இலங்கை அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி செயற்படுவதாக FIDH குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி செயற்படுவதாக மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சம்மேளனம் (International Federation for Human Rights) குற்றம் சுமத்தியுள்ளது.

போராட்டத்தை ஒடுக்குவதன் மூலம் நாட்டில் தந்திரோபாய ரீதியாக அடக்குமுறை கையாளப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சம்மேளனத்தில் 116 நாடுகளை சேர்ந்த 188 அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதாகவும் போராட்டங்களை தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்துவதாகவும் ஜனாதிபதி சமீபத்தில் தெரிவித்த கருத்து மிகவும் பாரதூரமானது என மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆதிலுர் ரஹ்மான் கானின்  (Adilur Rahman Khan)கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போராட்டக்காரர்களின் உரிமைகளை தற்போதைய அரசாங்கம் எந்தளவிற்கு பாதுகாக்கிறது என்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி ,  நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் 08 பேர் தாக்கப்பட்டமை குறித்தும் அந்த அறிக்கையில் கடுமையாக சாடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான முதல் நான்கு ஊடகவியலாளர்கள் நியூஸ்ஃபெஸ்ட் இலச்சினை பொறிக்கப்பட்ட T-Shirts
அணிந்திருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக அடையாள அட்டையுடன் கடமையில் ஈடுபட்டிருந்த போதே அவர்கள்  தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நான்கு ஊடகவியலாளர்களை காப்பாற்றுவதற்காக சென்ற மேலும் நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையும் பாரதூரமான நிலைமை என சர்வதேச மனித உரிமைகள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான போராட்டங்களை ஒடுக்குவதற்காக துப்பாக்கி குண்டுகள்,  கண்ணீர்ப் புகை, நீர்த்தாரை பிரயோகத்தினை பயன்படுத்துவது, பொதுமக்களின் ஒன்றுகூடலை அநாவசியமாக கட்டுப்படுத்துவது, அவசரகால சட்டத்தை பயன்படுத்தி சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது , சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவது உள்ளிட்டவை பாரதூரமான விடயம் எனவும் சர்வதேச மனித உரிமைகள் சம்மேளனம் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பிலான இடைக்கால மீளாய்வு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிக்கை வௌயிடப்பட்டுள்ளது.