Hot News
Home » செய்திகள் » நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதை எந்த நேரத்திலும் ஆதரிப்போம்

நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதை எந்த நேரத்திலும் ஆதரிப்போம்

கொள்கை அளவில் எந்த நேரத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான முயற்சிகள் நேற்று சிறிலங்கா அமைச்சரவையில் தோற்கடிக்கப்பட்டமை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிருப்தியை சுமந்திரன் தனது கீச்சகத்தில் பதிவு செய்துள்ளார்.

நேற்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான பிரேரணையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைக்க முயன்ற போது அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

ஐதேகவின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினரின் இந்த எதிர்ப்பினால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்  கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், “நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கும் நல்லாட்சிகாரரை குறித்து கவலைப்படுகிறோம்.

சந்தர்ப்பவாதமும் சுயநலமும் உச்சத்தை எட்டி, கால் நூற்றாண்டு வாக்குறுதிகளை கைவிடுவதா?

கொள்கை அளவில் எந்த நேரத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்