Hot News
Home » செய்திகள் » சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளையதினம் அவசர சந்திப்பு ஒன்றுக்கு அழைத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆராயவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனாதிபதி தமது கட்சி மட்டத்தில் எதிர்வரும் தேர்தல்கள் குறித்து கலந்தாலோசனைகளை நடத்தி வருகிறார்.

குறிப்பாக கடந்த மேல் மற்றும் தென்மாகாண சபை தேர்தல்களின் போது ஆளும் கட்சிக்கு பின்னடைவுகள் ஏற்பட்டன.இதனை சரிசெய்துக்கொள்வற்கான காரணிகள் அரசாங்கத்திடம் இல்லை.

நாட்டில் வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் பொருட்களின் விலையுயர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் பட்டினி நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதுவே ஆளும் கட்சிக்கான வாக்கு பின்னடைவுக்கான காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே மக்களை திருப்திபடுத்த உடனடியாக முடியாதநிலையில் தேர்தலை நடத்தி ஆட்சியை மேலும் 4 வருடங்களுக்கு தக்கவைத்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் ஊவா மாகாணசபை தேர்தலை எதிர்வரும் அக்டோபருக்குள் நடத்தி அதில் வரும் முடிவுகளை மையமாகக் கொண்டு எதிர்வரும் டிசம்பருக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதா? அல்லது பொதுத்தேர்தலுக்கு செல்வதா? என்பது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார்.

எனினும் ஜனாதிபதி தேர்தலை நடத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அரசாங்கத்தை தக்கவைப்பதில் பிரச்சினைகள் இருக்கப் போவதில்லை என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கு உள்ளது.

எனவே தமது கருத்துக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கையாக்கிக் கொள்ளும் வகையிலேயே தற்போது கட்சி தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TELO Media Team 1