ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் சத்தியாகிரக போராட்டம்

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி, மக்களின் துயரங்களை அரசாங்கத்திற்கு கூற போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹைட்பார்க்கில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடத்துவது சத்தியாகிரகப் போராட்டத்தின் எதிர்பார்ப்பு அல்ல. மக்கள் படும் துயரங்கள் குறித்து அரசாங்கத்திற்கு செய்தியை வழங்குவதே இதன் நோக்கம். நாடு என்ற வகையில் நாம் அனைவரும் தற்போது ஒன்றிணைய வேண்டும்.

தற்போது அவசியமானது அரசியல் அதிகார போராட்டம் அல்ல.மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அத்துடன் நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு தீர்வை தேட வேண்டும்.

அப்பாவி மக்கள் இரவு பகல் பாராது வரிசைகளில் துன்பப்பட்டு வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வேண்டுமாயின் நாடு என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இன, சமய பேதங்களை ஒதுக்கி வைத்து விட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.