2004 ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் நாட்டை கூட்டாளி நாடென காங்கிரஸில் அறிவித்த அமெரிக்கா, இன்று பாக்கிஸ்தான் நாட்டோடு இருந்த அந்தக் கூட்டாணி உறவை முறித்துக் கொண்டது. இதுவரை அமெரிக்கக் காங்கிரஸில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்கும் காரணம் உண்டு. இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரம் மற்றும் பொருளாதாச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களில் இந்தியாவோடு மேலும் சில இணக்கப்பாடுகளை ஏற்படுத்த வேண்டியதொரு தேவையுள்ளது.
பாக்கிஸ்தான் சீனாவோடு அதிகளவில் உறவாடுவதே அந்த நாட்டுடனான கூட்டாளி உறவை முறித்துக்கொள்ள அமெரிக்கா முற்பட்டதெனக் கூறினாலும், இந்தியாவைத் தம்வசப்படுத்தும் நோக்கிலும் அந்தக் கூட்டாளி உறவை முறித்துக்கொண்டதெனலாம்.
ஆனாலும் பாக்கிஸ்தான் அமெரிக்காவோடு கூட்டாளி உறவை வைத்திருந்த நாட்களைவிடவும் சீனாவுடன் உறவை மேற்படுத்தியதால் உள்நாட்டு அபிவிருத்தி மற்றும் பொருளாதார நலன்களில் அதிகளவு நன்மை பெற்றதாகவே பாக்கிஸ்தான் உணருகின்றது. ஆனால் இந்திய ஊடகங்கள் பாக்கிஸ்தான் சீனா வழங்கிய கடனில் மூழ்கியுள்ளதாகக் கிண்டலாகக் கூறுகின்றன.
பங்களாதேஸ், மாலைதீவு போன்ற அயல் நாடுகளும் சீனா வழங்கிய கடனில் மூழ்கியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஆனால் மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராகீம் இந்திய அரடன் கூடுதல் உறவைப் பேணி வருகின்றார் என்பது வேறு கதை.
இவ்வாறனதொரு நிலையிலேதான் தைவான் நாட்டைச் சீன இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அத்துடன் சீனாவின் பிரதான துறைமுகங்களான டியான்ஜின், சென்ஜென், லியாயுன்காங், ஜியான்ஜாங் ஆகிய நான்கு துறைமுகங்களை, நேபாளம் அரசின் பாவனைக்குச் சீன அரசு கடந்த மாதம் முதல் அதிகாரபூர்வமதாகத் திறந்துவிட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகத்துக்கு, இந்தியாவின் துறைமுகங்களையே நேபாள அரசு தங்கியிருந்தவொரு நிலையிலேதான், கடந்த ஆண்டு தனது துறைமுகங்களைச் சீனா வழங்கத் தீர்மானித்துக் கடந்த மாதம் அனுமதி வழங்கியுள்ளது. அதுமாத்திரமல்ல, நேபாள உயர் கல்லூரிகளில் சீன மொழியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்குவதாகவும், சீனா அறிவித்துள்ளது.
ஆகவே அயல்நாடுகளின் பிடியில் இருந்து இந்தியாவை ஒதுக்குவதற்கே சீனா இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்று கூறலாம். 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழப்போர் இல்லாதொழிக்கப்பட்ட நிலையில், இலங்கையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த சீனா, தற்போது இந்தியாவின் அயல்நாடுகளான பாக்கிஸ்தான், நேபாளம், பங்களாதேஸ் ஆகிய நாடுகளிலும் பொருளாதார அபிவித்தி மற்றும் கடன் உதவிகளை வழங்கி இலங்கைக்குச் சமாந்தரமான ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகின்றது.
இதன் மூலம் இந்துமா சமூத்திரத்தில் தன்னையும் ஒரு உறுப்பு நாடாகச் செயற்கையாக வடிவமைத்துள்ள சீனா, ஈழப்போரின் பின்னரானதொரு சூழலிலேயே இலங்கையைத் தளமாகக் கொண்டு இந்த அணுகுமுறையை இலகுவாகக் கையாளுகின்றது.
இலங்கைக்கு அடுத்தபடியாக நேபாள அரசைச் சீனா தனக்குரிய தளமாக மாற்றி வருகின்றதெனலாம். குறிப்பாக இந்த நிதியாண்டுக்கான முதல் காலாண்டில், நேபாளத்துக்கு வந்த நேரடி அன்னிய முதலீட்டில், 90 சதவீதம் சீனாவுடையது. திபெத் எல்லைப்பகுதியான கீரங்கிலிருந்து, நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு ரயில் பாலம் அமைக்கும் திட்டம் உட்பட பல திட்டங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. உள்கட்டமைப்பு பணிகளை நிறைவேற்ற, நேபாளத்துக்கு சீனா, தேவையானளவு கடன் வழங்கியுள்ளது.
இதனால் இந்தியாவின் பிடியில் இருந்தும் நேபாளம் மெல்ல மெல்ல விலகும் ஆபத்துள்ளது. இலங்கையில் கொழும்பு போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தின் நிர்ணமானப் பணிகள் 55 சதவீதம் பூர்த்தியடைந்த நிலையில், இந்தியாவின் பிடியில் இருந்த நேபாளத்தில் தனது வர்த்தகச் செயற்பாடுகளை சீனா ஆரம்பித்துள்ளதெனலாம்.
சீனாவின் இந்த நகர்வுகளோடு கொழும்பு போட் சிற்றித் திட்டமும் நிறைவேறி வரும் நிலையில், கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் கனடா, பிரித்தானிய ஆகிய நாடுககள் சீனாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. சுமார் 25.9 மில்லியன் மக்கள் வாழும் சீனாவின் சிகின்ஜான்ங் (Xinjiang) மாநிலத்தில் முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தவர்களுக்கு எதிராக சீனா மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.
சிகின்ஜான்ங் மாநிலத்தின் தலைநகரான யுனெகவுர் (Uyghur) பிரதேசத்தில் மாத்திரம் முஸ்லிம்கள் உள்ளிட்ட 3.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அங்குதான் சீனாவின் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. இதனைக் காரணம் காண்பித்துத் தடை விதிக்கப்பட்டாலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளைக் கடந்து சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு பதலடியாக அறிவித்துள்ளது.
சீனாவுடன் ஐரோப்பாவுக்கு வலுவான நிலையான தொடர்பு தேவை என்று ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் மாஸ் உள்ளிட்ட சில இராஜதந்திரிகளும் வலியுறுத்தியுள்ளனர். சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டாளர், போட்டியாளர் மற்றும் அமைப்பு ரீதியான போட்டியாளரும்கூட என அமைச்சர் மாஸ் விவரித்துள்ளார்.
ஆகவே இது சீனாவுக்கு ஆதரவைக் கொடுத்திருக்கிறது. பிரித்தானியா அமெரிக்pகாவுடன் சேர்ந்து தடையை விதித்திருந்தாலும்கூட, இந்த நிதியாண்டில் பிரித்தானியாவின் மிகப் பெரிய இறக்குமதியாளராக சீனா மாறியுள்ளது.
2018 ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டின்; முதல் காலாண்டு வரை சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி 66 வீதத்தால் உயர்வடைந்து 16. 9 பில்லியன் பவுண்ஸ்சாகப் பதிவாகியுள்ளதாகப் பிரித்தானிய முதலீட்டுச் சபை கூறுகின்றது.
இந்தவொரு நிலையில் அமெரிக்காவுடன் சேர்ந்து சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தமையினால் பிரித்தானிய மேலும் சிக்கல்களையே எதிர்நோக்கும் நிலை உருவாகலாம். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சீனாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்காதா அமெரிக்கா. பிரித்தானியா கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம். சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் காரணம்கூறி ஏன் தடை விதித்தது என்ற கேள்விகள் இந்த இடத்தில் எழாமலில்லை.
சீனாவை மையப்படுத்தி 15 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership- RCEP) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அமெரிக்க நட்பு நாடுகளான அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளும் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் சர்வதேச வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபட்டால், உலகப் பொருளாதார வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு வருமானத்தை இந்த நாடுகள் பெறும் நன்மை உருவாகும்.
இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்க நட்பு நாடுகள் கொழும்பு போட் சிற்றியில் முதலீடுகளைச் செய்யக்கூடிய ஏற்பாடுகளும் உண்டு. குறிப்பாக இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக அமெரிக்காவினால் இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “குவாட்“ அமைப்பில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கொழும்பு போட் சிற்றியில் முதலீடுகளைச் செய்யக்கூடிய வாய்ப்புகளும் இந்த நாடுகளோடு பிரித்தானியாவும் இணையக்கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கலாம்.
2012 ஆம் ஆண்டு ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தம் (Trans Pacific Partnership-TPP) கைச்சாத்திடப்பட்டு 2017ஆம் ஆண்டு செயலிழந்தால், அவுஸ்திரேலியா மீது ஆத்திரமடைந்த சீனா, அவுஸ்திரேலியக் கப்பல்களுக்குத் தடைவித்தது. மறைமுகமாக பொருளாதாரத் தடைகளையும் ஏற்படுத்தியது. இந்தவொரு நிலையிலேயே சீனாவை மையப்படுத்திய, RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள அவுஸ்திரேலியா, எந்தளவு தூரம் குவாட் கடற்படைப் படைப் பயிற்சியிலும் அதன் பின்னரான இந்தோ- பசுபிக் பாதுகாப்புச் செயற்பாடுகளிலும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் என்ற சந்தேகங்களும் உண்டு.
இதேபோன்று சீனாவிடம் இருந்து அதிகளவு பொருட்களைக் கொள்வனவு செய்யும் பிரித்தானிய, அமெரிக்காவுடன் சேர்ந்து சீனாவுக்குத் தடை வித்திருந்தாலும், சீனாவோடு மீண்டும் கூட்டுச் சேரும் நிலையும் வரலாம். ஏனெனில் அந்தளவுக்கு சர்வதேசச் சந்தைகளில் சீன அதிகக்கம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையும் மற்றும் நேபாளம் உள்ளிட்ட இந்தியாவின் அயல் நாடுகளும் தற்போது சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் வர ஆரம்பித்துள்ளமையும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இல்லையெனலாம்.
கொழும்பு போட் சிற்றிக்கான தனி ஆதி்க்கத்துக்கான பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது உறுதி என்பதை அறிந்தே இந்தத் தடை விதிக்கப்பட்டது என்ற முடிவுக்கும் வரலாம்.
ஏனெனில் சீனாவில் முஸ்லிம்கள் மற்றும் பிற சமயத்தவர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெறுகின்றது. உண்மையில் தடைக்காண காரணம் அதுவாகவே இருந்தால், ஈழத்தமிழர்கள் கோருகின்ற இன அழிப்பை ஏற்று அல்லது குறைந்தபட்சம் போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த நாடுகள் ஏன் இலங்கைக்குத் தடைகள் விதிக்கக்கூடிய எச்சரிக்கை விடுக்வில்லை என்ற கேள்விகளும் எழாமலில்லை.
ஏனெனில் இன்று இலங்கைதான் ஆசியப்பிராந்தியத்தில் சீனாவின் முக்கிய புள்ளியாக மாறிவருகின்றது. ஆகவே சீனாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட இந்தத் தடை என்பது RCEP எனப்படும் ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டு கொழும்பு போட் சிற்றியில் ஐரோப்பிய நாடுகளையும் கூட்டிணைக்கின்றதொரு பொருளாதார நகர்வுகளைக் குறைந்தபட்சம் தடுக்கும் நோக்கமாகவும் இருக்கலாம். குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் ஆணைக்குழுவில் அங்கம் வகுக்கவுள்ள எட்டு உறுப்பினர்களும் சீனர்கள்;.
இலங்கையர்கள் எவரும் அதில் உறுப்பினராக இருக்கவும் முடியாது. ஆகவே ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைக்கு மாறாக இலங்கையின் இறைமை காக்கப்பட வேண்டுமென உரக்கச் சத்தமிட்டுச் சிங்கள ஆட்சியாளர்களை நியாப்படுத்தி வரும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள், இலங்கையின் இறைமை சீனாவிடம் பங்கிடப்படுவதற்குக் காரணமாக இருந்த அந்தச் சட்டமூலம் தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வமதாக வாய்திறக்கவேயில்லை.
சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதிகளவு அக்கறையை வெளிப்படுத்தியது போன்று. சீனாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கின்ற இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை மறுக்கப்படுகின்றமை ஏன் இந்த நாடுகளுக்குத் தெரியாமல் போனது? உண்மைப் பின்னணிதான் என்ன?
அ.நிக்ஸன்-