அரசு ஆபத்தில் இருக்கும்போது அரசை காப்பாற்ற ஜனாதிபதி தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு; வினோ நோகதாரலிங்கம்!

அரசு ஆபத்தில் இருக்கும்போது அரசை காப்பாற்ற ஜனாதிபதி தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமை குழு உறுப்பினருமான வினோநோகதாரலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 15 ஆம் திகதி தன்னை சந்திக்க வருமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடு இன்று மிகவும் இக்கட்டான் நிலையில் இருக்கின்றது.

விலைவாசிகள் ஒவ்வொருநாளும் விடிய விடிய ஏறிக்கொண்டே இருக்கின்றது. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மிக மோசமாக இருக்கின்றது. வரிசை யுகத்தினை மீண்டும் சந்திக்கும் நிலை வந்துகொண்டிருக்கின்றது. எந்த பொருளை வாங்க வேண்டுமாக இருந்தாலும் வரிசையில் நின்றுதான் வாங்க வேண்டியுள்ளது.

எரிபொருளின் விலை வானலாவ உயர்கின்றது. எரிவாயுவுக்கு தட்டுப்பாடு, விலை உயர்வு, சீமெந்தை பெற முடியாதுள்ளது. 2000 ருபா வரைக்கு செல்லும் நிலை உள்ளது. இன்னும் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி கோத்தபாய தற்போது மிகவும் தடுமாறிக்கொண்டிருக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. அவர் தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டை ஆள முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது. அவருக்கு ஆதரவாக வாக்களித்த 69 இலட்சம் மக்களும் அவரை துரத்தியடிக்க வேண்டும் அவர் இந்த நாட்டை ஆள தகுதியற்றவர் என சொல்லும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது.

இந்த நாடு வெளிநாடுகளில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றது. இனிமேல் நாங்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை உள்ளது.

இவ்வாறான நிலையில்தான் நாட்டை ஆட்டம் காண செய்து விட்டு நாட்டை அதாலபாதாழத்திற்குள் தள்ளிவிட்டு தான் தப்புவதற்காக இவ்வளவு காலமும் பேச முடியாத நிலையில் இருந்துகொண்டு ஐ. நா. மனித உரிமை பேரவையில் கேள்வி மேல் கேள்வி எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் இந் நிலையில் தன்னையும் இந்த அரசாங்கத்தினையும் தப்ப வைப்பதற்காக எங்களோடு பேச வேண்டும் என்ற வார்த்தை கூறப்பட்டுள்ளது.