Hot News
Home » கட்டுரைகள் » வெஞ்சிறையில் வஞ்சகமாக கொல்லப்பட்ட எம் தலைவர்கள் – `ரெலோ` விந்தன்

வெஞ்சிறையில் வஞ்சகமாக கொல்லப்பட்ட எம் தலைவர்கள் – `ரெலோ` விந்தன்

கறுப்பு ஜுலை (ஆடிக்கலவரம்) என்பது ஜுலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துக்களை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும்.

இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கைப் படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததன் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந் நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு ஜுலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகிறது.

14a-borella-rioters-1983-burning-1200x550

கறுப்பு ஜுலை என்றழைக்கப்படும் ஆடிக்கலவரம் இடம்பெற்று முப்பத்தைந்து வருடங்களாகின்றன. இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் என்றென்றைக்கும் மறக்கமுடியாத கறைபடிந்த வரலாற்று பக்கமாக 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அமைந்துவிட்டது. தலைநகர் கொழும்பு உட்பட தென்னிலங்கை எங்கும் தொடர்ந்து மூன்று தினங்களுக்கும் மேலாக தமிழ் மக்களது உயிர்களும், உடைமைகளும் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் வீதிகளில் உயிருடன் போட்டு எரிக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் காடையர் கும்பல்களால் பாலியல் வல்லுறவுக் குள்ளாக் கப்பட்டு எரிக்கப்பட்டார்கள். தமிழர்களின் சொத்துக்கள் பெருமளவில் கொள்ளையிடப் பட்டும், ஏனையவை எரித்தும் நாசமாக்கப்பட்டன. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதலாவது நிலக்கண்ணி வெடித் தாக்குதல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 1983 ஜுலை 23 ஆம் திகதி இடம்பெற்றது.

இத் தாக்குதலில் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட மாத்தையா, கிட்டு, அருணா, சாள்ஸ் அன்ரனி என பலர் பங்குபற்றிய போதும் இத் தாக்குதலுக்கு செல்லக்கிளி என்னும் போராளியே தலைமை வகித்தார் எனச் சொல்லப்படுகின்றது.

BJ052013

இந்தத் தாக்குதல் சம்பவத்திலேயே அந்தச் செல்லக்கிளி உயிரிழந்தார். தமிழ்த் தேசிய ஆயுதப் போராட்ட வரலாற்றில் பல்வேறு பரிமாணங்களையும் இந்த தாக்குதல் சம்பவம் உருவாக்கியது என்பதனையும் எவரும் மறந்துவிட முடியாது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த படையினரின் சடலங்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டமையை அடுத்து, அங்கிருந்து வெளியேறிய காடையர் கும்பல் பொரளையிலுள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்களை சூறையாடி தீவைத்தனர். அந்த இனவாதத் தீ நாடு முழுவதும் சில தினங்கள் பற்றியெரிந்தது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பலியெடுத்தது.

நாடு முழுவதும் இனவாதத் தீயில் எரிந்துகொண்டிருந்தபோது அப்போதைய நிறைவேற்று அதிகாரத்துடன் ஆட்சியதிகாரத்திலிருந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ என்று அறைகூவல் விடுத்தார். ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் இந்த அறைகூவல் இனவாதக் கும்பல்களின் அடாவடித்தனத்தை மேலும் மேலும் உற்சாகப்படுத்தியது. அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் எந்தவொரு பாதுகாப்புமின்றி தஞ்சமடைய வைத்தது.

அகதி முகாம்களில் தஞ்சமடைந்த அப்பாவி மக்களையும் இனவாதக் கும்பல் விட்டு வைக்கவில்லை. தேடித்தேடி அழிக்க முற்பட்டது. அப்போதைய ஆட்சியாளர்களின் உரிய வழிநடத்தல் இல்லாமையால் பொலிஸாராலோ படையினராலோ வன்முறைக் கும்பல்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமையேற்பட்டது.

இதனையடுத்து அயல் நாடான இந்தியாவின் தலையீடு காரணமாக லங்காராணி கப்பல் மூலம் உடுத்த உடுப்புடன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வடக்கு. கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். தீயில் எரிந்து சுடுகாடாக மாறிய தலைநகர் கொழும்பை சுத்தப்படுத்தக் கூட அப்போதைய ஆட்சியாளர்களுக்கு பலவாரங்கள் நீடித்தன என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடைச் சிறையில் நடந்த கொடூரம்

IMG-2ceaab682838dfe9e036859b0b85934a-V

இதனை விட மிகப்பெரும் கொடூரம் அன்றைய ஆட்சியாளர்களால் வெலிக்கடைச் சிறைச்சாலையில் நிறைவேற்றப்பட்டது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது இரு தினங்கள் திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதல் சம்பவத்தில் ரெலோ இயக்கத்தின் முன்னோடிகளான தமிழீழ தேசபிதா தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணி போராளிகளான ஜெகன், தேவன் உட்பட போராளிகளான நடேசுதாசன், சிவபாதம் மாஸ்ரர், சிறீக்குமார், குமார், மரியாம்பிள்ளை, குமாரகுலசிங்கம் மற்றும் காந்திய இயக்கத் தலைவர் டாக்டர் இராஜசுந்தரம் உட்பட 53 போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

வெலிக்கடைச் சிறைச்சாலையின் மையப்பகுதிக்கு நூற்றுக்கணக்கான கிரிமினல் கைதிகளால் இழுத்துச் செல்லப்பட்ட குட்டிமணி கண்கள் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் பல அரசியல் கைதிகள் படுகாயமடைந்த நிலையில் பின்னர் மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கும் காடையர்கள் கொந்தளிக்க மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்கள்.

அதன் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினராலும், உள்ளேயிருந்த அரசியல் கைதிகளின் துணையுடனும் உடைக்கப்பட்டு, மாணிக்கதாசன், வரதராஜபெருமாள், டக்ளஸ் தேவானந்தா, பரந்தன் ராஜன் மற்றும் நித்தியானந்தன் அவரது மனைவி நிர்மலா நித்தியானந்தன், அருட்தந்தை சிங்கராயர் அடிகளார் ஆகிய அரசியல் கைதிகளும் தப்பிச் சென்றனர். இவையெல்லாம் எமது வாழ்நாள் குறிப்பேட்டின் மறக்கமுடியாத வரலாற்று உண்மையாகும்.

வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலைச் சம்பவம் அன்றைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு முன்னெடுத்த கொலைக் களமாகும். இந்த கொலை வெறியாட்டம் நடத்தியவர்கள் 1982 களில் தனது மனைவியையும் குழந்தைகளையும் தன்னுடன் இணைக்குமாறு கோரி இத்தாலிய விமானமொன்றை கடத்த முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோமபால ஏக்க நாயக்க தலைமையிலான கிரிமினல் கைதிகளேயாவர் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொரு விடயமாகும்.

அதேநேரம் 1983 கறுப்பு ஜுலைக் கலவரம் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களாக இருந்த ஆர்.பிரேமதாஸ, காமினி திசாநாயக்க, வீரசிங்க மல்லிமாராச்சி, சிறில் மத்யூ, கிறிஸ்ரி சில்வா, வின்சன் பெரேரா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளராக இருந்த கணேசலிங்கம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இன்று இவர்களில் எவரும் உயிருடன் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

IMG-9c435fc0d6f13a780cba52fd241ff675-V

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சியே தீவிர முனைப்புடன் இனவாத அரசியல் கருத்திட்டங்கள் முன்னெடுத்தமை வரலாற்றில் உண்மையாகும். அதற்காக ஆட்சியிலிருந்த ஏனைய பெரும்பான்மைக் கட்சிகள் சிறுபான்மையான மக்களை அவர்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்ய முன்வந்த வரலாறும் மிகவும் அரிது என்பதையும் மறந்துவிட முடியாது.1983 கறுப்பு ஜுலையின் தீச்சுவாலைகள் கொழுந்துவிட்டு எரிந்த ஜுலை 23,24,25 அன்றைய தினங்கள் மனதினை உள்ளுறுத்தி இன்றென எழுந்து கொண்டிருக்கின்றது. இனவாதத்தை இலங்கையின் அரசியல் வரலாற்றில் கலந்துவிட்ட பெருமை ஐக்கிய தேசியக் கட்சிக்கே மிகவும் உரித்துடையது.

கடந்த மூன்று தசாப்பத காலமாக எமது நாட்டை வாட்டி வதைத்து பெரும் துயர் கொள்ள வைத்த துயரங்கள் இன்று இல்லாமல் போனபோதும் நிரந்தர அமைதியை உறுதியாகக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை நோக்கிய நகர்வுகள் கூனிக்குறுகி இழுபட்டுச் செல்வதும் அரசியல் கட்சிகளின் நிலையற்ற தளர்வுப் போக்குகளும் கவலை தரும் விடயங்களாகவே எம்முன்னால் காணக்கிடைக்கிறது.

வடக்கு கிழக்கு மட்டுமன்றி எமது முழு நாட்டிற்கும் பெரும் சவாலாக இருந்த மூன்று தசாப்பத காலப்பகுதிக்கும் மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம், வன்னி இறுதிப் போர் நடவடிக்கைகளை அடுத்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் அதனால் ஏற்பட்ட இழப்புக்களை கட்டியெழுப்ப இன்னும் நீண்ட காலம் தேவை என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.

ஆக்கம் :- என்.விந்தன் கனகரட்ணம் (வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினர். )