Hot News
Home » செய்திகள் » மத விவகார பொலிஸ் பிரிவு சட்டவிரோதமானது: ஜே.சி.வெலியமுன

மத விவகார பொலிஸ் பிரிவு சட்டவிரோதமானது: ஜே.சி.வெலியமுன

புத்தசாசன அமைச்சின் கீழ் மத விவகாரங்களை விசாரணை செய்ய ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது என சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன தெரிவித்தார்.
புதிய பொலிஸ் பிரிவு காரணமாக சட்டம் மேலும் பாதிப்புக்கு உள்ளாவதுடன் மத நல்லிணக்கத்திற்கும் பெரும் குந்தகம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசியல் அமைப்பு கட்டமைப்புக்கு அமைய பொலிஸ் உட்பட சகல நிறைவேற்று நிறுவனங்களும் சட்டரீதியான பொறுப்புக் கூறலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

மாகாண மட்டத்திலான பொலிஸ் சேவைகள் ஏற்படுத்தப்படாத நிலையில் இலங்கையில் ஒரே பொலிஸ் திணைக்களமே இருந்து வருகிறது.

இதனடிப்படையில் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் சாதாரண சட்டத்தை செயற்படுத்த தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்தாது பல வகையில் பொலிஸ் பிரிவுகளை ஏற்படுத்துவது சட்டவிரோதமானது என்பதே எமது நிலைப்பாடு.

சாதாரண குற்றங்களை விசாரணை செய்ய பல பொலிஸ் பிரிவுகளை ஏற்படுத்துவது பொலிஸாரின் பொறுப்புகளுக்கு தடையாக அமையும்.

நாட்டில் சட்டத்தை அமுல்படுத்தும் பிரதான நிறுவனமான பொலிஸ் திணைக்களம் மத அல்லது வேறு விடயங்களில் பக்கசார்பாக நடக்காது குற்றங்களை விசாரிக்க கடமைப்பட்டுள்ளது.

துரதிஷ்டவசமாக ஒரு சிறிய தரப்பினர் மத மற்றும் வழிப்பாட்டுத் தலங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் தமது அர்ப்பணிப்பை காட்டவில்லை.

ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் இருக்கும் பாதுகாப்பு அமைச்சும் புத்தசாசன அமைச்சும் மத அடிப்படைவாதத்தையும் அவதூறான பகை அரசியலையும் கட்டுப்படுத்த தவறியுள்ளன எனவும் ஜே.சி. வெலியமுன தெரிவித்தார்.

TELO Media Team 1