Hot News
Home » செய்திகள் » கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை: 10 பொலிஸ் குழுக்கள் நியமனம்- ஆயுதங்களை எடுத்துச் செல்லாத பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை

கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை: 10 பொலிஸ் குழுக்கள் நியமனம்- ஆயுதங்களை எடுத்துச் செல்லாத பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை

குருநாகலில் பொலிஸ் கான்ஸ்டபிள் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரிக்க 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
கடந்த 6ம் திகதி அதிகாலை குருநாகல் சோதனைச் சாவடியில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் கடத்தப்பட்டு காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றையவர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்தவரிடம் பொலிஸார் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செயவதற்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் இதுவரை அப்பகுதியில் உள்ள 20 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினரும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

ஆயுதங்களை எடுத்துச் செல்லாத பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆயுதங்களை எடுத்துச் செல்லாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடமைக்கு செல்லும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஆயுதங்களை எடுத்துச் செல்ல வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தவறும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணியை இடைநிறுத்த முடியும் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நேற்று தெரிவித்துள்ளார்.

நிறுவன ஒழுக்கக் கோவைக்கு அமைவான வகையில் ஆயுதத்தை எடுத்துச் செல்லாத பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான துணைப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் பணியை இடைநிறுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பாற்ற நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதம் தொடர்பிலான வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் பிரதேசத்திற்குப் பொறுப்பான துணை அத்தியட்சகர்களுக்கு எதிராக பிரதிப் பொலிஸ் மா அதிர்கள் தண்டனை விதிக்க முடியும் என அறிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற முறையில் கடமையில் ஈடுபடுவதனால் அதிகளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, ஆயுதங்கள் எடுத்துச் செல்வது குறித்த சட்டம் எதிர்காலத்தில் கடுமையாக பின்பற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

TELO Media Team 1