Hot News
Home » செய்திகள் » எத்தகைய அச்சுறுத்தல் விடுத்தாலும் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு நடத்தப்படும்! சிவாஜிலிங்கம்

எத்தகைய அச்சுறுத்தல் விடுத்தாலும் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு நடத்தப்படும்! சிவாஜிலிங்கம்

யாழ்.குடாநாட்டில் படையினர் எவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்தாலும் மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

யாழ்.பல்கலைக்கழகம் 16ம் திகதி தொடக்கம் மூடப்படுவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு மற்றைய துறைகளுக்கும் இவ்வாறான அறிவித்தல்கள் வழங்கப்படலாம்.

இவை எதற்காக வழங்கப்படுகின்றன என்றால் தமிழ் மக்களை அச்சப்படுத்துவதற்காகவே.

அவ்வாறு அச்சப்படுத்துவதன் மூலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நாங்கள் நினைவில் கொள்ளக்கூடாது என்பது அவர்களின் நோக்கம். ஆனால் ஒன்றை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நாங்களே மறந்தாலும், இலங்கை அரசும், அதன் படையினரும் மறக்க மாட்டார்கள்.

இந்நிலையில் எவ்வாறான அச்சுறுத்தல்களை படையினர் உருவாக்கினாலும் மே-18ம் திகதி வடகிழக்கு தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுட்டிக்கப்படும். அதற்கான முன் முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

நினைவு நாள் எங்கே? எப்போது? நடைபெறும் என்பதை பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் கருதி தகுந்த நேரத்தில் அறிவிப்போம்.

உயிரிழந்தவர்கள் எங்கள் மக்கள். எங்கள் உறவுகள் என்ற வகையில் நாங்கள் அவர்களை அவர்களுடைய தியாகங்களை நினைவில் கொள்ள வேண்டும், அது ஒவ்வொரு தமிழ் மகனினதும் கடமை என்றார்.

TELO Media Team 1