எம்.வி. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த இந்திய கரையோரப்பாதுகாப்பு கப்பல்கள் மற்றும் விமானம் என்பன அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஐசிஜி வைபாவ், டக் வோடர் லில்லி ஆகிய இரு கப்பல்கள் மற்றும் ஐசிஜி டொர்னியர் என்ற விமானம் இவ்வாறு எம்.வி. எக்ஸ்- பிரஸ் பேர்ல் என்ற கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
மேலும் விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிக்கொப்டர் உள்ளிட்ட இலங்கை கடற்படையின் கப்பல்களும் தீயணைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சமுத்திர சூழலை பாதுகாப்பதற்காக தீ பரவியுள்ள எம்.வி. எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலை 50 கடல் மைல் தொலைவிற்கு ஆழ்கடலுக்கு நகர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடல் மாசுறுதல் தடுப்பு அதிகார சபை தெரிவித்திருந்தது.
கப்பலிலுள்ள கொள்கலனொன்று வெடித்தமையே தீப்பரவல் தீவிரமடைய காரணமாகியுள்ளது. மேலும் கப்பலிலிருந்த கொள்கலன்களில் 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக கடல் மாசுறுதல் தடுப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.