ஒக்டோபர் 5 இல் ஜனாதிபதித் தேர்தல் ! – ஹரின் பெர்ணான்டோ

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி இடம்பெறும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி நிச்சயமாக நடக்கும். அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

அவர் எப்படி வெல்வார் என்பதை வென்ற பிறகு நான் காண்பிக்கிறோம். ஐ.எம்.எப். தற்போது எமது அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் திருப்தியடைந்துள்ளது.

பலரும், ஐ.எம்.எப். எமக்கு உதவிகளை செய்யாது என நாடாளுமன்றத்தில் கூறினார்கள். நாடாளுமன்றில் ஜனாதிபதியாக தெரிவாக, நான் வாக்களித்த எனது நண்பரும் ஐ.எம்.எப். எமது நாட்டுக்கு உதவிகளை செய்யாது எனக் கூறினார்.

இப்போது ஐ.எம்.எப். எமக்கான கடனுதவிகளை வழங்க முன்வந்தவுடன், எதிர்க்கட்சித் தலைவரினால்தான் இது சாத்தியமானது என்று கூறுகிறார்கள்.

இதிலிருந்தே இவர்கள் அரசியல் ரீதியாக எந்தளவு தெளிவுடன் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இவர்களிடம் ஆட்சி சென்றால், யாழில் எத்தனை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு மைதானங்கள் இருக்கிறது என்று கேட்ட நிலைமை தான் நாட்டுக்கும் ஏற்படும்.

இதுதொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும்” என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.