வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் இலங்கையிலும் ஏனைய உலகநாடுகளிலும் தமது அன்பிற்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்குத் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமான நேற்று திங்கட்கிழமை, பாதிக்கப்பட்டவர்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருந்த பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
இன்று (நேற்று) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகும். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியாமலிருக்கும் நிலையில், இது அவர்களை நினைவுகூருவதற்கான தினமாக விளங்குகின்றது.
இலங்கையிலும் ஏனைய உலகநாடுகளிலும் தமது அன்பிற்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியய தருணம் இதுவாகும் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.