உள்ளூராட்சி சபை தேர்தலை மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகளை தற்போது தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை,மக்கள் பிரதிநிதிகளிருந்து செயற்பட வேண்டிய இடத்தில் அதிகாரிகள் அமர்ந்து செயற்படுவதை ஒருபோதும் தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக் கொள்ளாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் சபை உறுப்பினர்கள் நேற்று தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த வருடத்தின் மார்ச் மாதம் நடத்தப்படவிருந்த உள்ளுராட்சி சபை தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை ஒத்திப் போடப்பட்டுள்ளது. தேர்தல்களை ஒத்திப் போடுவதை தேர்தல் ஆணைக்குழு ஒருபோதும் ஆதரிக்காது.
அந்த வகையில் ஆறு மாதத்துக்கு முன்பதாக அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும். அதன்படி கடந்த செப்டம்பர் 20ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது.
ஆனணக்குழு தற்போது தேர்தல் இடாப்புகளை உறுதிப்படுத்தும் காலமாகும். அதனை உறுதிப்படுத்தும் முன்பு இக்காலத்தில் நாம் தேர்தலை அறிவித்தால் கடந்த 2021 தேர்தல் இடாப்பின்படியே அது செல்லுபடியாகும்.
அவ்வாறானால் இரண்டரை இலட்சத்துக்குமதிகமானோருக்கு வாக்களிக்கும் உரிமை இழக்கப்படும். அதற்கு ஆணைக்குழு தயாரில்லை. அதனைக் கவனத்தில் கொண்டு செயற்படுவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதே ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.