Hot News
Home » செய்திகள் » மோடி பிரதமரானால் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து: சம்பிக்க எச்சரிக்கை

மோடி பிரதமரானால் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து: சம்பிக்க எச்சரிக்கை

பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இந்தியப் பிரதமரானால் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க சிங்கள ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இலங்கையில் உள்ள பௌத்தர்களில் சிலர் நரேந்திரமோடி, முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர் என்ற ரீதியில் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

ஊடகங்களும் அவ்வாறான நிலைப்பாட்டிலேயே செய்திகளை வெளியிடுகின்றன. ஆனாலும் அவர் தீவிர இந்துத்வா ஆதரவாளர். அந்த வகையில் இந்து மதம் தவிர ஏனைய எந்த மதத்துக்கும் ஆதரவானவராக இருக்க மாட்டார்.

மேலும் பாரதீய ஜனதாக் கட்சியானது தமிழ்நாட்டில் வைகோ, நெடுமாறன் போன்ற புலி ஆதரவு அரசியல்வாதிகளுடன் நட்புறவைக் கொண்டுள்ளது.

எனவே அவர்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதுடன், பாரதீய ஜனதா அதிகாரத்துக்கு வந்தால் தமது நட்புறவினூடாக மத்திய அரசையும் நிர்ப்பந்தம் செய்வார்கள் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் பெரும்பான்மை பௌத்தர்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக செயல்படுவது தொடர்பில் தமது கட்சி தீவிரமாக அவதானித்து வருவதாகவும், தேவையான சந்தர்ப்பங்களில் அது தொடர்பான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அரசாங்கம் தொடர்நதும் பெரும்பான்மை மக்களின் உரிமைகள் விடயத்தில் அலட்சியமாக நடந்து கொண்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறவும் தாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

TELO Media Team 1