இந்தியா, மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கு இடையில் சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆலோசனை செயலகம்

இந்தியா, மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கு இடையில் சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான முத்தரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசனை செயலகம் இன்று (01) கொழும்பில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த செயலகம் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கிடையிலான சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முத்தரப்பு தேசிய பாதுகாப்பு மாநாட்டின் பலனாக புதிய செயலகம் ஸ்தாபிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய நிகழ்வில் தேசிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, கடற்படைத் தளபதி, இந்தியா மற்றும் மாலைதீவுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்து சமுத்திரம் உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியென்பதால், இந்த செயலகத்தினூடாக முழு உலகத்திற்கும் நன்மை கிடைக்குமென வௌிவிவகார அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இந்த புதிய செயலகம் 24 மணித்தியாலங்களும் இயங்குமென கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் உளுகேதென்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, மாலைதீவுகள் மற்றும் இலங்கையின் சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசனை மாநாடு கடந்த வருடம் நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டின் கண்காணிப்பு நாடுகளாக பங்களாதேஷ், சீஷெல்ஸ் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள் பங்கேற்றிருந்தன.