Hot News
Home » செய்திகள் » ஐ.நா. பிரதிநிதியுடன் நீதியரசர்கள் சந்திப்பு; செயலாளர் அகமட் ஜவாத்தை பதவி நீக்க மைத்திரி உத்தரவு

ஐ.நா. பிரதிநிதியுடன் நீதியரசர்கள் சந்திப்பு; செயலாளர் அகமட் ஜவாத்தை பதவி நீக்க மைத்திரி உத்தரவு

கொழும்புக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையிடும் நிபுணர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல், (Clement Nyaletsossi Voule) இலங்கையின் உயர் நீதிமன்ற நீதியரசர், ஜயந்த ஜயசூரிய, நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள ஆகியோரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்த வெளிவிவகார அமைச்சின் மேதிகச் செயலாளர் அகமட் ஜவாத் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார். உடனடியாக மேலதிக் செயலாளர் பதவியில் இருந்து விலக்குமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நீதித்துறை நீதியரசர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றுப் புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார். 

அத்துடன் அகமட் ஜவாத் பதவி நீக்கப்பட வேண்டுமென மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்சவும் நாடாளுமன்றத்தில் கோரியிருந்தார்.

ஆனால், ஐநா சிசேட அறிக்கையிடும் நிபுணர் விவகாரத்தில் வெளியுறவு அமைச்சு தவறுகள் எதனையுமே செய்யவில்லையென அமைச்சர் திலக்மாரப்பன இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

எனினும் அகமட் ஜவாத் உடனடியாகப் பதவி நீக்கப்பட வேண்டுமென மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல், கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலரைச் சந்தித்து வருகின்றார்.

இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆலோசித்து வருகின்றார்.

வெளியுறவு அமைச்சின் செயற்திட்டம் ஒன்றையே அகமட் ஜவாத் மேற்கொண்டார். இலங்கை நீதியமைச்சர்,நீதியரசர்கள், நீதித்துறைசார்ந்த உயர் அதிகாரிகளை கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் எதிலுமே அகமட் ஜவாத் சுயமாக ஈடுபடவில்லையென்று வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன கூறியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 2011 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதலில் சிங்களக் கைதியொருவர் கொல்லப்பட்டிருந்தார். கட்டுநாயக்காவில் சுதந்திர வர்த்தக வலைய ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் றொசான் சானக என்ற இளைஞன் கொல்லப்பட்டிருந்தார். 2012 ஆம் ஆண்டு கம்பஹா ரதுபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த விவகாரங்கள் குறித்த விசாரணைகள் தொடர்பாகவே கிளெமென்ற் நயாலெட்சோசி வூல், பிரதம நீதியரசர், நீதியமைச்சர், மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.

இந்த நிலையில் மேலதிகச் செயலாளரை பதவி நீக்குமாறு மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள உத்தரவு மகிந்த ராஜபக்ச தரப்பின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவே அமைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுத்தியுள்ளது.

கொழும்பில் சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவே பிரதம நீதியரசர். நிதியமைச்சர் மற்றும் நீதியமைச்சின் அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.

வடக்கு- கிழக்கில் ஈழத் தமிழர்களின் சுதந்திரமான நடமாட்டங்களில் உள்ள பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை நீதிபதிகளுடன் அவர் இந்தச் சந்திப்புக்களை மேற்கொள்ள்வில்லையென கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளன.