ஒருவாரத்துக்குள் 21 இன் இறுதி வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் : வட,கிழக்கு அரசியல் கட்சிகளை பங்கேற்குமாறு நீதி அமைச்சர் அழைப்பு

ஒருவாரகால இடைவெளியில் 21ஆவது திருத்தச்சட்டத்திற்கான வரைவு இறுதி செய்யப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகளும் பங்கேற்று தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள 21ஆவது திருத்தச்சட்டத்திற்கான வரைவினை தயாரித்தவரான அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயெ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்மொழியப்பட்டுள்ள 21ஆவது திருத்தச்சட்ட வரைவு குறித்து அனைத்துக்கட்சிகளினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டமொன்று நடத்தப்பட்டது. அந்தகூட்டத்தில் வடக்கு, கிழக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையானவை பங்கேற்கவில்லை.

இதனால், இறுதித் தீர்மானம் இன்றி குறித்த கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிறிதொரு கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இதன்போது, பெரும்பாலும் வரைவு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறான நிலையில் 6ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை அனுமதிக்காக குறித்த பத்திரம் சமர்ப்பிக்கப்பவுள்ளது என்றார்.