தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. மாறாக, இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்கள் வரலாற்று ரீதியில் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கானது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து நேற்று (10) மாலை வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியம் இன்று பலவாறாக அகத் துண்டாடலுக்கு உட்பட்டு வருகிறது. இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கும் ஆட்சியில் அமர்பவர்களுடன் பேசுவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கான நிலைமைகளை பலமிழக்கச் செய்துவிடுமோ என்ற நியாயபூர்வமான அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. அந்த அச்சத்தில் நியாயபூர்வமான யதார்த்தம் உள்ளது.
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இனமான நாம் எமது அரசியல் அபிலாசைகளை சாதாரண ஜனநாயக உரிமைகளுடன் மட்டும் மட்டுப்படுத்திவிடமுடியாது.
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தளவு தூரம் ஆட்சியில் அமரக்கூடிய ஒருவருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சிலர் அல்லும் பகலும் அறை போட்டு சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர்.
அவர்கள் இந்த நாட்டில் வெல்லக்கூடிய ஒருவரை தேடிப்பிடித்து சலுகைகளைப் பெற்று பெற்று சகித்து வாழ்வோம் என்ற மனநிலையில் இனத்தினை அடைமானம் வைக்கின்றனர்.
நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையான எண்ணிக்கையில் வாழ்கின்றனர் என்பதற்காக எண்ணிக்கையில் குறைந்த அளவுடைய நாட்டின் தேசிய இனமான தமிழ் இனம் இன உரிமைகளை விற்று வாழ முடியாது. சிங்கள பேரினவாதிகளுக்கு நோகக்கூடாது என்று வாழ்பவர்கள் எம்மிடத்தில் அதிகரித்துவிட்டனர். மக்களின் இட்சியத்தினையும் தியாகத்தினையும் விற்றுப் பிழைப்பதில் முண்டியடிக்கின்றனர்.
மண்ணுக்காக எத்தனையோ தியாகங்களை எம் இனம் மேற்கொண்டிருக்கிறது. அடிப்படையில், எமது மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை வலியுறுத்தியும், எமக்கு சமஸ்டி அடிப்படையிலான உலகம் ஏற்றுக்கொண்ட அரசியல் தீர்வினை முன்வைக்கக் கோரியும் நாம் பொது வேட்பாளரை முன்நிறுத்திச் செயற்படுவது நியாயபூர்வமாகச் சிந்திக்கும் எந்தவொரு சிங்களப் பிரஜைக்கும் எதிரான செயற்றிட்டம் கிடையாது. சிங்கள முற்போக்கு சக்திகளும் சொந்த தாய்நாட்டில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் கருத்து வெளிப்பாட்டு உரிமைக்கும் ஜனநாயக உரிமைக்கும் மதிப்பளித்து வாக்களிக்க முடியும்.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் எமது அரசியல் அபிலாசைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இன்றும் உள்ள நிலையில் ஒருமித்து தமிழ் பொது வேட்பாளரின் சின்னமான சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கடமையினை நிறைவேற்றுவோம் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.