கச்சதீவு திருவிழாவில் இம்முறை இந்தியாவில் இருந்து பக்தர்கள் எவரும் பங்கேற்க வேண்டாம் என கச்சத்தீவு திருப்பயன ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை இந்திய பக்தர்களின் உறவு பாலமாக உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா இந்த ஆண்டு 23 மற்றும் 24 திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், சிறையில் உள்ள நான்கு இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.
அதனடிப்படையில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக படகுகள் இயக்கப்படாததால் இந்த ஆண்டு திருப்பயணத்தை ரத்து செய்வதாக கச்சத்தீவு திருப்பயன ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அந்த செய்தியில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய திருப்பயணிகள் தயவு செய்து கச்சதீவுக்கு பயணிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கொடுத்த பணத்தை விரைவில் திருப்பிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தெரிவித்தார் – எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.