2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கான கால வரையறையை அறிவிப்பது கடினம் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
பலதரப்பு கடன் வழங்குநர்களின் காலக்கெடு நிச்சயமற்றதாகவே உள்ளதாகவும், அது எப்போது கிடைக்கும் என்பது அவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலில் தங்கியுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடனான கலந்துரையாடலின் பின்னரே அது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு தலைவர் Peter Breuer மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் Masahiro Nozaki ஆகியோர் ஜப்பானின் Nikkei Asia இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி இணக்கப்பாடு எட்டப்பட்டது.
எனினும், கடனை விடுவிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் அனுமதி தேவைப்படுகிறது.
அதற்காக, இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான சான்றிதழை சர்வதேச நாணய நிதியத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், இந்த வேலைத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு செலவாகும் காலம், கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான காலத்தை உறுதியாகக் கூற முடியாது என Peter Breuer, Masahiro Nozaki ஆகியோர் கூறியுள்ளனர்.