வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை, சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்புக்குள்ளாக்க முனையும் திட்டமிட்ட செயற்பாடுகளை கண்டித்தும், தடுத்து நிறுத்துமாறு கோரியும் கல்முனை மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆலய பிரதேசத்தை புனித பிரதேசமாக சட்டப்படி பிரகடனப்படுத்துமாறும் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களுக்கான மாதாந்தக் கூட்டம் மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில், சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திலேயே ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளைக் கோரும் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கல்முனை மாநகர சபை பெரும்பான்மை முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்டிருந்தும் அவர்களதும் ஏகோபித்த ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
சபை அமர்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்ரி மகேந்திரன் தீர்மானம் தொடர்பான பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“கிழக்கிலங்கையில் மிகவும் தொன்மை வாய்ந்த பிரசித்திபெற்ற புராதன இந்து ஆலயமாக திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயம் திகழ்ந்து வருகின்றது.
உலகில் பிரசித்தி பெற்ற, இந்துக்களின் திருத்தலமான கோணேஸ்வரர் ஆலயத்தின் இன்றைய நிலை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொல்பொருள் என்ற போர்வையில் அங்கு விசமத்தனமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், ஆலயத்தின் புனிதத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்புகளும் மேலோங்கி நிற்கின்றன.
இதன் ஓர் அங்கமாகவே திட்டமிட்டு தொல்பொருள் என்ற போர்வையில் ஆலய புணருத்தாரண கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நாடு சுதந்திரமடைந்த போது ஆலயம் அமைந்துள்ள திருத்தலம் 18 ஏக்கர் ஒரு றூட் பரப்பளவைக்கொண்டதாக இருந்ததென வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், மாறி, மாறி வந்த இந்த நாட்டின் அரசுகள் இப்புனித பிரதேசத்தை அபகரிப்பதிலும், ஆக்கிமிப்பதிலும் அக்கறைகாட்டி வந்துள்ளதால் இன்றைய மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த அரசின் பலம் பொருந்திய அமைச்சர் ஒருவர் சட்ட விரோதமாக, வாழ்வாதார உதவி என்ற போர்வையில் தென்னிலங்கை சிங்களவர்களுக்கு 22 கடைகளை அமைக்க வழிவகுத்தார்.
இத்தொகை இன்று பல்கிப்பெருகி, எமது ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு சவாலாகவும் அமைந்துள்ளது.
எனவே, கோணேஸ்வரர் ஆலய பூமியில் இடம்பெறும் பேரினவாத, பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புக்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஆலயப் பிரதேசம் சட்டபூர்வமாக புனிதப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். இதற்கு நமது குரல் ஒன்றுபட்டதாக ஓங்கி ஒலிக்க வேண்டும்” என்றார்.
உறுப்பினர்களான சந்திர சேகரம் இராஜன், எம். குபேரன் ஆகியோர் பிரேரணையை வழிமொழிந்து சபையில் உரையாற்றியதுடன், பிரேரணைதொடர்பான தீர்மானம் சபையில் ஏகமனதாகவும் நிறைவேற்றப்பட்டது.