அமெரிக்க ஜனாதிபதி இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மனித உரிமையின் அனைத்து அளவுகோல்களிலும் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் உரிமைகள் மிக முக்கியமானவை என பைடன் நிர்வாகம் கருதினால் இந்த சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்படவேண்டும் அல்லது முற்றாக கைவிடப்படவேண்டும் என்ற செய்தியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசி;ங்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு தசாப்தகாலமாக சிறுபான்மையினத்தவர்களையும் தன்னை விமர்சிப்பவர்களையும் தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து பைடன் நிர்வாகமும் அமெரிக்க காங்கிரசும் அமைதியாகயிருந்தால் அது மாற்றுநிலைப்பாடுடையவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ள நாஸ் பல தசாப்தகாலங்களாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துவந்துள்ள இலங்கையின் சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலே உத்தேச சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அல்லது மோசமான சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் அதிகாரிகள் உத்தேச சட்டத்தை கொண்டுவரவில்லை மாறாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைத்து அவர்களை மௌனமாக்கும் நோக்கத்துடனேயே இந்த உத்தேச சட்டம் கொண்டுவரப்படுகின்றது எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.