மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எங்களிற்கு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியது – பிள்ளையான்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு உதவினார்கள் என்பது ஒன்றும் இரகசியமான விடயமில்லை என பிள்ளையான் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச நிர்வாகத்திடமும் இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்திடமும் நாங்கள் ஆயுதங்களையும் பணத்தையும் பெற்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை; செயலாளர் நாயகத்தையும் சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் António Guterres-இற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நியூயோர்க்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐ.நா பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை நேரப்படி நேற்று இரவு 10.00 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதி செய்து, நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச்செல்வதே தமது நோக்கம் என இதன்போது அவர் தெரிவித்தார்.

இந்த இலக்கை அடைவதற்கான நம்பிக்கையும் ஆதரவும் இலங்கை மக்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில், பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அண்மைக்காலங்களில் மிகவும் சவாலான காலகட்டத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், மக்களின் வாழ்க்கையில் பேரழிவுகரமான தாக்கமும் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளால் ஜனநாயக மரபுகள் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் ஆழமாக வேரூன்றிய, உறுதியான ஜனநாயக மரபுகளினால் ஜனநாயக அரசியல் அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றதாகவும் ஜனாதிபதி கூறினார்.

ஐ.நா.வின் 80 ஆவது ஆண்டு நிறைவை நோக்கி, 2024 ஆண்டில் எதிர்கால உச்சி மாநாட்டிற்குத் தயாராகும் போது, பிளவுபட்ட அரசியல் புவிசார் கருத்தியலொன்றை காண்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய பூகோள அதிகார மையமொன்று தோன்றி வருவதையும் காணக்கூடியதாக உள்ளதென தெரிவித்தார்.

இந்த மாற்றத்துடன், ஒருபுறம் மக்கள் வறுமையிலிருந்து சுபீட்சத்தை நோக்கிச்செல்வதோடு அபிவிருத்தி, மானிட முன்னேற்றம் குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மறுபுறம், தரைமார்க்கமாகவும் சமுத்திர ரீதியாகவும் தோன்றியுள்ள பாரிய சக்திகளின் போட்டிகளும் புவிசார் அரசியல் பதற்றங்களும் வெளிப்படையான போர் சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை போன்ற உலகளாவிய தெற்கின் நடுநிலையான, அணிசேரா நாடுகள் புதிய உலகளாவிய செல்வந்த நாடுகளின் முன்னிலையில் மீண்டும் வரையறைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

2040 இல் நிலக்கரிப் பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்து, 2050 இல் கார்பன் நிகர பூஜ்ஜியத்தை அடைய எதிர்பார்த்துள்ளதாக ஐ.நா கூட்டத்தொடர் உரையின் போது அவர் தெரிவித்தார்.

தற்போதைய உலகளாவிய பன்முகத்தன்மை மற்றும் தீர்மானமெடுக்கும் பிரதிநிதிகளாக பாதுகாப்பு சபையின் கட்டமைப்பு விரிவாக்கப்பட வேண்டுமெனவும் இதற்கு இணையாக, ஐ.நா பொதுச்சபையின் வகிபாகம் பலமாக இருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களை ஒழிப்பதை ஆதரிக்கும் இலங்கையின் நீண்டகால நிலைப்பாட்டிற்கு இணங்க, இந்த ஆண்டு இலங்கை விரிவான சோதனை தடை ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளதாகவும் இதற்கமைய, அண்மையில் அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தை இலங்கை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதனிடையே, ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும் சந்திப்பில் ஈடுபட்டார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Posted in Uncategorized

2019 ஜனவரியில் சஹ்ரானை கைது செய்யுமாறு பணிப்புரை விடுத்ததாக மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் சஹ்ரானை கைது செய்யுமாறு தான் தெளிவான பணிப்புரையை விடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இன்று (22) தெரிவித்தார்.

மூன்று சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது தன்னை இலக்கு வைத்து பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கத்துக்கு எதிரான வழக்கு இன்று (22) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை ஏற்பாடு செய்தமை அல்லது அதில் பங்குபற்றியமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று அவர் முன்னிலையானபோதே குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27வது பிரிவின் கீழ், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினரான திலீபன் என்ற இராசையா பார்த்தீபனின் 33வது ஆண்டு நினைவேந்தலை கடந்த 2020 செப்டெம்பர் 15ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம், கோண்டாவில் கோகுல வீதியில் முன்னெடுத்தார் என்றும், 2011 ஆகஸ்ட் 29ஆம் திகதி விடுதலைப் புலிகளை தடை செய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விதிகளை மீறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட சிவாஜிலிங்கத்துக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை 2022இல் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட 7 தவணைகளில் சிவாஜிலிங்கம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவ்வேளைகளில் அவர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட சிவாஜிலிங்கம் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிடியாணை பிறப்பித்திருந்தார்.

அதனையடுத்து, இன்று சட்டத்தரணி உதார முஹந்திரத்தின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அரசகுலரத்ன, இரட்ணவேல் ஊடாக சிவாஜிலிங்கம் நீதிமன்றில் ஆஜரானார்.

தமது கட்சிக்காரர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளதாகவும், இது குறித்து அறிந்த பின்னர் அவர் இன்று (22) நீதிமன்றத்தில் ஆஜராகியதாகவும் சிவாஜிலிங்கத்தின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சிவாஜிலிங்கத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும், அவரை விளக்கமறியலில் வைப்பது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், மேல் நீதிமன்ற நீதிபதி தனக்குள்ள அதிகாரத்தின்படி, பிணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முன்வைக்கப்பட்ட அனைத்தையும் பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சிவாஜிலிங்கத்தை விடுவிக்க உத்தரவிட்டார்.

பின்னர், இந்த வழக்கை ஒக்டோபர் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இன்றைய தினம் வழக்கில் சிவாஜிலிங்கம் ஆஜரானபோது அவரை கைது செய்தபோது கைப்பற்றிய வாழைக்குற்றி, கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் சான்றுப் பொருட்களாக மன்றில் குறிப்பிட்டிருந்தமை முக்கிய விடயமாகிறது.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி அபூ ஹிந் யார் என்பது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் வெளிப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் உண்மை என்ற தீர்மானத்துக்கு நாங்கள் வரவில்லை.

ஆனால் இந்த விடயங்களின் உண்மை தன்மை தொடர்பாக பூரண விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணையை தாமதப்படுத்தும் அனைவரது கரங்களிலும் இதன் இரத்தம் படிந்திருக்கிறது. தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அபூஹிந். ஆனால் அவர் யார் என கண்டறியப்பட வேண்டும்.

அத்துடன் இந்த தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம் என்ற உறுதிமொழியை தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வழங்குகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இரண்டாவது நாளாக இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை முழுமையாக எங்கள் யாருக்கும் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் செப்டெம்பர் 11 அமெரிக்க பெண்டகன் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை பூரணமாக எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். அரசாங்கம் ஏன் மக்களுக்கு இதனை மறைக்க வேண்டும்.

இந்த தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்துவதில் எமக்கு இணங்க முடியாது. அவ்வாறு தெரிவுக்குழு அமைப்பதாக இருந்தால் அதன் எண்ணிக்கை ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சமமாக இருக்க வேண்டும். பெண்டகன் விசாரணை குழுவில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமமாக நியமிக்கப்பட்டதனாலே அவர்களுக்கு உண்மையை தெரிந்துகொள்ள முடியுமாகியது.

அத்துடன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் சஹ்ரானை புலனாய்வு அதிகாரிகள் நாடு பூராகவும் தேடிக்கொண்டிருந்தனர். ஆனால் ஐ.பி. முகவரியில் சஹ்ரானுடன் அதிகமாக தொலைபேசியில் உரையாடி இருப்பது புலனாய்வு அதிகாரி ஒருவர் என அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த விடயத்தின் உண்மை என்ன என்பதை அரசாங்கம் விசாரணை மேற்கொள்ளவேண்டும்.

அதேபோன்று மாத்தளை பொடி சஹ்ரான் சொனிக் சொனிக்குடன் தொலைபேசியில் உரையாடி இருப்பது வெளிப்பட்டபோது அந்த சிம்காட் புலனாய்வு ஒருவரிடம் இருப்பது தெரியவந்துள்ளது. குறித்த புலனாய்வு அதிகாரி, இந்த தாக்குதலை ஐ.எஸ். ஏன் இன்னும் பொறுப்பேற்காமல் இருக்கிறது? விரைவாக பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது, பொடி சஹ்ரான் இந்துனேசியாவுடன் தொடர்புகொண்டு கேட்டடபோது அவர் இன்னும் பைஅத் (உறுதிமொழி) செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 23 ஆம் திகதி இந்தியாவில் இருந்து உறுதிமொழி காணொளி இணையத்தளத்துக்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் இந்த சொனிக் சொனிக் விடயத்தை விசாரணை நடத்தவேண்டும்.

அதேபோன்று குண்டுதாரி ஜெமீல் குண்டை வெடிக்கவைக்க முன்னர் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் 2 பேர் ஜெமீலின் வீட்டுக்கு சென்றுள்ளர். இது எவ்வாறு முடியும். அதேபோன்று குற்றப்புலனாய்வு அதிகாரிகள் உரையாடிய தொலைபேசி இலக்கத்தை தேடிப்பார்க்கும்போது அது பிழையான முகவரியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அந்த சிம்காட்டை பயன்படுத்திக்கொண்டே லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கீத் நொயர், பிரகீத் எக்னெலிகொட, உபாலி தென்னகோன் ஆகியோரை கடத்துவதற்கு பயன்படுத்தி இருப்பதும் இந்த சிம்காட்டை பயன்படுத்தியாகும் என்பது விசாரணைகளில் வெளிவந்திருக்கிறது. அதனால் குண்டுதாரி ஜெமீலை புலனாய்வு அதிகாரிகள் எவ்வாறு தெரிந்துகொண்டிருந்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்.

மேலும், சஹ்ரானுக்கு மேலால் ஒருவர் இருந்தார். அவரின் கட்டளைக்கமையவே அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது. அவர்தான் அபூஹிந். அபூஹிந்த என்பது அவரின் புனைப்பெயர். அதனால் இந்த தாக்குதலின் சூத்திரதாரி அபூஹிந். அவர் யார் என்பதை விசாரணை நடத்தவேண்டும். அதேபோன்று சாரா ஜெஸ்மின் தொடர்பாக டீ.என்.ஏ. பரிசோதனை 3 நடத்தியுள்ளது. முதலாவது இரண்டிலும் சாரா உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது 3ஆவதில் அவர் மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சாய்ந்தமருதில் குண்டு வெடித்த வீட்டில் குண்டு வெடித்த பின்னர் சாராவின் குரல் ஓசை கேட்டதாக சஹ்ரானின் மனைவி தெரிவித்திருக்கிறார். அதனால் இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளவேண்டும்.

மேலும், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு, அமைச்சரவை மற்றும் பிரதமரை நியமிக்க முன்னர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மேற்கொண்டுவந்த புலனாய்வு அதிகாரிகள் சானி அபேசேகர உட்பட 31 பேரை மாற்றினார். ஏன் அவர் அவ்வாறு செய்தார். இதன் உண்மையை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன், பேராயர் கர்த்தினால் இந்த தாக்குதலை அறிந்திருந்ததாகவும் அவருக்கு இது தொடர்பாக புலனாய்வு பிரிவு அறிவித்திருந்ததாகவும் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் இந்த சபையில் தெரிவித்திருந்தார். ஆனால் தாக்குதலுக்கு பின்னரே பேராயர் கர்த்தினாலுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. பேராயர் கர்த்தினாலுக்கு புலனாய்வு பிரிவு வழங்கிய தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, ஈஸ்டர் தாக்குதலுக்கு நான் உட்பட அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும். அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூறவேண்டும். அதனால் எமது அரசாங்கத்தில் தாக்குதலின் உண்மை சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்போம். இந்த உறுதிமொழியை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறேன் என்றார்.

Posted in Uncategorized

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழ் மக்களை பணயம் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது:ரெலோ தலைவர் செல்வம் எம்.பி விசனம்

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மற்றும் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் பேசும் மக்களை அழிப்பது அல்லது பணயம் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சர்வதேச விசாரணையொன்று அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று(21.09.2023) இடம்பெற்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

மேலும் தெரிவிக்கையில்,

”ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மற்றும் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் பேசும் மக்களை அழிப்பது அல்லது பணயம் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்திய உளவு அறிக்கை

சிலரின் செயற்பாடுகள் காரணமாக தமிழர்கள் எவ்வாறு துரோகிகளாக பார்க்கப்பட்டார்களோ அதேபோல உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் மக்கள் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்தபோது, இந்த விடயம் தொடர்பில் இந்தியா தமது உளவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ள போதும், அதற்கு முக்கியத்துவம் வழங்காது தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் அதனை ஏற்றுக்கொண்ட துர்ப்பாக்கிய நிலையை அவதானிக்க முடிகின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ‘சனல் 4’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தின் உண்மைத் தன்மையை ஆராய்வதை விட இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உறவைப் பிரிப்பதற்காகவா உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற கேள்வி எழுந்தள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் இருக்கின்ற நிலையில், சர்வதேச விசாரணை அவசியம்.

அத்துடன், தாக்குதல் விடயத்தில் சர்வதேச விசாரணையைக் கோரும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்குத் தாம் வலுவாக ஆதரவை வழங்குவேன்.

இதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அசாம்பாவிதங்கள் தொடர்பிலும் குரல் எழுப்புமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கோரிக்கையை முன்வைக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதார மண்டலத்தை அண்மித்துள்ள சீன ஆய்வுக் கப்பல்

சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் தற்போது இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கப்பல் தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்த தரவுகளுக்கு அமைய நேற்று முதல் குறித்த சீன கப்பல் இந்தியாவிற்கு சொந்தமான நிக்கோபார் தீவுகளுக்கு அருகில், மிகக் குறைந்த வேகத்தில் பயணிக்கிறது.

மலாக்கா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நேற்று காலை நுழைந்த Shi Yan 6 கப்பலை நிக்கோபார் தீவுகள் அருகே அவதானிக்க முடிந்தது.

இலங்கை நோக்கி நேற்று பகல் வந்த கப்பல், நேற்று மாலை வங்காள விரிகுடாவை நோக்கி திரும்பி, நிக்கோபார் தீவுகளுக்கு உரிமம் கோருகின்ற இந்தியாவிற்கு சொந்தமான பிரத்தியேக பொருளாதார மண்டலத்தின் கடல் எல்லையை அண்மித்து தமது பயணத்தை மெதுவாக முன்னெடுத்தது.

இவர்களின் புதிய பாதையை அவதானிக்கும்போது, ​​Ninety East Ridge எனப்படும் கடலின் அடிவாரத்திலுள்ள மலைத்தொடரின் மேற்பரப்பில் பயணிக்கின்றமை தெரிகிறது.

இதற்கு முன்னர் வந்த,YUAN WANG 5 கப்பல் ஊடாகவும் சீனா கடந்த மூன்று ஆண்டுகளில், Yen Hong எனும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலையும் பயன்படுத்தி குறித்த பகுதிகளில் ஆய்வுகளை நடத்தியது.

இதனிடையே, கடந்த இரண்டு தசாப்தங்களில், இந்தியாவும் அமெரிக்காவும் கடலுக்குள் உள்ள மலைகளைப் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு கொக்குத்தொடுவாயில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள் – வினோ எம்.பி.

சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைமைகுளு உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று சர்வதேச சமாதான தினம் இந்த தினத்தில் இன்று போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியான விசாரணை வேண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது சர்வதேச நியமங்களின் பிரகாரம் அகழப்பட வேண்டும்

போர்க்குற்றவாளிகள் இனம் காணப்பட்டு அவர்கள் சர்வதேச பொறிமுறையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் நாட்டில் சமாதானம் அமைதி என்பது எட்டாத கிட்டதா ஒன்றாக இருக்கின்றது இங்கே ஆட்சி செய்கின்றவர்களுக்கு சமாதானம் என்பது தேவையில்லாத விடயமாக இருக்கின்றது. ஆட்சிபீடம் ஏறுகின்றவர்கள் இனவாத கருத்துக்களை முன்னிறுத்தி பௌத்த மேலதிக்க சிந்தனையுடன் பெரும்பான்மை பேரினவாத சக்திகளின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறதுடித்து கொண்டிருக்கின்றார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு தமிழ்மக்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வினை இனப்பிரச்சினைக்கான தீர்ப்பதற்கான எந்த வழிமுறையினையும், பொறிமுறையினையும் தேடாமல் குறிப்பாக தொடர்ச்சியாக அரசியல் செய்வதற்காக நாட்டை ஆழுவதற்காகத்தான் சமாதான முயற்சிகளில் அக்கறையற்றவர்களாக இருக்கின்றார்கள்.

இறுதி போரில் அனைவரும் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தார்கள் சரணடைந்தவர்களுக்கு பாதுகாப்பு தருகின்றோம் உங்களுக்கு நல்ல வாழ்கைக்கு கொண்டு செல்கின்றோம் நீங்கள் எங்களிடம் சரணடையுங்கள் என்று ஒலிபெருக்கி மூலம் இறுதி போர்க்கால பகுதியில் அறிவித்துவிட்டு சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களைத்தான் நாங்கள் இந்த கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கின்றது.

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி என்பதை விட அது ஒரு போராளிகளின் புதைகுழியாகத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதற்கு சர்வதேச நிபுணர்குழுவினை கொண்டுவந்து அவர்களுக்கு முன்னால்தான் இந்த புதைகுழியினை தோண்ட வேண்டும் இங்குள்ளவர்களை கொண்டு பரிசோதிக்கின்ற பட்சத்தில் முடிவினை காணமுடியாது இந்த அரசாங்கத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாத தன்மை கடந்த காலங்களில் இருந்து வருகின்றது

இனிவரும் காலங்களிலும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் எல்லா விடயங்களிலும் சர்வதேச விசாரணையினை ஏற்படுத்தினால்தான் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நம்புகின்றோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் கண் திறக்கப்பட வேண்டும் வீதிகளில் புலம்புகின்ற மக்களின் குரல் அவர்களின் காதுகளுக்கு செல்ல வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : சர்வதேச விசாரணைகளுக்கு தயார் – பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நடத்தினால் அதனையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்று முடிந்த சம்பவம். எதிர்தரப்பினரது செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமானது என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

52 நாள் அரசியல் நெருக்கடியை நீதிமன்றம் தோற்கடித்ததை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கான ‘பிளேன் பி’ சிறைக்கூடத்தில் வகுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானை முறையாக விசாரித்தால் பல விடயங்கள் வெளிவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பெரேரா எனது பெயரை குறிப்பிட்டு ஒருசில விடயங்களை குறிப்பிட்டார்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டால் அதற்கும் தயாராக உள்ளேன். எப்போது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வீர்கள் என்று குறிப்பிடுவீர்கள். குண்டுத்தாக்குதல் இடம்பெற்று முடிந்த சம்பவம். எதிர்க்கட்சிகளின் செயற்பாடு சிறுபிள்ளைத்தனமானது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நிரோஷன் பெரேரா சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு இந்த குண்டுத்தாக்குல் சிறுப்பிள்ளைத்தனமானதாக இருக்கலாம். ஆனால் உயிரிழந்த,பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இச்சம்பவம் சிறுப்பிள்ளைத்தனமானதல்ல, இவரின் வரலாற்றை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் .பிள்ளையானுக்கு எதிராக வெகுவிரைவில் முறையான விசாரணைகளை முன்னெடுப்போம் என்றார்.

இதன்போது உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தலதா மாளிகைக்கு குண்டுத்தாக்குதலை நடத்தியவர், ஜோசப் பரராசசிங்கத்தை படுகொலை செய்தவர்,திரிபோலி குழுவுக்கு தலைமை தாங்குவர் எமக்கு இடையூறு விளைவிக்கிறார்.இவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருப்பது அரசாங்கத்தின் தவறு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கத்தை படுகொலை செய்த விவகாரத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிள்ளையான் சிறையில் இருந்தார். அக்காலப்பகுதியில் சிறைக்கு சென்ற சஹ்ரான் தரப்பினருக்கும், பிள்ளையானுக்கும் இடையில் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. 52 நாள் அரசியல் நெருக்கடி நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிக்கப்பட்டவுடன், பிளேன் பி சிறைக்கூடத்தில் வகுக்கப்பட்டுள்ளது. ஆகவே பிள்ளையானை முறையாக விசாரித்தால் பல விடயங்கள் வெளிவரும் என்றார்.

தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்ய இணக்கம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் ஏகமனதான இணக்கம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த வேட்பாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இன்று (21) நடைபெற்ற அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது ஏகமனதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆலோசனைக் குழுவில் குறித்த இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized