எதிரணியின் பொது வேட்பாளர் என்ற விவகாரம் தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் அசமந்தமாக இருக்கக் கூடாது. அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பொது வேட்பாளர் விக்னேஸ்வரன் என்பது ஜனநாயக மக்கள் முன்னணியின் யோசனை அல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பின் யோசனையும் அல்ல. இது அரசியல் ஆய்வாளர் குசல் பெரேராவின் யோசனையாகும். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், நானும் குசல் பெரேராவின் யோசனையை பெரும்பான்மை கட்சிகள், சமூகத்தின் மத்தியிலேயே முன்வைத்துள்ளோம்.
இந்த யோசனையை பெரும்பான்மை இனவாதிகள் எதிர்க்கலாம். அதேவேளை சமத்துவவாதிகள் போல் நடிப்பவர்கள் தர்மசங்கடத்திற்கு உள்ளாகலாம். இந்த எதிர்ப்புகளும், தர்மசங்கடங்களும் இந்நாட்டு இன உறவு யதார்த்தத்தை படம் பிடித்து காட்டும். இதுவே எங்களது நோக்கமாகும்.
தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவதில் சட்ட சிக்கல் கிடையாது. அது ஒரு மாயக்கருத்து. ஆனால் இனவாதம் ஊன்றி போயிருக்கும் இந்த நாட்டில், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதியாவதில் ஆர்வம் உள்ளதாக தெரியவில்லை. அதுபோல் எனக்கோ, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கோ இத்தகைய ஆர்வம் கிடையாது.
இந்நாட்டில் ஜனாதிபதியாவதை விட, இந்த நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு, மலையகம் ஆகிய அனைத்து திக்குகளிலும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றவேண்டிய பயன்தரும் பல்வேறு காத்திரமான பணிகள் உள்ளன. அவற்றை எங்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தான தளங்களில் இருந்தபடி நாம் செய்து வருகிறோம்.
யுத்த வெற்றியுடன் நடைபெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலை போல், இந்தமுறை சிங்கள பெளத்த மக்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்துக்கு வழங்கப்பட போவதில்லை. இந்நிலையில் தமிழ் பேசும் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மக்களின் வாக்குகள், அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் பெரும் செல்வாக்கை செலுத்தக்கூடியவை.
ஆகவே எதிரணி பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அக்கறையுடன் பேசப்படும் பொருளாக உருப்பெற வேண்டும். எதிரணியின் பொது வேட்பாளர் என்ற விவகாரம் தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் அசமந்தமாக இருக்க கூடாது.
நாம் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, ஒரு திடீர் தேர்தலை நடத்தி வெற்றியை சுருட்டிகொள்ள எவருக்கும் நாம் இடமளிக்க கூடாது. இதுவும் எங்களது நோக்கமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட எதிரணி பொது வேட்பாளர் பற்றிய கருத்து தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு மேலும் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,
இன்று இந்த நாட்டில் தீவிரமாகவே ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசப்படுகிறது. மென்மேலும் செல்வாக்கு சரியும் முன்னர் அதை நடத்திவிட அரசாங்கம் தன்னை தயார் படுத்தி வருகிறது. இடையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் அரசாங்கம் யோசித்து வருகிறது. இதை தமிழ் பேசும் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்நிலையில் பொது வேட்பாளர் யோசனை பட்டியலில், இதுவரையில் வண. சோபித தேரர், சந்திரிக்கா குமாரதுங்க, சிராணி பண்டாரநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய, சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க என பல பெயர்கள் பல மட்டங்களில் பேசப்படுகின்றன.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் பொது வேட்பாளர் தேவை. அந்த எதிரணி பொது வேட்பாளர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவை தோல்வியடைய செய்யும் தகைமை கொண்டவராக இருக்க வேண்டும்.
அதாவது இந்நாட்டின் இனரீதியாக தமிழ், முஸ்லிம் மக்களது வாக்குகளையும், மதரீதியாக இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்கர்களின் வாக்குகளையும், சிங்கள பெளத்த வாக்குகளுடன் ஒருசேர பெறக்கூடியவாராகவும் இருக்க வேண்டும்.
இந்த பின்னணியில் தமிழ் பேசும் மக்கள் பொது வேட்பாளர் என்ற விவகாரம் தொடர்பில் அசமந்தமாக இருக்காமல் காத்திரமாக கவனம் செலுத்த வேண்டும். பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்று பேசு பொருளாக உருப்பெற வேண்டும்.
எங்களது தமிழ் பேசும் மக்களின் வாக்குகள், அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை. ஆகவே நாங்கள் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, ஒரு திடீர் தேர்தலை நடத்தி வெற்றியை சுருட்டிகொள்ள எவருக்கும் நாம் இடமளிக்க கூடாது.
நாங்கள் விழித்து இருக்க வேண்டும். இது எங்கள் உறுதியான நிலைப்பாடு. இந்த ஆட்சியை இனியும் நாம் பொறுத்து கொள்ள முடியாது என்ற கட்டத்தை இந்நாட்டு தமிழ் பேசும் மக்கள் அடைந்து விட்டார்கள்.
இந்த நோக்கத்தை எப்படி பெரும்பான்மை சிங்கள பெளத்த மக்களுடன் சேர்ந்து நிறைவேற்றுவது என்பதுவே இன்று எம்முன் உள்ள சவாலாகும். அந்த சவாலை நிறைவேற்ற தமிழ் பேசும் மக்கள் தங்கள் பங்களிப்புகளை ஆலோசனைகளாகவும், ஆதரவுகளாகவும் எங்களுக்கு வழங்க வேண்டும்.