அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க அனுமதி கோரிய சட்டமா அதிபர் !

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் கார்திய புஞ்சிஹோ இல்லாமல் 2015 பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த கோரிக்கையை சட்டமா அதிபர் முன்வைத்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கு 688 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய 2015 பெப்ரவரி மாதத்தில் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களாக குறித்த இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் வசிக்கும் முதலாவது குற்றவாளியான அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் இன்னும் சாதகமாக பதிலளிக்கவில்லை என நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

அத்தோடு இந்த விவகாரத்தில் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து ஒரு பிரேரணை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அறிவித்தார்.

இதேவேளை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற இந்த வழக்கின் 8 வது சந்தேக நபரான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரஞ்சன் ஹுலுகல்லேவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.