யாழ்ப்பாணம்- காரைக்கால் பயணிகள் கப்பல் சேவைக்கு அனுமதி!

இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் சேவையை நடத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் – கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது.

இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்று அறியமுடிகின்றது.

இதற்கிடையில் பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜூலை இறுதியில் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வரும் வாய்ப்பு

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெளிவுபடுத்தினார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து நிதிக்கொள்கையை உறுதியாக பேண வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட மத்திய வங்கி ஆளுநர், பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், கடுமையான நிதிக் கொள்கை காரணமாக, செப்டம்பர் மாதம் 70% பண வீக்க அதிகரிப்பை தடுக்க முடிந்ததாகவும்
தற்போது மிகவும் வேகமாக பணவீக்கம் குறைவடைந்து வருவதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.

பணவீக்கம் குறைந்ததால், அதிகரித்த வட்டி வீதத்தை ஓரளவு குறைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனவரி மாதம் திறைசேரி முறிகளின் மூன்று மாத வட்டி வீதம் 33 வீதமாகக் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பணவீக்கம் மிக வேகமாகக் குறைந்து ஜூலை மாத இறுதியில் ஒற்றை இலக்கத்திற்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறினார்.

பூர்வீக தொல்லியல் இடங்களை அடையாளங் காணமுற்பட்டால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும்

அரசியல்வாதிகள் மதக் குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அரசியல்லாபம் தேடுவதாக சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர்.

தேசிய சர்வமத போரவையால் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த,எஸ். சிவலோகநாத குருக்கள் கருத்து தெரிவிக்கையில், “ஒருசில சுயநலம் கொண்ட மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் நல்லிணக்கத்தினை குழப்பக்கூடிய விடயங்களை பெரிதாக்கி வருகின்றனர். இது மிகப்பெரும் கவலைதரும் விடயம். சில அரசியல்வாதிகளும் இந்த மத குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேடுகின்றனர்.

வடக்கில் அரசாங்கத்திற்கு சார்பான தொல்பொருள் திணைக்களத்திற்கு கூறக்கூடிய விடயம் பூர்வீக தொல்லியல் இடங்கள் என தெரிவித்தால் இந்து சமயத்திலும் பல இடங்கள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதேபோல் பௌத்த மதத்திலும் உள்ளது.

அவற்றையெல்லாம் கூறப்போனால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும். நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். அவை தற்போதுள்ள மத நல்லிணக்கத்திற்கு குரோதமாகவே அமையும். எனவே தொல்லியல் திணைக்களம் இவ்வாறான விடயங்களை கைவிடுதல் வேண்டும். தற்போதுள்ள சம நிலையை பேணி பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது  யாழ் மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை பி. ஜெபரட்ணம் கருத்து தெரிவிக்கையில், “மத நல்லிணக்கத்திற்கு எமது நாட்டில் முன் எப்போதும் இல்லாதவாறு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

மற்ற மதங்களை மதிக்காத அன்பு செய்யாத ஏற்றுக்கொள்ளதா தன்மை எமது நாட்டில் தலைவிரித்தாடுகின்ற நிலை இருப்பது போல் தோன்றுகின்றது.

இதனால் பல்வேறு இடங்களில் பல்வேறு பிரச்சனைகளால் மதங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட வாய்ப்பாக அமைகின்றது. இந்த நேரத்தில் நாம் எங்கள் மதத்தை எவ்வாறு மதிக்கின்றோமோ அதேபோல் ஏனைய மதங்களையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் எமது நாட்டில் பல இன மக்கள் ஒன்றாக வாழ்கின்றோம். இருந்தபோதிலும் மக்களிடையே வேற்றுமைகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் திணிக்கப்படுகின்றன.

அதாவது ஒரு இனம் வாழும் இடத்தில் அந்த இனத்திற்கு தேவையில்லாத அந்த இனத்திற்கு ஒவ்வாத மற்றோர் இனத்திற்கு தேவையான ஒரு விடயத்தினை செய்கின்றபோது மக்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட காரணமாகிவிடுகின்றது. ஆகவே ஒவ்வாரு இனத்தவரும் வசிக்கும் இடங்கள் மதிக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய கலாசார சமய விழுமிங்கள் மதிக்கப்பட்டு செயற்பாடுகள் இடம்பெறம்போது இவ்வாறான பிரிவினைகள் எற்படுவதனை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் பௌத்த, கிறிஸ்தவ, சைவ, இஸ்லாமிய மத குருமார் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

PNS SHAHJAHAN எனும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கடற்படைக கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

PNS SHAHJAHAN என்பது 134.1 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது 169 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுவதோடு இதற்கு கேப்டன் Adnan Laghari TI தலைமை தாங்குகின்றார்.

இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் குறித்த கப்பல் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளது.

அத்துடன் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, குறித்த கப்பல் எதிர்வரும் 04 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தூதுவர் நாடாளுமன்றத்திற்கு திடீர் விஜயம்

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்ததாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய அரசியல் விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரிக் கோப்பொன்றைத் திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அனைவரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எதிர்கால நலன்புரி நன்மைகள் கூட இந்த வரிக் கோப்பு இலக்கத்தின் கீழ் வழங்கப்படும் என சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் உள்ளிட்ட 14 வகைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் நேற்று (ஜூன் 01) முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் ஒப்புதலுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

வர்த்தமானி அறிவித்தலின் படி, எந்தவொரு வருங்கால வைப்பு நிதிக்கும் ஊழியர் மற்றும் முதலாளி இருவரிடமிருந்தும் மாதாந்திர பங்களிப்பு ரூ. 20,000 உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி, பின்வரும் தொழில் வல்லுநர்கள் ஜூன் 1 முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்:

1. இலங்கை மருத்துவ கவுன்சிலில் (SLMC) பதிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள்

2. இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள்

3. இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள்

4. இன்ஸ்டிடியூஷன் ஒஃப் இன்ஜினியர்ஸ் இலங்கையின் உறுப்பினர்கள்

5. தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்

6. இலங்கை கட்டிடக்கலை நிறுவகத்தின் உறுப்பினர்கள்

7. இன்ஸ்டிடியூட் ஒஃப் க்வாண்டிட்டி சர்வேயர்ஸ் ஸ்ரீலங்காவின் உறுப்பினர்கள்

8. இலங்கை உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள்

9. பிரதேச செயலகங்களில் தமது தொழில்களை பதிவு செய்த நபர்கள்

10. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை (முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கை உழவு இயந்திரங்கள் தவிர) வைத்திருக்கும் நபர்கள்

11. ஏப்ரல் 01, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு இலங்கையில் ஏதேனும் அசையாச் சொத்தை பத்திரப் பரிமாற்றத்தின் மூலம் வாங்கிய நபர்கள்

12. எந்தவொரு வருங்கால வைப்பு நிதிக்கும் ஊழியர் மற்றும் முதலாளி இருவரிடமிருந்தும் ரூ. 20,000 இற்கும் மேற்பட்ட மாதாந்திர பங்களிப்பை வழங்கும் பணியாளர்கள்

13. உள்ளூர் அதிகாரசபையிடமிருந்து கட்டிடத் திட்டத்திற்கான அனுமதியைப் பெறும் எந்தவொரு தனிநபரும்

14. மாதாந்தம் ரூ. 100,000 சம்பளம் பெறும் யாரேனும் அல்லது இலங்கையில் எந்தவொரு சேவையையும் வழங்குவதற்கு 12 மாத காலத்திற்கு ரூ. 1,200,000 வருமானம் பெறுபவர்கள்.

அறிவிப்பின்படி, மேலே குறிப்பிடப்பட்ட எந்த வகையிலும் சேராத, டிசம்பர் 31, 2023 இல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அல்லது ஜனவரி 01, 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு 18 வயதை எட்டியவர்கள் ஜனவரி 1, 2024 முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்

2048 இல் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை உருவாக்கும் திட்ட வரைபடத்தை முன்வைத்தார் ஜனாதிபதி

ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே எனது போராட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

நான்கு முக்கிய தூண்களில் நாட்டை கட்டியெழுப்புவோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்தி, அடுத்த 25 ஆண்டுகளில் உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவோம். நாட்டை கட்டியெழுப்பும் பணியில் இளைஞர் சமூகம் மீது பெரும்நம்பிக்கை வைத்திருக்கிறோம். துரித பொருளாதார மறுசீரமைப்பு செயல்பாட்டில் அரச – தனியார் துறை ஒத்துழைப்பை அதிகரிக்க கூட்டாய்வு முறையை அமுல்படுத்துவோம். மோசடியை ஒழிக்க விசேட செயலணி உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

‘தேசிய நிலைமாற்றத்துக்கான திட்ட வரைபடம்’ என்ற திட்டத்தை முன்னிறுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த உரையின் முக்கிய அம்சங்கள் மட்டும் வருமாறு, நவீன உலகுக்கும், நவீன தொழில் நுட்பத்துக்கும் ஏற்றவாறு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்காவிட்டால் நாடு பின்நோக்கி செல்லும். அதன் முடிவாக நாடு பொருளாதார காலனித்துவமாக மாறிவிடும். எனவே, நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதற்கு அவசியமான துரித பொருளாதார மறுசீரமைப்புக்களை செயல்படுத்த வேண்டும். ஒழுங்குபடுத்தல், கொள்முதல் மற்றும் அரசியல் ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஊழலை முற்றிலுமாக நிறுத்துவதற்கும், டிஜிற்றல் மயமாக்கல் மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க பொறிமுறையின் மூலம் ஊழலுக்கு எதிரான நடைமுறைகளை செயல்படுத்தவும் ஒரு விசேட செயலணி நிறுவப்படும். மறுசீரமைப்பு வேலைத்திட்டம், இலகுவான பணி இல்லை. என்றாலும், நாட்டுக்கு சிறந்த விடயங்களை மேற்கொள்ள அரசாங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. நாம் எடுக்கும் தீர்மானங்கள் எவ்வளவு கடினமான மற்றும் வேதனையானதாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்காக அந்தக் கடினமான பாதையில் சரியான கொள்கைகளின்படி முன்னேறுவதன் மூலம் மாத்திரமே நாட்டை மீண்டும் உயர்வடையச் செய்ய முடியும்.

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஓர் இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிக்கிறோம். 70வீதம் வரை உயர்ந்திருந்த பணவீக்கத்தை தற்போது 25.2 வீதம் வரை குறைக்க முடிந்துள்ளது. இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருவதோடு, ஒட்டுமொத்த சமூகமும் இந்த பயனை உணர ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை முன்னேற்ற முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களில் நாட்டை விற்கிறார்கள் என்று கோஷமிட்டு இதனை சிலர் குழப்ப முயல்கின்றனர். முன்னரும் இவ்வாறு தான் நடந்தது. இனி, இது போன்ற கோஷங்களுக்கு நீங்கள் ஏமாறமாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும். நாட்டை முன்னேற்ற நாம் அனைவரும் கடுமையாக உழைத்து, நம்மை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. 2048 ஆம் ஆண்டுக்குள் உலகில் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற நமது இலக்கை அடைய வேண்டும் என்றார். மேலும், நவீன உலகத்துக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு நமது பொருளாதாரத்தை வடிவமைக்காவிட்டால், பின்னோக்கிச் செல்ல வேண்டி ஏற்படும். இத்தகைய விலகலின் விளைவு, நாடு பொருளாதார காலனித்துவமாக மாறுவதுதான்.

தவறான கொள்கைகள், பலவீனமான நிகழ்ச்சிகள், தோல்வியடைந்த வேலைத் திட்டங்கள் ஆகியவற்றை ஓர் ஒழுங்கான பாதையில் முன்னெடுப்பதையே பொருளாதார மறுசீரமைப்புகள் மூலம் நாம் மேற்கொள்கிறோம். பழைய பாரம்பரிய முறைகள் மூலம் வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெ ழுப்ப முடியாது. நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் – என்றும் சொன்னார். மேலும் நாட்டின் அபிவிருத்தி- அரச நிதி மற்றும் மறுசீரமைப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு, அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு என்ற நான்கு தூண்களில் கட்டி யெழுப்பப்படும் என்று தெரிவித்ததுடன், அவை குறித்து விளக்கமும் அளித்தார்

அதானி குழுமத்திற்கு கெளதாரி முனையில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அனுமதி மறுப்பு

கிளிநொச்சி கௌதாரி முனை பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று கடற்றொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலருமு; கலந்து கொண்டனர்.

இதன்போது, அதாணி குழுமத்தினால் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக எடுக்கப்பட்டது. இதன்போது வாதங்களும் இடம்பெற்றன.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் கௌதாரி முனைக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

குறித்த வீதியை காபெட் வீதியாக அமைப்பது தொடர்பாக எவ்வித உறுதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படக்கூடாது என்றும் கலந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பாக முறையான நடைமுறைளை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அதன் தொடர்ச்சியாகவே குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தீர்மானிக்க முடியும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சீனாவுக்கு கறுவா,கடலுணவுகள், இரத்தினக்கற்கள் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான 12ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் ஆகியோரின் தலைமையில் இந்த ஆலோசனைகள் இடம்பெற்றன.

இருதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு, தற்போதைய பொருளாதார மீட்பு செயல்முறை, வாழ்வாதார உதவி, நிதியுதவி, மக்களிடையே பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு தசாப்தங்களில் சீனாவின் புதிய அபிவிருத்தி முன்னுதாரணத்திற்கும், நவீனமயமாக்கலுக்கும் சீனாவின் பாதை மற்றும் மில்லியன் கணக்கான சீன குடிமக்களை வறுமையில் இருந்து வெற்றிகரமாக உயர்த்தியதற்கும் இட்டுச் செல்லும் சீனாவின் உயர்மட்ட அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்ததாக சீனாவின் துணை அமைச்சர் சன் வெய்டாங் தெரிவித்தார்.

சவாலான காலக்கட்டத்தில் இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகளை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பாராட்டியதுடன், சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியை குறிப்பாக இலங்கை கறுவா , கடல் உணவு, பழங்கள், காய்கறிகள் மற்றும் இரத்தினக் கற்கள் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கு சீனாவின் ஆதரவை கோரியிருந்தார்.

மேலும் அவர் இலங்கையின் பொருளாதார மீட்சியை விளக்கியதுடன் சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதை வரவேற்றார்.

இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மைக்காக இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இலங்கையும் சீனாவும் இந்த ஆலோசனைகளின் போது உறுதியளித்தன.

யாழில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர் என நேற்றையதினம்(31) இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.

அதேபோன்று வரவு ஒழுங்கற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தீவக கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 46 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 4 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாகக் கடந்த ஆண்டு 109 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே ஆது 113 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாண கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 60 பேர் இடைவிலகியுள்ளனர்.இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 20 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 351பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் அது 35 ஆகக் குறைவடைந்துள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 170 பேர் இடைவிலகியுள்ளனர்.இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 137 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 390 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 312 ஆக அதிகரித்துள்ளது.

தென்மராட்சிக் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 7 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 7 பேர் இடைவிலகியுள்ளனர்.வரவு ஒழுங்கற்ற மாணவர்களாகக் கடந்த ஆண்டு 92 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 59 ஆக அதிகரித்துள்ளது.

வடமராட்சிக் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 72 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 25 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 87 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 65 ஆக அதிகரித்துள்ளது.

இந்தத் திடீர் அதிகரிப்புத் தொடர்பில் ஆராயப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்தி கூலி வேலைகளுக்கு அமர்த்துவதாகக் கூறப்பட்டது.

பாடசாலைகளில் மீளிணைத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் சில நாள்கள் பாடசாலைக்கு வந்து மீண்டும் வராமல் விடும் செயற்பாடே இடம்பெறுகின்றது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

9ஆம் மற்றும் 10ஆம் தரத்துடனேயே அதிகளவானோர் இடைவிலகுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.