இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் நேற்று திங்கட்கிழமை விரிவான பேச்சுக்களை நடத்தியதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்றிரவு தெரிவித்தது.
இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக மெய்நிகர் சந்திப்பாக இது இடம்பெற்றது. இதன்போது இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் தொடர்பில் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் மூலமாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தொடர்பாக இந்தியத் தரப்பிலிருந்து அண்மைக் காலத்தில் அதிகளவுக்கு கரிசனை தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் பேச்சுக்கள் இடம் பெற்றிருப்பது முக்கியமானதாகும்.
“இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான பேச்சுவார்த்தைகள் சிறப்பானதாக அமைந்திருந்தது. இரு தரப்பு விவகாரங்கள் தொடர்பில் இதன்போது நாம் ஆராய்ந்தோம். பிராந்திய உறவுகள் குறித்தும் பேசினோம். நாம் தொடர்ந்தும் நெருக்கமான தொடர்பில் இருப்போம்” என இந்தப் பேச்சுக்கள் குறித்து தனது ருவிட்டர் தளத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பதிவு செய்துள்ளார்.