Hot News
Home » செய்திகள் » படையினர் தொடர்பாக இலங்கை இராணுவத் தளபதியின் கருத்தை அமெரிக்கா நிராகரிப்பு!

படையினர் தொடர்பாக இலங்கை இராணுவத் தளபதியின் கருத்தை அமெரிக்கா நிராகரிப்பு!

ஓய்வு பெற்ற அமெரிக்கப் படையினரின் நலன்களில் அந்த நாட்டு அரசு உரிய அக்கறை செலுத்துவதில்லை என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்திருந்த கருத்தை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முற்று முழுதாக நிராகரித்துள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பு, நாரஹேன்பிட்டியவிலுள்ள புதிய இராணுவ மருத்துவமனையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்க, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கைப் படையினருக்கு அரசு மிகச் சிறப்பான பராமரிப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கா போருக்காகப் பெருமளவு நிதியைச் செலவிடு கின்றபோதிலும், போர்களில் பங்கேற்ற படையினரின் நிலை மற்றும் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற படையினரின் நிலையைப் பார்க்கும் போது கவலைக்கிடமாகவுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

தாம் அமெரிக்காவில் வைத்து அந்த நாட்டுப் படையினர் சிலரை அண்மையில் சந்தித்த போது இலங்கை எவ்வாறு அதன் படையினரின் நலன்களைக் கவனிக்கின்றதென அவர்களுக்கு விளக்கிக்கூறிய போது, தமது அடுத்த பிறப்பில் இலங்கையில் பிறக்க வேண்டும் என்று அமெரிக்கப் படையினர் தெரிவித்திருந்தனர் எனவும் லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பாக வினவிய போது அதற்குப் பதிலளித்த கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளரும், பொதுசனத் தொடர்பு அதிகாரியுமான கிறிஸ்டோபர்ரீல், இலங்கை இராணுவத்தளபதி தயா ரத்னாயக்கவின் கூற்றை முற்றாக மறுத்ததுடன், அமெரிக்கப் படையினர் உலகில் கடமையில் மிகச்சிறந்த படையினராகத் திகழ்வதுடன் தமது நாடு வழங்கக்கூடிய அதி உயர் கெளரவத்தையும் படை நலப் பராமரிப்பையும் பெறுவதாகக் குறிப்பிட்டார்.

இதனை விடுத்து வேறுவிதமாகக் கருத்துகளைக் கூறுவது தவறானது. இராணுவத் தளபதியின் கருத்து அவர்களது சேவையை அவமதிப்புக்கு உட்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார்.

படையினரின் நலன்களில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டு வருவது மட்டுமன்றி, அவர்களது நலன்களைக் கவனிப்பதற்காக அமெரிக்க மத்திய அரசின் கீழ் அமைச்சரவை அந்தஸ்தைக் கொண்ட தனிச்சிறப்பான படைநல விவகாரத் திணைக்களம் இயங்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தத் திணைக்களம் 1930 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். கடந்தாண்டில் இந்தத் திணைக்களத்துக்காக மாத்திரம் 78 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

TELO Media Team 1