எமது ஆட்சியில் ஊழலிருந்தால் வெளிக்காட்டுங்கள் அரசாங்கத்திற்கு ரெலோ முன்னாள் தவிசாளர் நிரோஷ் சவால்

தங்கள் கட்சி அரசியல்வாதிகளைத் தவிர ஏனைய அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டும் அரசாங்கம் முடிந்தால் நாம் கடந்த ஐந்து ஆண்டுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையை ஆட்சி செய்துள்ள நிலையில் அங்கு ஊழல்கள் இடம்பெற்றிருந்தால் அதனை பிடியுங்கள் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

தமது கட்சி ஆட்சி அமைத்தால் மாத்திரமே ஊழலுக்கு எதிராக செயற்பட முடியும் என்று அரசாங்கம் பொய் பேசி வருகின்றது. ஏனைய சகல அரசியல் தரப்பினரையும் ஊழல்வாதிகள் போல் கூறுகின்றது.

நாம் கடந்த ஐந்து ஆண்டுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினை ஆட்சிசெய்திருக்கின்றோம். அதற்கு முன்னரும் மக்கள் பிரதிநிதிகளாக இருந்திருக்கின்றோம். இந் நிலையில், பதவியில் உள்ள அரசாங்கம் என்ற வகையில் நீங்கள் எம்மால் ஊழல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அல்லது துஸ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் தாராளமாக கணக்காய்வு செய்து வெளிக்கொண்டு வருங்கள்.

கிராமங்கள் தோறும் மேடைகளை அமைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என சகலரும் தம்மைத் தவிர ஏனையவர்கள் சகலரும் ஊழல்வாதிகள் என்கின்றனர். தாம் சபைகளை கைப்பற்றினால் மாத்திரமே கிராமங்களை கட்டியெழுப்ப முடியும் என்கின்றனர்.

நான் ஐந்து ஆண்டுகள் உள்ளுராட்சி மன்றத்தின் தவிசாளர் பதவியில் நிறைவேற்று அதிகாரியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு தொங்கு நிலைச் சபை ஒன்றினை நடத்தியுள்ளேன். பல தமிழ்க் கட்சிகளும் ஆதரவையும் ஒத்துழைப்பினையும் நல்கியுள்ளனர். ஆட்சிக்கு ஆதரவளித்தோர் தமது நலனுக்காக ஆதரவளிக்கவில்லை. சலுகைகளுக்காக ஆதரவளிக்கவில்லை. இந் நிலையில் எம்மை பிரதேச சபைக்கு அனுப்பிய மக்கள் மற்றும் தவிசாளராகத் தெரிவு செய்த ஏனைய கட்சிகளினது கௌரவ உறுப்பினர்கள், தவிசாளராக தெரிவு செய்த கட்சி என சகலரதும் கௌரவமும் நீங்கள் எழுங்தமானமாக முன்வைக்கும் விமர்சனங்களால் பாதிக்கப்படக்கூடாது. என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.