ஒருமித்த நிலைப்பாடு உள்ளக அரசியலில் தமிழ் மக்களுக்கு பலமாகும் இவ்வாறு இலக்கு இலத்திரனியல் இதழுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.
கேள்வி – தமிழ் மக்களது அரசியல் விவகாரங்களில் தமிழ்க் கட்சிகளிடையே பொது நிலைப்பாட்டைக் கொண்டு வருவதற்கான உங்களது முயற்சி தொடர்பாக விபரம் தருவீர்களா?
பதில் – தமிழ்த்தேசிய பரப்பிலே செயற்படுகின்ற தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் தலைமைகளுக்கு, இன்று அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டமிட்ட நடவடிக்கைகளால் தமிழினம் முகம் கொடுக்கக்கூடிய சிக்கல்களுக்கு எப்படியாக ஒருமித்த நிலைப்பாட்டில் நாங்கள் செயற்படுவது என்ற ஆரம்ப கட்ட கலந்துரையாடலை நடத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை 5ஆம் திகதி நாங்கள் ஒரு கோரிக்கையை ஞாயிற்றுக்கிழமை 7ம் திகதி மாலை 5 மணிக்கு அந்த கூட்டத்தை மெய்நிகர் இணையவழியினுடாக நடத்துவதற்கான அனுமதியை கோரியிருந்தோம். குறிப்பாக இன்று அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற காணி அபகரிப்பு, மாகாணசபை அதிகாரங்களை பறிக்கின்ற நடவடிக்கைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசாங்கத்தினுடைய தலையீடுகள் என்ற பல விடயங்களை நடைபெறுகின்றன. மேலும் அரசாங்கம் தற்போது தொல்லியல், வனவளத்துறை, சுற்றாடல், உல்லாசத்துறை, மகாவலி அபிவிருத்தி என்று பல கோணங்களில் காணிகளை அபகரித்து வருகிறது. இந்த விடயம் மாகாணசபை செயலில் இல்லாமல் இருக்கின்ற பொழுது மிகத் துரிதமாக மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விடயங்கள் என்னென்ன காரணங்களை அரசாங்கம் கூறினாலும், இறுதியில் குடியேற்றத்தை நோக்கியதாகவும் எங்களுடைய குடிப் பரம்பலை சிதைப்பதாகவும், எங்களுடைய வடக்கு கிழக்கு பூமியை துண்டாடும் நடவடிக்கையாகவும் தான் அமைந்திருக்கிறது. ஆகவே இதை நாங்கள் விரைவிலேயே தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இருப்பதனாலே தமிழ் தேசிய கட்சிகள் ஆரம்ப கட்டமாக, எந்தெந்த விடங்களில் நாங்கள் ஒருமித்துப் போக வேண்டும் என்பதை ஆராய்ந்து, அந்த விடயங்களில் ஒருமித்து பயணிப்பதற்காக ஒரு கலந்துரையாடலுக்காகத் தான் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் இந்த வாரம் நாங்கள் அந்த சந்திப்பை மேற்கொள்ளலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளும், பேச்சுக்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கேள்வி – முள்ளிவாய்க்கால் பேரவலம் நேர்ந்து 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் கூட, இந்தப் பொது இணக்கப்பாட்டைக் காண்பதில் எத்தகைய சவால்கள் உள்ளன?
பதில் – முள்ளிவாய்க்காலில் நிறைவடைந்த ஆயுதப் போராட்டத்தின் மௌனிப்பிற்குப் பின்னர் ஒருமித்த குரலில் மிகப் பலமான ஒரு சக்தியாக திகழ்ந்து கொண்டிருந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அதிலே தேர்தல் காரணங்களைக் காட்டியும், அதேபோன்று அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சியினுடைய ஆதிக்கம் அதிகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதாக காரணம் காட்டியும் மெதுவாக பிரிவினைகள் தோன்றியது. அதிலிருந்து ஒரு கட்சி வெளியேறியது. அதற்காக அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியால் அங்கத்துவக் கட்சிகளுக்கு உரிய கௌரவங்கள் வழங்கப்படவில்லை அல்லது அவர்களோடு பல விடயங்கள் கலந்துரையாடப்படுவதில்லை, தன்னிச்சையான செயற்பாடு, தன்னிச்சையாக முடிவு எடுப்பது என்ற விடயங்கள் கருத்து வேறுபாடுகளை தோற்றுவித்திருந்தன. அதற்குப் பின்னரும் சில அங்கத்துவ கட்சிகளினுடைய உறுப்பினர்களை உள்வாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குறிப்பாக இப்படியான கருத்து வேறுபாடுகளோடு ஈபிஆர்எல்எப் கட்சி வெளியேறியது. அதுபோன்று மற்றக் கட்சிகளுக்கும் அந்தப் பிரச்சினை இருந்தாலும்கூட தமிழ்த் தேசியம் இன்று முகம் கொடுத்திருக்கக்கூடிய பிரச்சினைகளில் நாங்கள் ஒற்றுமையாக இருப்பது தான் பலமாக இருக்கும் என்ற படியினாலே சகிப்புத்தன்மையோடும் விட்டுக்கொடுப்போடும் பயணிக்கின்ற ஒரு சூழ்நிலையில் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஒரு பலமான அமைப்பாக இருக்கிறது. இந்த கட்சிகளுக்கு இடையே இருக்கக்கூடிய விட்டுக்கொடுப்பு இன்மை, ஆதிக்க நிலைப்பாடு, தேர்தல் தழுவிய அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம், உதாசீனப் படுத்துவது போன்ற காரணங்கள்தான் இந்த கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணங்களாக பிரிந்து சென்ற கட்சிகளால் கூறப்பட்டிருந்தது. அவற்றை நாங்கள் திருத்திக் கொண்டு ஒரு ஒருமித்த குரலில் ஒன்றிணைந்த நிலைப்பாட்டிலே பயணிப்பது காலத்தின் தேவை.
கேள்வி – சிறீலங்கா அரசாங்கம் பல வகையிலும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்ற இன்றைய சூழமைவில் இந்தப் பொது இணக்கப்பாட்டின் அவசியத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் – சிறீலங்கா அரசாங்கத்திற்கு இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் இருந்து அவர்கள் வெளியேறியமை, மிகப்பெரிய ஒரு சிக்கலை அவர்களுக்கு உருவாக்கியிருக்கிறது. மனித உரிமை பேரவையை தாண்டி அதனுடைய அங்கத்துவ நாடுகள், மனித உரிமை விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உன்னிப்பாக செயலாற்றுகிறார்கள். உதாரணமாக ஜிஎஸ்பி சலுகை அதேபோன்று அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டு இருக்கின்ற ஒரு பிரேரணை மற்றும் குறிப்பாக 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற இந்தியாவின் அழுத்தம் என பல விடயங்களை குறிப்பிடலாம். சர்வதேசம் ஒருமித்த நிலையிலே இந்தவிடயங்களை கையாளுகின்ற பொழுது களத்தில் இருக்கக்கூடிய நாங்கள் பிரிந்து நிற்பதால் அந்த விடயங்கள் நீர்த்துப்போக அல்லது இலங்கை அரசாங்கம் அவற்றை சாதுரியமாக கையாள்வதற்கான வழிவகை ஏற்படுத்திவிடும். ஆகவே எங்களுடைய தேர்தல் நோக்கங்கள், அல்லது அரசியல் தீர்வு சம்பந்தமான நிலைப்பாடுகளிலே வித்தியாசம் இருந்தாலும், என்ன என்ன விடயங்களில் நாங்கள் பொது நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ள முடியும்? என்பதை ஆராய்ந்து, அந்த விடயத்திலாவது ஒருமித்து இருப்பது, இந்த நேரத்திலே இலங்கை அரசாங்கத்திடம் பல விடயங்களை பேரம் பேசக்கூடிய ஒரு சூழலை உள்ளக அரசியலிலே தோற்றுவிக்கும்.
கேள்வி – எந்த முயற்சியை யார் எடுத்தாலும் அந்த முயற்சியின் அவசியத்தையும் காலத்தேவையையும் கருத்தில் கொண்டு தேவையான கவனங்களோடு செயலாற்ற வேண்டியதின் அவசியத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் – சரியான நேரத்தில் சரியான நிலைப்பாடுகளை எடுத்து, எமக்கு வருகின்ற சந்தர்ப்பங்களை கையாளுகின்ற விதத்தில் தான் நாங்கள் எமது இனத்தினுடைய கோரிக்கைகளையும், அபிலாசைகளை வென்றெடுக்க முடியும். ஒரேயடியாக வென்றெடுக்க முடியாவிட்டாலும் கூட கட்டங்கட்டமாக நாங்கள் வென்றெடுக்க முடியும். இன்று ஏற்படுகின்ற ஒரு சாதகமான சூழல் சர்வதேச நாடுகளுடைய அல்லது இதில் அக்கறை கொண்டிருக்கின்ற நாடுகளினுடைய பூகோள நலன் சார்ந்த விடயம் என சிலர் குற்றம் சுமத்திஇருந்தாலும்கூட, அது எங்களுடைய தேசிய இனத்தினுடைய விடயங்களை அவர்கள் கையில் எடுத்திருப்பதை நாங்கள் சாதுரியமாக கையாள வேண்டும். அதுதான் ஒரு அரசியல் தலைமையினுடைய கடமையாக இருக்கும். பூகோளம் சார்ந்த விடயங்களில் குறிப்பாக த சீன தேசத்தின் சார்பாக இலங்கை அரசாங்கம் சாய்கிறது என்ற நிலைப்பாட்டிலே சர்வதேச நாடுகள் அக்கறை கொண்டிருக்கிறார்கள். இந்தியா எங்களுடைய அரசியல் தீர்வு சம்பந்தமாக அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றது. 13 இன் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று. அது எங்கள் தீர்வு இல்லா விட்டாலும், இருக்கக்கூடிய தற்போதைய நெருக்கடியில் இருந்து எங்களுடைய மக்களை காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும். அதே போன்று மனித உரிமை, நீதிப் பொறிமுறை, பரிகார நீதி என்ற விடயங்களை கவனத்தில் கொண்டு பொருளாதார நெருக்கடிகளை இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தற்போது பியோகிக்க முற்பட்டுள்ளனர். . சர்வதேச நாடுகளும் எமக்கு சார்பாக செயல்படுகின்ற பொழுது ப நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டிலே இருப்பதன் மூலம்தான் ஒரு பலமான சக்தியாக உள்ளக அரசியலில் செயற்படமுடியும்., இதை சரியான முறையில் பயன்படுத்தாமல் விட்டால், பாரியதொரு வரலாற்றுத் தவறினை எங்கள் இனத்திற்கு இழைத்தவர்களாகி விடுவோம்.
கேள்வி – இந்த இணக்கப்பாடு தமிழ்த் தேசிய நலனில் அக்கறை கொண்டுள்ள அரசியல் கட்சிகளைக் கடந்தும் ஏற்படுத்தப்படுமா? அதன் அவசியத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
இந்த கலந்துரையாடலில் முதலாவதாக இந்த அரசியல் தலைமைகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என்பது முக்கிய தேவை. இது தேர்தலுக்கான கூட்டாகவோ அரசியல் நலன் சார்ந்த விடயமாகவோ அல்லது பதவி நோக்கங்களோடு செயற்படுத்தப்படவில்லை.
அதையும் தாண்டி தமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சமூக அமைப்புக்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எங்களுடைய புலம்பெயர் உறவுகள், நேச சக்திகள் ஆகியோரையும் ஒருமித்து செயற்படுவதும் முக்கியம். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் தலைமைகளையும் ஆதரவு சக்திகளையும் எப்படி அரவணைத்து ஒருமித்த குரலாக செயற்படுவதற்கான வேலைத் திட்டங்களும் அவசியம். ஆரம்பகட்ட கலந்துரையாடல் நிச்சயமாக முன்னேற்றம் கண்டு, அதை தாண்டிய வெளி சக்திகளையும் இணைத்துக் கொண்டு பயணிக்க கூடிய ஒரு சூழல். உருவாக வேண்டும் என்பதுதான் ஒருமித்த நிலைப்பாட்டிற்கான கோரிக்கையின் பிரதான நோக்கமாக அமைந்திருக்கிறது.
சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் -ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு