இராணுவத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கை-உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

இலங்கையின் காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை ஆட்சேபித்து மனித உரிமை ஆரவலர்கள் இருவர், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளர் மிராக் ரஹீம் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு மாறாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களை தற்காலிகமாக இரகசிய காவலில் வைத்திருப்பதற்கான நிர்வாக நடைமுறையின் சட்டபூர்வ தன்மையை மனுதார்கள் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

பொலிஸ்மா அதிபர், நீதி அமைச்சர், பொது பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, வான் படைத் தளபதி, கடற்படைத் தளபதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். .

தமது அடையாளத்தை காட்டாத, காவல்துறையினருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்படாத வாகனங்களில் போராட்டக்காரர்கள் அழைத்துச் செல்லப்படுவதுடன் சில நேரங்களில் நீதிவான் ஒருவர் முன் முன்னிலைப்படுத்தப்படாமல் பல மணி நேரம் அடையாளம் தெரியாத இடங்களில் போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.