Hot News
Home » செய்திகள் » யுத்த காலத்தில் வவுனியா மாவட்டத்தில் 20 மேற்பட்ட கிராமங்களை உருவாக்கினோம்: தாஸ்நகரில் `ரெலோ` வினோ தெரிவிப்பு

யுத்த காலத்தில் வவுனியா மாவட்டத்தில் 20 மேற்பட்ட கிராமங்களை உருவாக்கினோம்: தாஸ்நகரில் `ரெலோ` வினோ தெரிவிப்பு

வவுனியா மாவட்டத்தில் யுத்தம் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதிகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைக்கழகம் என்பவற்றினால் பல குடியேற்ற கிராமங்களை உருவாக்கியுள்ளோம் என வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா தாஸ்நகரில் விபுலானந்த முன்பள்ளி நேற்று (24) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

ஒரு காலத்திலே வீடிழந்து, நிலமிழந்து இடம்பெயர்ந்து ஏதிலிகளாக அங்கலாய்த்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை ஏதோ ஒரு வகையிலே தற்காலிகமாகவேனும் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு அன்றைய காலங்களிலே குறிப்பாக யுத்தம் மிக மோசமாக நடந்து கொண்டிருந்த காலப் பகுதியிலே தமிழ் ஈழ விடுதலை இயக்கமாகிய எங்களாலும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினாலும் வவுனியா மாவட்டத்திலே பல்வேறு குடியேற்ற திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.

அப்போது அரசாங்க அதிகாரிகளால் சட்டத்திற்குட்பட்ட வகையிலே தான் குடியேற்றங்கள் அமையக் கூடிய சூழ்நிலை இருந்தாலும் கூட ஏராளமான இடம்பெயர்ந்த மக்கள் இந்த யுத்தம் முடியும் வரைக்கும் சமாதானம் நிலவும் வரைக்கும் தற்காலிகமாகவேனும் நாங்கள் குடியேற்றம் செய்ய வேண்டும். அதுவரைக்கும் அவர்களுக்கான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கோடு, நான் நினைக்கிறேன் வவுனியா மாவட்டத்திலே இருபதுக்கும் மேற்பட்ட குடியேற்ற கிராமங்களை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

அவர்களுக்கு சட்டத்திற்கு புறம்பான வகையில் என்றாலும் சரி நாங்கள் அவர்களை குடியேற்றி அவர்களுக்கான வசதிகளை எங்களுடைய அப்போதைய போராட்ட இயக்கங்களாக இருந்தாலும் சரி எங்களால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கான வசதிகளையும், வாய்ப்புக்களையும் வழங்கியிருந்தோம்.

அன்று நாங்கள் இது போன்ற கிராமங்களை உருவாக்கியிருக்காமல் விட்டிருந்தால் இன்றும் கூட அதே முகாம்களிலோ அல்லது வெவ்வேறு இடங்களிலோ கஷ்டமான மிகவும் துன்பமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள் என்பது எமக்கு தெரியும் என மேலும் தெரிவித்தார்.