சித்தார்த்தன் அவர்கள் தலைமை தாங்கும் ஒருமித்த நிலைபாட்டு முன்னெடுப்பில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவதில் விருப்பத்தை தெரிவித்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளின் ஒருமித்த செயற்பாடு குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்ற வேண்டும். அந்த வரலாற்றுத் தேவையை உணர்ந்து கொண்டுள்ளோம். இதன் முதல்கட்ட கலந்துரையாடல் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி தலைவர்களுக்கு இடையில் நடைபெற்றது. அதற்குப் பெரும் ஆதரவினை அனைவரும் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் சித்தார்த்தன் அவர்களே எங்களோடு முனைப்பாக தொடர்ந்தும் செயலாற்றினார். மற்ற கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கும் கூட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் அளப்பரிய பங்களிப்பை செய்தவர் சித்தார்த்தன்.
தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் வகையிலே கடந்த சில மாதங்களாக சந்திப்புகள் நடைபெற்று வருகின்றதன. இதில் காத்திரமான வெற்றியும் கண்டிருக்கிறோம். தற்போது பல கட்சி தலைவர்கள் சேர்ந்து முன்னெடுக்கும் நிலைமைக்கு இது வளர்ச்சி கண்டுள்ளது.
இதில் பல கூட்டங்களில் மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்துகொண்டு இருந்தாலும் இறுதி நேரங்களில் பின்வாங்கும் போக்கினை கடைப்பிடித்து இருந்தார். அதற்கான காரணத்தை இப்போதுதான் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். இதனை ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தால் இன்னும் துரிதமான முன்னேற்றத்தை இவ்விடயத்தில் அடைந்திருக்க முடியும்.
இருப்பினும் இந்த விடயங்களை சித்தார்த்தன் அவர்களும் இணைந்தே முன்னெடுத்திருந்தார் என்பதை மாவை சேனாதிராஜா நன்கு அறிந்திருந்தார்.
சித்தார்த்தன் அவர்கள் தலைமை தாங்கும் ஒருமித்த நிலைபாட்டு முன்னெடுப்பில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவதில் விருப்பத்தை தெரிவித்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. அதை நாம் வரவேற்கிறோம்.