ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கான 200 மில்லியன் டொலர் அவசரகால உதவிக் கடனை வழங்க தீர்மானித்துள்ளது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பின்மை இலங்கை மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்நிலையில் வழங்கப்படவுள்ள கடனுதவி வருமையானோர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நேரடி நிதியுதவியை விரிவுபடுத்தும்.
அத்தோடு வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பாலூட்டும் தாய்மாருக்கான உணவுக்கான கொடுப்பனவு என்பவையும் இதனுள் உள்ளடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.