Hot News
Home » கட்டுரைகள் » தலைக்கு மேல் போய்விட்ட வெள்ளம்

தலைக்கு மேல் போய்விட்ட வெள்ளம்

இலங்கைத் தீவு, தெரிந்தோ தெரியாமலோ, சர்வதேச அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது என்பதை இப்போது எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற நிலைக்கு வந்து விட்டனர்.

கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்றன சீனாவின் கைகளுக்குச் சென்றதும், ஆட்சி மாற்றத்தில் மேற்குலகின் செல்வாக்கு இருந்ததும், அதையடுத்து நடந்த நிகழ்வுகளும், இந்தியப் பெருங்கடலில், சர்வதேச சக்திகளின் அதிகாரப் போட்டிக் களமாக இலங்கையை மாற்றி விட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கையில் இருப்பதைச் சுடடிக்காட்டி, அது எதிர்காலத்தில் சீனாவின் இராணுவத் தளமாக மாற்றமடையும் ஆபத்து இருப்பதாக இந்தியா, அமெரிக்கா, மற்றும் பல்வேறு மேற்குலக நாடுகளும் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்து வருகின்றன.

அம்பாந்தோட்டையில் இராணுவத் தளத்தை அமைக்கும் எண்ணம் இல்லை. அது முற்றிலும் வணிக நோக்கம் கொண்டது என்று சீனா அந்தக் குற்றச்சாட்டுகளை முற்று முழுதாக நிராகரித்து வந்தாலும், மேற்குலகமோ இந்தியாவோ அதனை நம்பத் தயாராக இல்லை.

முன்னதாக சீனா, BRI எனப்படும் கடல்சார் பட்டுப்பாதைத் திட்டத்தையும் கூட, முற்றிலும் வணிக நோக்கம் கொண்டது என்று தான் கூறியது. அண்மையில் தான் சீன பாதுகாப்பு அமைச்சர், அது முற்றிலும் வணிக நோக்கம் கொண்டது அல்ல, இராணுவ நோக்கமும் அதில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டிருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில், BRI கூட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பாக இலங்கையுடன் சீனா தொடர் பாதுகாப்பு விவகாரக் கூட்டங்களை நடத்தி வருகிறது என்பது பலருக்கும் தெரியாத சங்கதி.

கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி இந்த பாதுகாப்பு கலந்துரையாடலின் மூன்றாவது சுற்று கூட்டம் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சுக் கட்டடத்தில் இடம்பெற்றிருந்தது. அதில், பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடற்படைத் தளபதி, இராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

சீனத் தூதுவர் செங் ஷியுவான், மற்றும் சீன வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டுப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லியூ ஷோபின்  தலைமையிலான சீன அதிகாரிகள் குழுவொன்றும் இதில் பங்கேற்றிருந்தது.

இதுபோன்ற நிகழ்வுகளின் ஊடாக இலங்கையில் சீனா தளத்தைக் கட்டியெழுப்ப முனைகிறது என்ற சந்தேகங்கள் எழுவது இயல்பு.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது எதையும் முன்கூட்டியே அனுமானித்து மேற்கொள்ளப்படுவதேயன்றி, சண்டை தொடங்கிய பின்னர் தயார்படுத்துவது அல்ல.

அந்தவகையில், சீனாவின் எதிர்காலத் தளங்களாக மாறக் கூடிய இடங்களை மேற்குலகமோ இந்தியாவோ கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது.

அதனால் தான், தமது ஒவ்வொரு நகர்வின் போதும், அம்பாந்தோட்டை துறைமுகம் மீதான அச்சத்தை மேற்குலகமும், இந்தியாவும் வெளிப்படுத்தி வருகின்றன.

அண்மையில்  சீனக் கடற்படையின் பங்கு தொடர்பான விபரங்களுடன், சீன பாதுகாப்பு அமைச்சு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தது, அந்த அறிக்கை வெளியிடப்பட்ட மறுநாள், புதுடெல்லியில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய இந்திய கடற்படையின் தளபதி, அட்மிரல் கரம்பீர் சிங், போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் தேவை என்று வலியுறுத்தியிருந்தார்.

அவர் தனது உரையிலும் கூட, அம்பாந்தோட்டையை சீனா தனது தளமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார். அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், அதனை முறியடிக்கத்தக்க பலத்துடன் இருக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது.

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள, பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் என்று எல்லோருமே, அம்பாந்தோட்டை பற்றிய எதிர்கால அச்சுறுத்தலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அவுஸ்ரேலியாவின் டார்வின் நகரில் அமெரிக்கா ஒரு பாரிய கடற்படைத் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.  அதற்காக 211 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துறைமுக நகரான டார்வினில், அமெரிக்கா ஏற்கனவே 2500 மரைன் படையினரை நிறுத்தி வைத்திருக்கிறது.

இங்கு மேலதிகமாக 4500 மரைன் படையினரை நிறுத்தவும், இரண்டு பி-52 குண்டுவீச்சு விமானங்களையும், 12  எவ்-22 ரப்ரோர்ஸ் விமானங்களையும் நிறுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அத்துடன்,  USS Wasp போன்ற ஹெலிகொப்டர் தாங்கி கப்பல்கள், ஈரூடக தாக்குதல் போர்க்கப்பல்கள், உள்ளிட்ட பாரிய போர்க்கப்பல்களை நிறுத்தக் கூடிய வகையில், டார்வின் நகரில் இருந்து 25 மைல் தொலைவில், Glyde Point என்ற இடத்தில் அமெரிக்க பாரிய கடற்படைத் தளத்தை அமைக்கவுள்ளது.

இதுகுறித்து The Times இதழில் வெளியாகிய கட்டுரை ஒன்றில், பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை முறியடிக்கும் நோக்கில் இந்த தளத்தை அமைக்க  அமெரிக்கா முற்படுவதாக கூறப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தனது தளமாக மாற்றும் வாய்ப்புகள் இருப்பதையும் கருத்தில் கொண்டே, டார்வினில் தளத்தை அமைக்க அமெரிக்கா திட்டமிடுவதாக The Times வெளியிட்டிருந்த செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில் தான், சீனாவின் நகர்வுக்கு எதிர்நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இப்போது அதையும் தாண்டி, அவுஸ்ரேலியாவிலும் கூட, மறுத்தான் நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

அதாவது, இலங்கையில் சீனாவின் இராணுவத் தலையீட்டை மையப்படுத்தி, சர்வதேச அளவில் பாதுகாப்பு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற சூழல் உருவாகியிருக்கிறது.

இவ்வாறான ஒரு கட்டத்தில் இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளையும், உடன்பாடுகளையும் செய்து கொள்வதில் பல்வேறு நாடுகளும் நாட்டம் கொண்டுள்ளன.

அமெரிக்கா VFA எனப்படும் வருகைப் படைகள் உடன்பாடு, என்ற பெயரில் உடன்பாட்டை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்ட போதும், அரசியல் சிக்கல்களால் முடங்கியிருக்கிறது.

ஆனாலும், கடந்த மாத இறுதியில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

சீனாவின் இராணுவத் தலையீடுகளை தடுக்கும் அல்லது முறியடிக்கும் வகையில் இந்தியாவும் கூட இலங்கையுடனான உறவுகளை பலப்படுத்தி வருகிறது.

இலங்கை கடற்படைக்கு அண்மையில் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வழங்கியிருந்த இந்தியா, பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை இலங்கைக் கடற்படைக்கு சீனா வழங்கியதை அடுத்து, ஆழ்கடல் கண்காணிப்புக்கான விமானம் ஒன்றை வழங்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

இந்திய கடற்படையின் முக்கியமான அங்கமாக இருப்பது, டோனியர் 228 விமானங்களாகும். ஆழ்கடல் கண்காணிப்புக்காக இந்த விமானங்களை இந்திய கடற்படை பயன்படுத்துகிறது. ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் தற்போது இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கிழக்கு கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் விக்ரமசிங்க தலைமையிலான 5 அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்த மாத இறுதியில் கொச்சியில் உள்ள இந்திய கடற்படைத் தளத்துக்கு சென்றிருந்தது.

விமானிகள், பொறியாளர்களை உள்ளிட்ட இந்தக் குழுவினர், கொச்சியில் உள்ள இந்திய கடற்படையின் 550 ஆவது கடல்கண்காணிப்பு ஸ்குவாட்ரனின் செயற்பாடுகள், டோனியர் 228 கண்காணிப்பு விமானத்தின் திறன், உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

டோனியர் விமானத்தில் பயிற்சிகளைப் பெறும் விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

டோனியர் விமானம் ஒன்று கடந்த பெப்ரவரி மாதமும், கடந்த ஆண்டும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து, இலங்கை கடற்படையினர், விமானப்படையினருக்கு பயிற்சிகளையும் அளித்திருந்தது.

தற்போது, இலங்கை விமானப்படையிடம் ஒரே ஒரு ஒரு கடல் கண்காணிப்பு விமானமே உரிய கண்காணிப்பு வசதிகளுடன் உள்ளது. எனவே, டோனியர் கண்காணிப்பு விமானத்தை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இலங்கை விமானப்படை அண்மையில், 3 ஆவது இலக்க கடல் கண்காணிப்பு ஸ்குவாட்ரனை மீண்டும் செயற்படுத்த ஆரம்பித்துள்ள பின்னணியில் தான், டோனியர் -228 விமானத்தின் திறன் குறித்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

1970களில் இலங்கை விமானப்படையில் 3 ஆவது இலக்க கடல் கண்காணிப்பு ஸ்குவாட்ரன் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் பீச் கிராப்ட் மற்றும் செஸ்னா ஆகிய கடல் கண்காணிப்பு விமானங்கள், இடம்பெற்றிருந்தன.

எனினும், 1980களின் பிற்பகுதியில் இந்த ஸ்குவாட்ரனைக் கலைத்த விமானப்படை,  அதனை 8 ஆவது இலக்க இலகு போக்குவரத்து ஸ்குவாட்ரனுடன் இணைத்திருந்தது.

போர்க்காலத்தில் கூட, செயற்படுத்தப்படாத இந்த 3 ஆவது இலக்க கடல் கண்காணிப்பு ஸ்குவாட்ரன், அண்மையில் மீண்டும் திருகோணமலை சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து செயற்படத் தொடங்கியுள்ளது.

இந்த அணி்யிலேயே இந்தியாவிடம் இருந்து பெறப்படவுள்ள டோனியர் கண்காணிப்பு விமானம் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறான உதவிகள், ஒத்துழைப்புகளின் மூலமாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா போன்ற நாடுகள், சீனாவின் பக்கம் இலங்கை சென்று விடாமல் தடுக்கவும், சீனாவின் செல்வாக்கு அதிகரித்து விடாமல் தடுக்கவும் முற்படுகின்றன.

அத்துடன் இலங்கையின் கடல் கண்காணிப்புத் திறனை அதிகரிப்பதன் மூலம், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் முற்படுகின்றன.

ஆனாலும், சீனாவும் இவற்றுக்கெல்லாம் சளைத்தது அல்ல என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறது.

இவ்வாறான நிலையில், சர்வதேச அதிகார சக்திகளின் போட்டிச் சூழலுக்குள் இருந்து விலகிக் கொள்ள முடியாத நிலைக்கு, இலங்கைத் தீவு தள்ளப்பட்டு விட்டது.

இனிமேல் இலங்கை, இந்தச் சூழலில் இருந்து வெளியேறுவதற்கு நினைத்தாலும் அது சாத்தியமாகப் போவதில்லை. ஏனென்றால் வெள்ளம் தலைக்கு மேல் போய் விட்டது.

-ஹரிகரன்
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு