ஹரீன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தில் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

புதிய அமைச்சர்கள் விபரம்

  1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், விமான சேவைகள்2 சுசில்
  2. பிரேமஜயந்த – கல்வி
  3. கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
  4. விஜேதாச ராஜபக்‌ஷ – நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு
  5. ஹரீன் பெர்னாண்டோ – சுற்றுலாத்துறை மற்றும் காணி
  6. ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில்
  7. மனுஷ நாணயக்கார – தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
  8. நளின் பெர்னாண்டோ – வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு
  9. டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளன என்பது தெளிவாகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது சர்வகட்சி அரசாங்கத்தையோ அமைக்க முன்வந்தபோதிலும், அமைக்கப்படும் அரசாங்கத்தில் அவை எதுவும் இல்லை என்றும், முன்னர் ஆட்சியில் இருந்த அதே ஆட்சிதான் தற்போதும் உள்ளது என்று நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவிதித்துள்ளார்

புதிய அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கு மாத்திரம் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு உதவுமாறு இந்திய நிதி அமைச்சரிடம் இதொகா கோரிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண உதவிகளை வழங்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்  இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரான  பாரத் அருள்சாமி ஆகியோர் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு இந்த சந்திப்பின் போது இ.தொ.கா நன்றி தெரிவித்துள்ளதுடன், தற்போதைய இக்கட்டான சூழ்சிலையில் இருந்து இலங்கையை மீண்டெழ இந்திய அரசாங்கத்தின் ஒத்ழைப்பும் உதவியும் அதிகமாக தேவைப்படுகிறது.

அதேபோன்று இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக இந்த பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இந்தியா அவர்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் என்பதுடன், இலங்கை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து விதத்திலும் இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த சந்திப்பில் இ.தொ.கா இந்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இக்கோரிக்கைக்கு சாதகமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் இந்தியா முன்னெடுக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் சரியான வழியில் வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை

விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும்.கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தமானது  சரியான வழியில்  வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.அதாவது உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் முடிந்திருக்க வேண்டும்.இந்த போரின் முடிவு சமாதான முறையில்  நிறைவிற்கு கொண்டு வரவில்லை.பெரும் அழிவுகளுடன் தான்  நிறைவடைந்தது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம்  எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள அவரது கட்சி  அலுவலகத்தில் வியாழக்கிழமை(19)   நடாத்திய விசேட செய்தியாளர்   சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும்  தெரிவித்ததாவது.
வட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் காலத்தில் ஒரு உறுப்பினராக இருந்துள்ளேன்.அதுமாத்திரமன்றி வரதராஜ பெருமாள் அவர்கள் தமிழீழ பிரகடனம் செய்த போது வெளிநடப்பு செய்த  குழுவிலும் நான் அங்கம் வகித்திருந்தேன்.அதாவது இந்த நாட்டை பிரிப்பதற்கு ஒருபோதும் நாங்கள் உடன்பட மாட்டோம் என அப்போது நாம் வெளியேறி இருந்தோம்.இந்நிலையில் பின்னர் அங்கு பல பிரச்சினைகள்  எழுந்தமையினால் நாங்கள் ஐ.பி.கேயின் உதவியுடன் விசேட விமானத்தில் இரத்மலான விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டோம்.
மேலும்  விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலை புலிகள் என்ற  உயரிய சிந்தனைகளில் இருந்தார்களா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.அதாவது விடுதலை புலிகளின் உயர் மட்டத்தலைவர்கள் என கூறப்படுவோர் தற்போது கூட சிங்கள கட்சிகளின் உயர்பதவிகளில் வந்து இருக்கின்றார்கள்.இவ்வாறானவர்களும் விடுதலைப்புலிகளில் கடந்த காலங்களில் அங்கம் வகித்துள்ளார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடிகின்றது.ஆகவே விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும்.கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தமானது வெல்லப்பட்டது என்பதற்காகவே ராஜபக்ஸக்களை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வருகின்றார்கள்.
இந்த யுத்தமானது வெளிநாடு ஒன்றுடன் செய்யப்படவில்லை.இலங்கை பிரஜைகளுடன் தான் இலங்கை அரசாங்கம் யுத்தம் செய்தது உண்மையாகும்.இந்த யுத்தமானது சரியான வழியில்  வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.அதாவது உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் முடிந்திருக்க வேண்டும்.ஒரு போர்க்களத்தில் நின்று கொண்டு பொதுமக்களை இராணுவம் சுட்டுத்தள்ளி அல்லது ஒரு விடுதலை இயக்கம் இராணுவத்தை சுட்டுத்தள்ளுவதை ஒரு காலமும் யுத்தமோ சமாதானமோ என்று கூற முடியாது.
இந்த போரின் முடிவு சமாதான முறையில்  நிறைவிற்கு கொண்டு வரவில்லை.பெரும் அழிவுகளுடன் தான் அவ்யுத்தம் நிறைவடைந்தது.உதாரணமாக தென்னாபிரிக்காவில் 243  இயக்கங்கள் போர் இட்டு  வந்திருந்தன.அதில் வெள்ளையர் கறுப்பர் குழு மோதலும் இடம்பெற்றிருந்தது.நெல்சன் மண்டேலா அந்த காலகட்டத்தில் வெஸ்மன் ரூட்டோ போன்றவரகள் இப்போராட்ட இயக்கங்களுடன் எத்தனையோ பேச்சுவார்த்தைகளை நடாத்தி 11 குழுக்களாக  மேற்குறித்த இயக்கங்களை ஒருங்கிணைத்தனர்.இவ்வாறு 11 குழுக்களுடனும் பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிணக்குகளை தீர்த்து வைத்தனர்.இதனால் தான் அவருக்கு கூட நோபல் பரிசு கிடைக்கப்பெற்றிருந்தது.இந்த நாட்டிலும் ஒரு இணக்கப்பாட்டுடன் நடந்து முடிந்த  யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருந்தால் இவர்களுக்கும் நோபல் பரிசு கிடைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.ஆனால் இந்த யுத்தமானது அரைகுறையாக நிறைவடைந்து விட்டது என்பதே உண்மையாகும்.சமாதான மேசையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு  இந்த யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை.மாறாக பெரும் அழிவு யுத்த அவலத்துடன் தான் இந்த யுத்தம்  அரைகுறையாக நிறைவடைந்துள்ளது என்பதை  நான்  பார்க்கின்றேன் என்றார்.

இலங்கையில் அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை – பிரதமர் ரணில்

உணவு நெருக்கடி உலகளாவிய நெருக்கடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் நிலைமையை முன்னறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் இலங்கையை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கையில் அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்

இலங்கைத்தீவில் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தான் வன்முறையை வளர்த்தவர்கள்: சபா குகதாஸ்

இலங்கைத்தீவில் 1948 ஆண்டின் பின்னர் வன்முறையை வளர்த்தவர்கள் ஆட்சிக்குத் தொடர்ந்து வந்த சிங்கள தலைவர்களும் அவர்கள் சார்ந்த அரசாங்கமும் என்ற உண்மையைச் சிங்கள பெரும்பாண்மை மக்கள் உணரும் வரை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க அரசாங்கம் கொண்டு வந்த போது பூர்வீக தமிழர்களின் தமிழ்மொழி அரசியலமைப்பு ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டதனால் அன்றைய தமிழ்த் தலைவர்கள் காலமுகத்திடலில் சாத்வீக வழி சத்தியாக்கிரக போராட்டத்தை 1956 யூன் 5 ஆம் திகதி நடத்தினர்.

இதன்போது இன்று கோட்டா கோ கோம் போராட்டத் தரப்பின் மீது எப்படி ஒரு வன்முறை ஆட்சியாளர்களினால் கட்டவிழ்க்கப்பட்டதோ இதைவிட மோசமாக அன்று தமிழ்த் தலைவர்கள் மீது இதே காலிமுகத்திடலில் பொலிஸாரினாலும் குண்டர்களினாலும் கோரமான வன்முறை மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக போராட்டம் வன்முறை மூலம் அடக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சி 1977 வரை மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்கியதன் விழைவே ஆயுதப் போராட்டமாக மாறியது. உண்மையாகத் தமிழர்கள் வன்முறை மீது காதல் கொண்டு ஆயுதம் தூக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்களே தமிழர்களை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தார்கள்.

அதன் விளைவை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவிக்கின்றது. அத்தகைய அவலநிலைக்கு அரசியல், பொருளாதாரத்தின் கட்டமைப்பு சீரழிந்துள்ளது. 1956 தமிழர்களுக்குச் செய்த தவறை மீண்டும் 2022 ஆட்சியாளர்கள் அதே காலிமுகத்திடலில் ஜனநாயக வழியில் போராடிய தாம் சார்ந்த சிங்கள சகோதரர்களுக்கும் வன்முறையைப் பிரயோகித்துள்ளார்கள்.

நாகரிகம் வளர்ந்த இந்த நூற்றாண்டில் மிகவும் பிற்போக்காக ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைக்க வாக்களித்த மக்களையே வன்முறை மூலம் அடக்கும் கிட்லர் ஆட்சியாளர்களை நினைக்கத் தலைகுனிவாகவும் வெட்கமாகவும் உள்ளது.

இலங்கைத் தீவில் வாழும் பல்லின மக்களையும் அவர்களது நியாயமான அபிலாசைகளையும் ஏற்றுக் கொள்ளும் அரசியலமைப்பை உருவாக்கி ஜனநாயக பண்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் ஆட்சியாளர்கள் வரும் வரை இலங்கைத் தீவில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினமானதாகும். இதனைச் சிங்கள பெரும்பான்மை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் கடன் தொகையை அடுத்த வாரம் அறிவிப்பதாக பிரதமர் தெரிவிப்பு

இலங்கை எவ்வளவு கடனை செலுத்த வேண்டும் என்பது தொடர்பில் தகவல்களை சேகரித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒருவருக்கு ஒருவர் விமர்சனங்களை முன்வைக்காமல், நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு பிரதமர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

இன்று பாராளுமன்றத்தில் நாட்டின் கடன் தொகை தொடர்பில் பிரதமரிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

இலங்கை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என அவர் வினவினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பிலான முழுமையான அறிக்கையை அடுத்த வாரமளவில் தயாரிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சில தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் சில தகவல்கள் பொய்யானவை எனவும் குறிப்பிட்ட பிரதமர், இதன் காரணமாக தன்னால் சரியான தொகையை உடனடியாகக் கூற முடியவில்லை என தெரிவித்தார்.

கடன் தொகை 10 பில்லியனாக இருந்தாலும் அதனை வழங்குவதற்கு ஒரு மில்லியன் கூட எம்மிடம் இல்லை என பிரதமர் கூறினார்.

எனவே தான் மூன்றாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விவாதம் ஒன்றை நடத்துமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த அவர், விரைவில் அத்தகவல்களை எதிர்க்கட்சிக்கு வழங்கவுள்ளதாகவும் கூறினார்.

கடன்களை தற்போதைக்கு மீள செலுத்துவதில்லை என கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு –  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோராதலிங்கம் , தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம கோவிந்தன் கருணாகரம்(ஜனா) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

 

‘மே 18 தமிழனப் படுகொலை நாள்’- வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அறிக்கை

”மே மாதம், சிறிலங்காவில் முரண்பாடான உணர்வுகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது. வடக்கு -கிழக்கு தமிழினப் படுகொலைகளில் இறந்தவர்களை நினைவு கூறுகையில், தெற்கு போர் வெற்றியைக் கொண்டாடுகின்றது. கௌதம புத்தர் கூறியது போன்று மூன்று விடையங்களை மூடி மறைக்க முடியாது.

“சூரியன், சந்திரன், உண்மை”. சிறிலங்காவின் பொருளாதார – அரசியல் நெருக்கீடு தெளிவான பாடத்தைப் புகட்டி இருக்கின்றது, வன்முறை எந்தவிதத்திலும் பிரச்சினைக்குத் தீர்வாகாது, பிரச்சினைக்கான மூலகாரணியைக்கண்டு அதை நிவர்த்தி செய்வது இன்றியமையாதது. வடக்கு- கிழக்கு தமிழர்கள் மே 18ஐ தமிழினப்படுகொலை நாளாக நினைவு கூறுகின்றனர்” என்று வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்! முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது

வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இறுதி யுத்தத்தில் தனது ஒரு கையினை இழந்து பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனைய உறவுகளும் தமது உறவுகளுக்கான சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

இதேவேளை முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளதோடு கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலே அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கியது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பல்வேறு தரப்பினராலும் வழங்கப்பட்டது