அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை முழுமையாக இழக்கப்பட்டுள்ளது. அதனை மீளக் கட்டியெழுப்ப முறையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆளும் மற்றும் எதிர்தரப்பிலுள்ள சகல பொருளாதார நிபுணர்களையும் ஒன்றிணைத்து விசேட குழுவொன்றை நியமித்து, நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வழியை ஆராய வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
ராஜகிரியவிலுள்ள ஸ்ரீ சத்தர்ம ராஜினகா விகாரையில் நேற்று வியாழக்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளின் உண்மை நிலைவரம் என்ன என்பது தொடர்பிலும் , அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பிலும் அரசாங்கம் முழுமையான அறிவிப்பொன்றை வெளியிட வேண்டும். அதனை விடுத்து ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது,
எரிபொருளை விநியோகிப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் மக்கள் பதற்றமடைந்து, அவர்கள் வீதிக்கு இறங்கி போராட தொடங்கினால் பிரச்சினைகள் மேலும் உக்கிரமடையக் கூடும். அரசாங்கத்தின் மீது மக்களுக்கு தற்போது துளியளவும் நம்பிக்கை இல்லை. இது துரதிஷ்டவசமான நிலைமையாகும்.
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்தியதைப் போன்று , இந்த நெருக்கடிகளையும் முறையாக கட்டுப்படுத்தி அரசாங்கம் மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு முடியாது என்றால் இயன்றவர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு , ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறில்லை எனில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து தரப்பிலுமுள்ள பொருளாதாரத்தில் நிபுணத்துவமுடையவர்களை ஒன்றிணைத்து விசேட குழுவொன்றை நியமித்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றார்.