தெரிவிக்கின்றார். 13ஆவது திருத்தச் சட்டத்தை தரலாம் என சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவிக்கின்றார் ஆனாலும் சிங்கள பேரினவாதம் குறுக்கிடுகின்றபோது பொலிஸ் அதிகாரத்தை அவரும் தரக்கூடிய வாய்ப்பு இல்லை.

தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.

மகாணசபை, உள்ளுராட்சிமன்றம் போன்ற தேர்தல்கள் இன்னும் நடாத்தப்படவில்லை. எனவே மக்கள் தங்களது பிரதிநிதிகளைக்கூட தெரிவு செய்ய முடியாத ஜனநாயக முறை இங்கு காணப்படுகின்றது. தேர்தல் தொடர்பில் சுயவிருப்பு வெறுப்புக்களைப் பார்த்துக் கொண்டிருக்கினார்கள்.

மேலும், நாடு வங்குறோத்து நிலையில் உள்ள இக்காலகட்டத்தில் உலக நாடுகளிலிருந்து கடன்பெற்று ஆங்காங்கே சில அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன.

கச்சதீவை இந்தியா மீள பெறவேண்டும் என எழுந்துள்ள சர்சையானது இலங்கையின் இறைமைக்கு ஓர் சவால் விடுகின்ற விடயமாகவும் கடற்அறாழிலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுகின்றதாகவும் அமைந்துள்ளது.

இது இந்திய தேர்தலுக்காக கொள்ளப்படுகின்ற உத்தியாகவே பார்க்கப்படுகின்றது. அந்நாட்டில் தேர்தல் முடிவுற்றதும் இவ்விடயம் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை – சிறீதரன் எம்.பி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு பொது தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற புதுவருட கைவிசேஷ நிகழ்வைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழர்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம்.

ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை. ஆதரவளித்த பல பேர் தோல்வியடைந்தனர்.

வெற்றி பெற்ற மைத்திரி உள்ளிட்டோர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை பெற்றுத்தரவில்லை. இதனால் தான் நீண்ட நெடும் அனுபவத்தின் அடிப்பையில் பெரும்பாலனவர்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்து நிலவி வருகிறது.

தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும். தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதை சர்வதேச ரீதியில் ஒரு செய்தியாள சொல்ல முடியும் என தெரிவித்தார்.

கச்சத்தீவு தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார். இந்தியாவின் ஆளுகைக்குள் கச்சதீவு இருந்தாலும் ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கைக்குரியது.

வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் தொழிலில் ஈடுபடுகின்றனர். தமிழ் நாட்டில் இருக்கின்ற சகோதரர்கள் ஈழத்தின் தொப்புல் கொடி உறவுகள் பாதிக்க விடமாட்டார்கள். தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரமே இது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.