இறுதி நேரத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பை நிராகரித்தது ஜே.வி.பி

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை நிராகரிப்பதாகவும் , ஜனாதிபதியுடன் சந்திப்பில் ஈடுபடப்போவதில்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இறுதி நேரத்தில் அறிவித்தது.

இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் , ஜே.வி.பி. உறுப்பினர்களுக்குமிடையில் சர்வகட்சி அரசாங்கம் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்தது.

சர்வகட்சி அரசாங்கத்தில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்பதையும் , சர்கட்சி அரசாங்கம் குறித்த தமது யோசனைகளையும் முன்வைப்பதற்காகவும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்வோம் என்று ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும் சந்திப்பில் யார் கலந்து கொள்வார்கள் என்பது குறித்து தீர்மானிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தாம் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

பிமல் ரத்நாயக்க தனது டுவிட்டர் பதிவில் , ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் ஜே.வி.பி. பங்கேற்காது. ரணில் விக்கிரமசிங்க – மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முறையற்றது என்பதை ஜே.வி.பி. ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த முறைகேடான ஆட்சியை தோற்கடித்து மக்களின் இறையாண்மையை நிலைநாட்டுவதே தற்போதுள்ள பிரச்சினைகளுக்க ஒரே தீர்வு’ என்று குறிப்பிட்டுள்ளார்