அடுத்தவாரம் முதல் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு

மின்சார நெருக்கடி மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.12 மணி நேர மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்த அனுமதி கோரப்பட்டது. எனினும், இந்த நிலைமை ஓரளவுக்கு குறைப்பதற்காக, கையிருப்புக்கு அவசியமான குறிப்பிடத்தக்க அளவான எரிபொருளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. தற்போது ஏற்படும் நிலைமை அவ்வளவு சிறந்ததாக இல்லை.

இலங்கை முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையான காலப்பகுதிக்குள் 10 மணிநேர மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விருப்பமின்றியேனும் மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்களில், 800 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை இல்லை. நிதி பிரச்சினை காரணமாகவே மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த வாரத்தில் இருந்து இலங்கையில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

இந்தநிலையில் ஏனைய அனல்மின் நிலையங்கள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.