சென்னை: இலங்கைக்கு இந்தியா கடன் கொடுப்பதற்கு முன்பு, 13 -வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்ற உத்தரவாதத்தை அந்நாட்டு அரசிடம் இருந்து கேட்டுப்பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
தமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே அரசமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இருந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுவதாவது;
ராஜீவ்காந்தி
முன்னாள் பாரத பிரதமர் தலைவர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் திரு. ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையிலான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் ஏற்பட்டது. தமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே அரசமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இருந்து வருகிறது.
அதிகாரப் பகிர்வு
முழு அளவிலான உள்நாட்டுப் போர் உருவாகியிருந்த நேரத்தில் இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சி அது. மாகாண கவுன்சில்களின் உருவாக்கத்திற்கும், சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் உட்பட 9 மாகாணங்களும் சுயாட்சி மேற்கொள்ளும் வகையில் அதிகாரப்பகிர்வு கிடைப்பதற்கு உறுதிப்படுத்தியது. கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல் துறை போன்ற பிரிவுகளில் மாகாண நிர்வாகங்களுக்கு அதிகாரம் தரப்படுகிறது. ஆனால், இத்தகைய அதிகாரம் இன்றளவும் தரப்படவில்லை.
இலங்கைக்கு கடன்
தற்போது, இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. பல்வேறு நாடுகளிடம் இருந்து கடன் வாங்கிக் கொண்டு இருக்கிறது இலங்கை. இலங்கைக்கு சுமார் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாயை கடனாக இந்தியா தர இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. கடன் தரப் போகும் இந்தியா, இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கான உத்தரவாதத்தை இலங்கையிடம் இருந்து பெற வேண்டும்.
13-வது சட்டத்திருத்தம்
மேலும், இலங்கைத் தமிழருக்கு சம உரிமை பெற்றுத் தரும் அரசியல் சாசன 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.