இலங்கையின் சமாதானத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலுவிழக்கச்செய்யவேண்டாம் – CPA வலியுறுத்தல்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் இடம்பெற்ற நடாஷா எதிரிசூரியவின் கைது தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் சீர்குலைக்கவேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் அண்மைக்காலங்களில் இடம்பெறும் கைதுகள் மற்றும் அதன்விளைவாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

அண்மையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் நகைச்சுவைப்பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம். மத ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான புதியதொரு உத்தியே இதுவாகும்.

அண்மையகாலங்களில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் இந்தக் கைது மாத்திரம் இடம்பெறவில்லை என்பதையும் மத மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாகக்கூறி மேலும் பலர் கைதுசெய்யப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

அதுமாத்திரமன்றி நடாஷா எதிரிசூரியவின் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கான இடைவெளி சுருக்கமடைந்திருப்பதையும் அதன்மீதான மிகமோசமான தாக்கங்களையும் வெளிப்படுத்துகின்றது.

மேலும் மத ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் இலக்காகக்கொண்டு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்யும் வகையில் அத்தகைய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையின் கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் மத ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன், அவர்கள் அரச கட்டமைப்புக்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் மூலம் இலங்கையின் சமாதானத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலுவிழக்கச்செய்யவேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.